நீங்கள் டிசைனிங் கலைஞராக விரும்புகிறீர்களா?

36

-பாரதிபாலன்

உலகின் தலைசிறந்த ஒவியக் கலை மற்றும் வடிவமைப்புக் கல்வி நிறுவனங்கள் பற்றிய அறிமுகம் ராயல் காலேஜ் ஆப் ஆர்ட் (ஆர்.சி.ஏ), லண்டன் தற்போது உலகம் முழுவதும் இளம் மாணவர்களிடம் ஓவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலைகள் மற்றும் வடிவமைப்புக் கலை குறித்துப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துவருகிறது.

படைப்பாற்றல் சிந்தனையும் கலைத்திறனும் கொண்டவர்கள் மிக எளிதாக வெற்றிபெற முடியும். உலகம் முழுவதும் கலைகளின் நுட்பம் கற்றவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கலையில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்ட மாணவர்கள் படிக்கும்போது சிறந்த வேலைவாய்ப்பும் உலக அளவிலான புகழும் அவர்களுக்குக் கிடைக்கும்.

ஓவியம், அரங்கக் கலை, வடிவமைப்பு, ஸ்டுடியோ கலை வடிவமைப்பு, புகைப்படக்கலை, கணினி வடிவமைப்புகலை, அனிமேசன், கிராஃபிக் டிசைன், அச்சுத் தொழில்நுட்பம், ஆடை அணிகலன் வடிவமைப்பு, நிகழ்த்துக்கலை வடிவமைப்பு, உற்பத்திப் பொருட்களின் வடிவமைப்பு, கையடக்கக் கருவிகளில் இருந்து கார் வரையிலான பொருள்களின் வடிவமைப்பு, அத்துடன் திரைப்படம் ஆவணப்படம், விளம்பரப் படங்கள், சமூக ஊடக வெளிப்பாட்டு வடிவமைப்புகள் என கலை வெளிப்பாடுகளின் எல்லைகள் விரிந்துகொண்டே போகின்றன.

சான்றிதழ், பட்டயம், பட்டம், முதுகலைப் பட்டம், ஆராய்ச்சிப் படிப்பு வரை செல்லலாம். தமிழகத்தைக் கடந்து இந்தியாவையும் தாண்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கலைப் படிப்புகளும் கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பைப் பெறும்போது மேம்பட்ட கலை நுட்பங்களைக் கற்பதுடன், உலகளாவிய தொடர்புகளையும் மாணவர்கள் பெறமுடியும்.

உலகத் தரவரிசைப்பட்டியலில் தொடர்ந்து முதல் பத்து இடங்களைப் பெற்றுவரும் ஓவியம் மற்றும் வடிவமைப்புக் கலைக் கல்லூரிகளைப் பற்றிப் பார்ப்போம்.

ராயல் காலேஜ் ஆப் ஆர்ட் (ஆர்.சி.ஏ). லன்டன்

உலகத் தரவரிசைப்பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. கலை மற்றும் வடிவமைப்பு தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படிப்பதற்கு மிகச்சிறந்த கல்லூரி. கலை மற்றும் வடிவமைப்பு தொடர்பாக 24 பாடப்பிரிவுகளை வழங்குகிறது. அதன் கீழ் ஆறு கலைக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் கட்டடக்கலை வடிவமைப்புகள், நுண்கலை, தகவல்தொடர்பு, கமர்ஷியல் கலை ஆகிய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. 60க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்துவருகிறார்கள். இங்கே படிக்கின்ற அனைவருமே உடனடியாக புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி), அமெரிக்கா

பல்வேறு வகையான கலைப் படிப்புகளுக்கு மிகச்சிறந்த கல்வி நிறுவனம். இக்கலை நிறுவனத்தில் முழுநேரமாகச் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகம், வெல்ஸ்லி கல்லூரி மற்றும் மாசசூசெட்ஸ் வடிவமைப்புக் கல்லூரி ஆகியவற்றில் இணையாகப் படிக்கக் கூடிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. உலகத்தரமான அரங்குகள். ஆய்வகங்கள் இந்த கல்வி நிலையத்தின் சிறப்பு அம்சம். இங்கு படிப்பதற்கு இடம் கிடைப்பது மிகவும் போட்டி நிறைந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது 150 இடங்களுக்கு 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய நிலை.

ரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைன் (RISD), அமெரிக்கா

இயற்கை எழில் நிறைந்த மலை அடிவாரத்திற்குக்கீழ் அமைந்திருப்பதால் அதிக அளவிலான மாணவர்கள் விரும்பிச் சேரும் கல்வி நிறுவனமாக உள்ளது. இந்தக் கல்லூரியில் திரைப்பட அனிமேஷன், ஓவியக்கலை, கிராஃபிக் டிசைன், தொழில்நுட்ப வடிவமைப்பு போன்ற படிப்புகளுக்கு புகழ்பெற்றது. இங்கு மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் உலகின் சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். இங்கே படிக்கும் மாணவர்களில் 40 சதவீதம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.

பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைன், அமெரிக்கா

உலகத் தரவரிசை பட்டியலில் 2015ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற கலைக் கல்வி நிறுவனம். 2017இல் நான்காவது இடத்தைப் பிடித்தது. தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பெற்றுவருகிறது. உலக அளவில் கலைப் படிப்புகளுக்கான சிறந்த தேர்வாகக் கருதப்படும் இந்தக் கல்வி நிலையம், முப்பதுக்கும் அதிகமான படிப்புகளை ஐந்து வளாகங்களில் வழங்கிவருகிறது. வடிவமைப்பு வரலாறு மற்றும் கோட்பாடு, கலை மற்றும் ஊடகத் தொழில்நுட்பம், கட்டமைக்கப்பட்ட சூழல், வடிவமைப்பு உத்திகள், பேஷன் டிசைன் என ஐந்து வகையான தனித்தனி நிறுவனங்கள் தனித்தனி வளாகங்களில் அமைந்துள்ளன. இங்கு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கலைப் பல்கலைக்கழகம்(UAL), லண்டன்

இந்தக் கல்வி நிறுவனம் லண்டன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கலை வடிவமைப்பு பேஷன் டிசைன், ஊடகம், தகவல்தொடர்பு, நிகழ்த்துக்கலை போன்ற படிப்புகள் ஆறு கல்லூரிகளின் வாயிலாக வழங்கப்படுகின்றன. உலகத் தரமான கலைக் கல்வி நிறுவனங்களில் இந்தப் பல்கலைக்கழகமும் இடம்பெறுகிறது. குறைவான கட்டணம். வளமான கல்வி என்பதுதான் கொள்கை. எனவே குறைந்த செலவில் கல்வி பெற விரும்புகிறவர்களுக்கு சரியான தேர்வாக அமையும். இங்கு 130க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்துவருகின்றனர்.

பிராட் நிறுவனம், அமெரிக்கா

உலகத் தரவரிசையில் தொடர்ந்து முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுவிடுகிறது. கட்டடக்கலை, கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட 4 தனித்துவமான கல்விப் புலங்களில் 27 பாடப்பிரிவுகளை வழங்கிவருகிறது. ஒரு துறையில் படிக்கும் மாணவர்கள் பிற துறை அறிவுவையும் இணைந்தே பெறும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது கல்வி நிறுவனத்தின் சிறப்பாகும். இங்கு 80க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

சிகாகோ கலைக்கல்வி நிறுவனம், அமெரிக்கா

இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை வழங்கிவருகிறது. கோட்பாட்டு நிர்வாகம், திரைப்படம், வடிவமைப்பு, பேஷன் டிசைன் போன்ற படிப்புகள் தனித்துவத்தோடு கற்பிக்கப்படுகின்றன. இங்குள்ள பாடத்திட்டம் முற்றிலும் மாறுபட்டது. அதாவது ஒருவரை முழு கலைஞராக பரிமளிக்கச் செய்யும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கலைஞனின் வாழ்வில் அன்பு, மனிதநேயம், அறிவியல், கணிதம் ஆகிய அனைத்தும் சார்ந்த அறிவும் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது. உலகில் தலைசிறந்த வல்லுனர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஆயிரம் மாணவர்கள் வரை சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி உதவித் தொகையும் உண்டு.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா

அறிவியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களில் உலகத்தரமான கல்வி நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது. இதனை ஏற்கெனவே நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்தக் கல்வி நிறுவனம் மிகவும் விருப்பத்தோடு கல்வி வழங்குவது ஓவியக் கலை மற்றும் வடிவமைப்புப் பாடங்களைத்தான். இங்கு பயிலும் மாணவர்களில் 80 சதவீதம் பேர் உதவித்தொகையுடன் படிக்கும் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். அதன் காரணமாக அதிக அளவிலான வெளிநாட்டு மாணவர்கள் இங்கு சேர்கிறார்கள். அதிக கட்டுப்பாடுகள் இல்லாமல் மாணவர்கள் சுதந்திரமாக படிக்கும் வாய்ப்புகள் நிறைந்த கல்வி நிலையம்.

யேல் பல்கலைக்கழகம், நியூ ஹேவன், அமெரிக்கா

உலகத்தரம் வாய்ந்த கலை மற்றும் வடிவமைப்புப் பாடங்களை வழங்கும் முன்னோடி கல்வி நிறுவனம். லிபரல் ஆர்ட்ஸ் நிகழ்வுகளையும் தொடர்ந்து நடத்திவருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் பல்துறை அறிவினைப் பெறும் நோக்கில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தனித்
திறமைகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. உலகின் தலைசிறந்த கலைஞர்களிடமிருந்து கல்வி பெறும் வாய்ப்பை மாணவர்கள் பெறமுடியும்.

பாலிடெக்னிகோ டி மிலானோ, இத்தாலி

இத்தாலியில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளைத் தவிர வேறு நாடுகளிலிருந்து உலகத்தர வரிசையில் இடம்பெற்ற ஒரே கல்வி நிறுவனம் இதுதான். கலைப்புலப் படிப்புகளை வழங்குவதில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு படிக்கும் பட்டதாரிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. பாடங்கள் ஆங்கில வழியில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

கட்டுரையாளர்: எழுத்தாளர், கல்வியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here