குப்பையில் உருவாகுது பள்ளி பெஞ்சுகள்!

19

-சுந்தரபுத்தன்

மும்பையில் ஆண்டொன்றுக்கு 750 டன் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் ஒரு குடும்பத் தலைவியின் கதை
அது 2012 ஆம் ஆண்டு. கோ கிரீன் வித் டெட்ரா பேக் என்ற திட்டத்தின்கீழ் ‘கார்டன்ஸ் லி ஆவோ, கிளாஸ் ரூம் பனாவ்’ என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.அப்போது மக்களால் பயன்படுத்தப்பட்ட பழைய அட்டைப் பெட்டிகள் மறு சுழற்சி மூலம் பெஞ்சுகளாக தயாரிக்கப்பட்டு அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. அதன் பின்னணியில் நடந்தது ஒரு சுவாரசியமான கதை.

ஒரு அம்மாவாக தொழில் முனைவோர் மோனிஷா நார்கே, சுற்றுச்சூழல் அக்கறையுடன் அட்டைப்பெட்டிகளை மறுசுழற்சி செய்வதைத் தொடங்கினார். அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே, தன் குழந்தைக்கு சுற்றுச்சூழல் மாசுகளால் ஏற்பட்ட தாக்கத்தைக் கவனித்தார். “என் மகள் தொடர்ந்து இருமிக்கொண்டே இருப்பாள். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.

அவளுக்கு நான்கு வயதுதான்.

நான் எந்த விதமான மருந்துகளையும் கொடுக்க விரும்பவில்லை. பதிலாக, அந்தப் பிரச்சினையை முழுமையாக தீர்க்க விரும்பினேன்” என்று நினைவுகூர்கிறார் 45 வயதான மோனிஷா.

காற்று மாசுபாடுதான் ஒவ்வாமையும் இருமலும் வருவதற்குக் காரணமாக இருப்பதை அறிந்தார். பலரும் பங்களிப்புகளைச் செய்தால், குப்பைகளைக் கொட்டுவது மற்றும் எரிப்பதன் மூலம் உருவாகும் சூழல் பிரச்சினைகளை வீட்டிலேயே தீர்த்துவிடமுடியும் என்பதை மோனிஷா உணர்ந்தார். “குப்பைகளை எரிப்பதால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேற்றப்படுவதும், காற்றில் உள்ள துகள்களின் அளவு அதிகரிப்பதும் மக்களின் உடல்நலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக முடிகிறது. இந்தப் பிரச்சினையை நம்மால் நிச்சயமாக சமாளிக்கமுடியும் என்று நம்பினேன். எனவே, மாற்றம் வீட்டிலேயே தொடங்கப்படவேண்டும்” என்கிறார்.

மற்றவர்களுக்கு உதாரணமாக, முதலில் தன் வீட்டில் குப்பைகளை தரவாரியாக பிரிக்கத் தொடங்கினார் மோனிஷா. குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் அமைப்புகளுடன் தொடர்புகொண்டு, அதன் நுட்பத்தைக் கற்றுக்கொள்ளவும் தயாரானார். “நான் தயாரித்த முதல் உரத்தைக்கொண்டு என் வீட்டில் ஜன்னலோரம் முளாம்பழச் செடியை வளர்த்தேன்.இயற்கையின் அதிசயத்தைப் பார்த்து உற்சாகமடைந்தேன். இப்படி சிறு அளவிலான குப்பைகளைக் கொண்டு எவ்வளவு லாபம் பெறமுடியும் என்று யோசித்தேன். எண்ணற்ற வீடுகளில் குப்பைகளை தரம் பிரிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டால், எந்த அளவு பலன் கிடைக்கும் கற்பனை செய்து பாருங்கள்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் மோனிஷா.

தனது மகளின் பள்ளியைச் சேர்ந்த அம்மாக்களுடன் அவர் பேசினார். இதேபோன்ற கவலைகளை அவர்களும் பகிர்ந்துகொண்டனர்.

