புராஜக்ட் மேனேஜர் – 26

26

-சேவியர்

நவீனமாகும் புராஜக்ட் மேனேஜ்மென்ட்

இந்த வாரம் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறோம். இந்த தொடரை நீங்கள் தொடர்ந்து படித்து வருகிறீர்களெனில் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிய ஒரு நல்ல புரிதல் உங்களுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். மாறி வருகின்ற தொழில்நுட்பச் சூழலில் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் சந்திக்கின்ற மாற்றங்கள் என்ன என்பதுதான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் விஷயம்.

தொழில்நுட்ப உலகம் அதிவேகமாக வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த கொரோனா வைரஸ் மட்டும் இல்லையென்றால், தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு உலகை முழுமையாக ஆண்டுவிடலாம் என நாம் கற்பனை கொண்டிருப்போம். ஆனால் ஒரு வைரஸ் வந்து, தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சாத்தியமாகாத விஷயங்கள் என்னென்ன என்பதை நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, புராஜக்ட் மேனேஜ்மெண்டில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. தொழில்நுட்பத்தின் அடுத்தடுத்த நிலைகளை ஏற்றுக்கொண்டு மாற்றமடையாதபோது, புராஜக்ட் மேனேஜ்மெண்டும் தனது வலிமையை இழந்துவிடுகிறது. உதாரணமாக அஜைல் டெக்னாலஜி எனப்படும் புதிய முறை இன்று பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்துவிட்டது. அஜைல் என்பது ஒரு பெரிய பணியை சிறிது சிறிதாக உடைத்து, ஒவ்வொன்றையும் ஒரு புராஜக்டைப் போல குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்துவது.

இன்னும் சற்று விரிவாகப் பார்க்கவேண்டுமெனில், ஒரு புராஜக்டில் என்னென்ன செய்ய வேண்டும் எனும் பணிகளின் பட்டியலை (ரிக்கொயர்மெண்ட்) போட்டுவிட்டு, அதிலிருந்து சிலவற்றை எடுத்து ஒரு குட்டி புராஜக்ட்டாகச் செய்வது. இந்த குட்டி புராஜக்ட் கால அளவை ஸ்க்ரம் என்பார்கள். பல ஸ்க்ரம்கள் ஒரே நேரத்தில் நடக்கலாம். இதன் மூலம் புராஜக்ட் விரைவாக நடக்கும். இந்த முறையில் புராஜக்டில் பல மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கவும் முடியும்.

தற்போதைய தொழில்நுட்ப உலகம் கொண்டு வருகின்ற இன்னொரு மாற்றம் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வசதி. மிக முக்கியமான பணிகள் தவிர, மற்ற பணிகளை வீட்டிலிருந்தே செய்யலாம் எனும் வசதியை இன்றைய உலகம் அரவணைத்துக் கொள்கிறது. கொரோனோ போன்ற தாக்குதல்களின் காலத்தில், வீட்டிலிருந்தே பணி செய்யக்கூடிய நிறுவனங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. இப்படி வீட்டிலிருந்து பணி
செய்யும் சூழல்களில் புராஜக்ட் மேனேஜ்மெண்டும் அதற்கேற்ற வகையில் மாற்றங்களை கிரகித்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இத்தகைய சூழல்களில் மீட்டிங் எப்படி நடத்துவது? எல்லோரையும் இணைக்கும் வகையில் பயன்படுத்தவேண்டிய மென்பொருள் எது? நேரில் சந்திக்க முடியாத சூழல்களில் ஒரு கருத்தை விவாதிப்பது, அதை கையெழுத்திட்டு உறுதி செய்வது எப்படி? போன்ற விஷயங்களில் புராஜக்ட் மேனேஜர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எக்ஸ்ட்ரீம் ஆட்டோமேஷன் என அழைக்கப்படும் தீவிர ஆட்டோமேஷன் இன்றைக்கு நிறுவனங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. ஆட்டோமேஷன் பணிகளின் அதிகரிப்பு, புராஜக்ட் மேனேஜ்மெண்டிலும் மாற்றங்களைக் கொண்டுவரும். அத்தகைய ஆட்டோமேஷனை திட்டத்தில் இணைப்பது முதல், அதற்கான திட்டமிடலைச் செய்வது வரை புராஜக்ட் மேனேஜர் கவனம் செலுத்த வேண்டும்.

டேட்டா அனலிட்டிக்ஸ் நுட்பம் இப்போதைய ஹைலைட் தொழில்நுட்பங்களில் ஒன்று.

தகவல்களை வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனும் நுட்பம்தான் இது. உதாரணமாக நீங்கள் கிரிக்கெட் பார்க்கிறீர்கள். கோலி ஒரு சிக்ஸர் அடிக்கிறார். சில வினாடிகளிலேயே உங்களுக்கு அது சார்ந்த நிறைய தகவல்கள் அடுக்கடுக்காய்க் கிடைக்கின்றன. இவர் இதற்கு முன் அடித்த சிக்சர்கள் எத்தனை, இதே அணிக்கு எதிராக எத்தனை அடித்திருக்கிறார்? எந்த அணிக்கு எதிராக அதிகம் அடித்திருக்கிறார்? எந்த பவுலருக்கு எதிராக அடித்திருக்கிறார். எந்த வரிசையில் வரும்போது அடித்திருக்கிறார்? எந்த கிரவுண்டில் அடித்திருக்கிறார்? எத்தனை மீட்டர் தூரம் அடித்திருக்கிறார்? ஆஃப் சைடில் எத்தனை லெக் சைடில் எத்தனை ஸ்டெயிட் எத்தனை? இப்படி ஒரு அனுமர் வால்போல நீண்டுகொண்டே இருக்கிறது இல்லையா? இவை எல்லாமே டேட்டா அனலிட்டிக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்தான்.