இந்த அம்மாக்கள் அனைவரும் கைகோர்த்து 2009 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் RUR என்ற ஒரு தன்னார்வக் குழுவைத் தொடங்கினார். ஆர் யூ ரெடியூஸ்டு, ஆர் யூ ரீயூசிங், ஆர் யூ ரீசைக்ளிங் என்ற வார்த்தைகளின் சுருக்கம்தான் ஆர்யூஆர்.

கடந்த பத்தாண்டுகளில், அந்த குழுவினால் ஏற்பட்ட விளைவுகள் அபாரமானவை. இதுவரை தன்னார்வ குழுவினர், ஆண்டுதோறும் 750 டன்கள் குப்பைகளை மறுசுழற்சி செய்துள்ளனர்.

80 டன் மதிப்புள்ள கார்பன் டை ஆக்ஸைடை குறைத்துள்ளனர். பயிற்சிப் பட்டறைகள் மூலம் முப்பது லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு உரம் தயாரிப்புப் பற்றி கற்பித்துள்ளனர். நூறு இடங்களில் உயிர் உரத் தயாரிப்பைத் தொடங்கி, 200 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அனைத்து வழிகளையும் தன்னார்வக் குழுவினர் பயன்படுத்தினர். சுற்றுச்சூழல் சந்தை, விழிப்புணர்வு முகாம்கள், உரம் தயாரிப்புப் பயிற்சி என வீட்டிலேயே செய்யக்கூடிய அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்தினர். நகர்ப்புறங்களில் கழிவுகள் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதையும் பார்வையிட்டார்கள். அப்படியொரு ஆசியாவின் மிகப்பெரிய குப்பைகள் கட்டும் தியோனார் நிலப்பரப்பு மும்பையில் இருந்தது. “கழிவுகள் மலைபோல் குவிவதைக் குறைக்க மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு எளிய, புதுமையான தீர்வுகள் தேவை என்பதை நான் உணர்ந்தேன்” என்கிறார் மோனிஷா.

கடந்த 2010 ஆம் ஆண்டு, தன்னுடைய விழிப்புணர்வு முயற்சிகளை ஒரு சமூகத் தொழில் நிறுவனமாக மாற்ற முடிவெடுத்த மோனிஷா, கிரீன்லைப் நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதன்கீழ், பரவலாக்கப்பட்ட மற்றும் நிலையான கழிவு மேலாண்மைத் தீர்வுகளைக் கண்டடைய விரும்பினார். அவருடைய தன்னார்வக் குழு உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் மோனிஷாவின் நிறுவனத்துடன் இணைந்துகொண்டார்கள். இந்த நிறுவனம் கழிவு மேலாண்மை தொடர்பான பயிற்சிப் பட்டறைகளை மும்பையில் குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தியது.

பின்னர் அவர்கள் டெட்ரா பேக் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து கோ கிரீன் வித் டெட்ரா பேக் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்கள். மும்பை முழுவதும் உள்ள சஹாகரி பாந்தர் மற்றும் ரிலையன்ஸ் ப்ரெஷ் போன்ற பெரிய ரீடெய்ல் கடைகளுக்கு அருகில் பயன்படுத்தப்பட்ட அட்டைப்பெட்டிகளைச் சேகரிக்கும் மையங்களைத் திறந்தார்கள். அந்தப் பெட்டிகள் பிறகு மறுசுழற்சி செய்யப்பட்டு பள்ளிகளுக்கான டெஸ்க், பூங்காக்களுக்கான பெஞ்சு, பேனா ஸ்டான்ட், ட்ரே மற்றும் பிற தயாரிப்புகளாக உருவாக்கப்பட்டன.

சிறுபிராயம் முதலே ஒரு பொறியாளராக வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தார் மோனிஷா. தந்தை ஒரு பொறியியல் தொழில் முனைவோராக சொந்த நிறுவனம் வைத்திருந்தார். சகோதரரும் ஒரு பொறியாளர் தான். தந்தையின் தொழிற்சாலைக்கு அடிக்கடி சென்று எந்திரங்களின் செயல்பாடுகளைப் பார்த்துவந்த மோனிஷா, ஒரு பொறியாளர் ஆவதையே லட்சியமாக வைத்திருந்தார். மும்பையில் பிஇ முடித்ததும் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் மாஸ்டர் படித்தார்.

பின்னர், 1998 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பணி. அடுத்து, தன் தந்தையாரின் என்ஜினீயரிங் நிறுவனத்தில் இணைந்தார். கழிவு மேலாண்மை தொடர்பான பணிகளில் முழுமையாக ஈடுபட சொந்த நிறுவன வேலையில் இருந்து விலகினார். பழைய அட்டைப் பெட்டிகளை மறுசுழற்சி செய்து பயன்பாடுள்ள தயாரிப்புகளை உருவாக்கும் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். மோனிஷா ஓய்ந்திருக்கவில்லை. பெரிய அளவில் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும் இடங்களுக்கும், அது தொடர்பான கருத்தரங்குகளுக்கும் சென்று அனுபவத்தைச் சேர்த்துக்கொண்டார். மறுபுறம் பழைய அட்டைப் பெட்டிகளை பயன்படும் தயாரிப்புகளாக மாற்றும் ஆய்வுகளையும் செய்தார்.

“நகராட்சி அமைப்புகள் குப்பைகளைச் சேகரித்தாலும், அவை எளிதில் வெளியேற்றப் படுகின்றன என்று உறுதியாக நம்பமுடியாது. இந்த எதார்த்த நிலையை மக்கள் உணர்வதில்லை.

ஆனால், கழிவுகள் அவர்களது வீட்டின் வாசலில் இருந்து சேகரிக்கப்படுவதால், மையப்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை மாதிரிக்கு இதுவொரு சுலபமான வழியாகும். தங்கள் வீட்டுக் குப்பைகளைக் கொட்டுவதற்கு அவர்கள் கூடுதல் தூரம் செல்ல விரும்புவதில்லை” என்று மோனிஷா விவரிக்கிறார்.

இதுவரையில் பள்ளிகளுக்கு 150 டெஸ்க்குகளும், பூங்காக்களுக்கு 260 பெஞ்சுகளும் நன்கொடையாக வழங்கப் பட்டுள்ளன. நன்கொடை பெற்ற பள்ளிகளில் ஒன்றுதான் பாந்த்ராவில் உள்ள சுபாரி டேங்க் பஞ்சாயத்துப் பள்ளி. தலைமை ஆசிரியர் மாதுரி பிரான்சிஸ் டிசௌசா, “எங்கள் குழந்தைகள் அதிக உற்சாகத்துடன் இருக்கிறார்கள். ஒவ்வொரு பையனும் ஒன்று அல்லது இரண்டு பழைய அட்டைப் பெட்டிகளையாவது சேகரித்து விடுகிறார்கள். இதனால் குழந்தைகளின் மனப்போக்கே நிறைய மாறியிருக்கிறது” என்கிறார்.

இன்று மும்பையில் பழைய அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்கும் 44 பொது சேகரிப்பு மையங்களும், குடியிருப்புகள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் 180 தனியார் சேகரிப்பு மையங்களும் செயல்படுகின்றன. புனேயில்கூட ரிலையன்ஸ் ப்ரெஷ் கடைகளுக்கு அருகே சேகரிப்பு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் இருந்து மறுசுழற்சி மையங்களுக்கு அட்டைப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு காம்போசைட் சீட்டுகளாக மாற்றப்படுகின்றன. பின்னர் அவை அழகிய பேனா ஸ்டான்ட்கள், போட்டோ பிரேம்கள், பெஞ்சுகளாகக்கூட உருவாக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here