தகவல்கள் அனைத்தையும் எடுத்து, அதை இன்டலிஜெண்ட் அல்காரிதம்கள் மூலமாக வகைப்படுத்தி தேவையான விஷயங்களைப் பெறுவதுதான் இதன் அடிப்படை. இப்படிப்பட்ட புராஜக்ட்களை நிர்வாகிக்கும்போது புராஜக்ட் மேனேஜர், தகவல்கள் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி தனது திட்டங்களை உருவாக்க வேண்டும். உதாரணமாக, தகவல்களைப் பொறுத்தவரை அது சென்சிட்டிவ் டேட்டாவா, பாதுகாக்கப்பட வேண்டியதா, குறியீடுகளாய் மாற்றப்பட வேண்டியதா போன்றவற்றை எல்லாம் புராஜக்ட் மேனேஜர் கவனமாய் பதிவுசெய்ய வேண்டும்.

ஆர்டிபீஷியல் இன்டலிஜெண்ட் எனப்படும் செயற்கை நுண்ணறிவியல் இப்போது பெரும்பாலான துறைகளில் நுழைந்துவிட்டது. மிக எளிய உதாரணமாக சேட் பாட்-களைச் சொல்லலாம். ஆட்டோமேட்டிக் தகவல்களைத் தரும் இத்தகைய சேட் பாட்கள் ஆர்டிபீஷியல் இன்டலிஜெண்ட் தொழில்நுட்பத்தில் மிகச் சிறிய உதாரணம். இப்படிப்பட்ட அட்வான்ஸ் தொழில்நுட்பங்களை இணைக்கும் புராஜக்ட்களை மேனேஜ்
செய்யும்போது புராஜக்ட் மேனேஜரின் பணி வித்தியாசப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆர்டிபீஷியல் இன்டலிஜெண்டை புராஜக்ட் மேனேஜ்மெண்டுக்கான மென்பொருட்களிலும் பயன்படுத்தலாம்.
இன்றைக்கு சுமார் 40 சதவீதம் பணியாளர்கள் ஏதோ ஒரு வகையில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜெண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்த செயற்கை நுண்ணறிவியல் வந்து தங்களுடைய வேலையை பறித்துக்கொள்ளும் எனும் பயம் 70 சதவீதம் மக்களிடம் இருக்கிறது. காரணம், சுமார் 80 சதவீதம் மக்கள் தங்களுடைய பணியை முழுமையாக, அல்லது பாதியையாவது ஆர்டிபீஷியல் இன்டலிஜெண்ட் தொழில்நுட்பம் செய்ய முடியும் என நம்புகின்றனர்.

ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸைப் போலவே தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்திருக்கும் இன்னொரு தொழில்நுட்பம்தான் மெஷின் லேர்னிங். இரண்டு மெஷின்கள் பேசிக்கொள்வதும், அவை சுயமாகவே என்ன செய்ய வேண்டும் எனும் பணிகளைக் கற்றுக்கொள்வதும் என இதை மிக எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். இந்த நுட்பத்தில் சென்சார்களின் பயன்பாடு மிக அதிக அளவில் இருக்கும். இத்தகைய புராஜக்ட்களைக் கையாளும்போது அதற்குரிய தொழில்நுட்ப அனுவத்தையும், அணுகுமுறையையும் கொண்டுவர வேண்டியது அவசியம்.

பழைய காலங்களைப்போல எல்லா புராஜக்ட்டுக்கும் ஒரே மாதிரியான திட்டம் என்பது இனிமேல் ஒத்து வராது. ஒவ்வொரு புராஜக்டுக்கும் தக்கபடி திட்டங்களை உருவாக்க வேண்டியது மிக மிக முக்கியம். புராஜக்ட் மேனேஜ்மெண்ட் உலகில் அதை “ஹைபிரிட் அப்ரோச்” என்கிறார்கள். இதுல கொஞ்சம், அதுல கொஞ்சம் என கலந்த கலவைதான் இந்த ஹைபிரிட் அப்ரோச் என்பது. அடிப்படையான புராஜக்ட் மேனேஜ்மெண்ட் சிந்தனைகள் இதிலும் இருக்கும். ஆனால் அத்துடன் இன்னவேஷன், புதுமை போன்றவையெல்லாம் கலந்திருக்கும். புராஜக்ட்களைப் போலவே புராஜக்ட் மேனேஜர்களும், அவர்களுடைய புராஜக்ட் மேனேஜ்மெண்ட் திட்டங்களும் மாற்றங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் எதிர்பார்ப்பு.

சமூக வாழ்வியல் மாற்றங்கள் பணியாளர்களின் தனி வாழ்விலும் பல மாற்றங்களைக் கொண்டு வருகிறது. பல்வேறு அழுத்தங்கள், குழப்பமான சூழல்கள் போன்றவற்றில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்பதை ஒரு புராஜக்ட் மேனேஜர் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.

இத்தகைய சூழலில் புராஜக்ட் மேனேஜர்களுக்கு ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ மிகவும் முக்கியமானதாகிறது. பணியாளர்களை அவர்களுடைய வாழ்க்கைச் சூழலுடன் புரிந்து கொள்வதுதான் இது. இதுவும் புராஜக்ட் மேனேஜருக்கு இன்றைய சூழலில் மிக முக்கியமானதாகிறது.

– திட்டமிடுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here