ஆன்லைன் வழியாக எப்படி கற்பிக்கிறேன்?

16

ஊரடங்கு நாட்களில் பள்ளி மாணவர்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் வாட்ஸ்ஆப், ப்ளாக் மற்றும் யூ டியூப் வழியாக பாடங்களுக்கு வழிகாட்டிய அனுபவங்களை திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி ராஜா பகிர்ந்துகொள்கிறார்.

எனக்கு கடந்த 25 ஆண்டுகளாக ஓய்வுநேரத்தில் ஒரே வேலைதான். அது என் மாணவர்களுக்கு விடுமுறை முடிந்ததும் கற்பித்தலுக்காக முன்தயாரிப்பு செய்வது. சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம், பாடங்களை நோட்டுப்புத்தகத்தில் குறிப்பெடுத்து வைப்பேன். பள்ளிக்குச் சென்றதும் அவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்துவேன். அதில் வெற்றியும் கண்டுவருகிறேன். பொதுவாக என்னை 24 X 7 ஆசிரியை என்று நண்பர்கள் அழைப்பார்கள். “உங்களுக்கு வாழ்க்கையை அனுபவிக்கவே தெரியவில்லை. வீட்டுக்கு வந்தால் பள்ளியை மறந்துவிட வேண்டும்” என்று கடிந்துகொள்வார்கள்.

அன்றாட வாழ்க்கையில் எந்த இடத்திலும் ஏதோ ஒரு நொடியில் மாணவர்கள் நினைவு வந்துகொண்டே இருக்கும். இப்போதும் அப்படித்தான். என்ன, கற்பிக்கும் முறை மட்டும் சற்று மாறியிருக்கிறது. மாணவர்களுக்ககாக தொடர்ந்து ஆன்லைன் தேர்வுகளைத் தயாரித்துவருகிறேன். இந்த அனுபவத்தில் புதுப்புது விஷயங்களை நானும் கற்கிறேன். மாணவர்களுக்கு புதிதாக ப்ளாக் தொடங்கியுள்ளேன். அதில் தினமும் புதிதாக ஆன்லைன் கொள்குறிவகைத் தேர்வுகளையும், சிறு தேர்வுகளையும் வைக்கிறேன். அதன்மூலம் மாணவர்களும், ஆசிரிய நண்பர்களும் பயன்பெறுகின்றனர். நான் தயாரித்த வினாக்களை, மற்றவர்கள் நடத்தும் ப்ளாக் மற்றும் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும் அனுப்புகிறேன்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டதைப் பற்றி சிலர், ஏழைக் குழந்தைகளுக்கு வாய்ப்பில்லையே? என்று வருத்தப்பட்டனர். என் பிள்ளைகளுக்கு பாரபட்சமில்லை. அலைபேசியில் அனைவருக்கும் பகிர்கிறேன். ஆன்லைன் தேர்வில் எந்த கட்டாயமும் இல்லை. விரும்புபவர்கள் எழுதலாம்.
சான்றிதழ் பெறலாம்.

பரிசுகளும் உண்டு. தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் புதுமையாக இருப்பதும், எந்தக் கட்டாயமும் இல்லாமல் படிப்பதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நான் ஆன்லைன் தேர்வுகளுக்கான லிங்குகளை ப்ளாக்கில் சேமித்துவைக்கிறேன். சமீபத்தில் அதில் ஒரு மாணவன் கமெண்ட் செய்திருந்தான். ஆச்சரியப்பட்டேன். காரணம், அவன் என் வகுப்பின் மிக மெல்லக் கற்கும் மாணவர்களில். ஒருவன். ப்ளாக் என்றால் என்னவென்றே அறியாதவன். மெயில் ஐ.டி ஒன்றைப் பயன்படுத்தி தன்முனைப்புடன் தேர்வு எழுதுகிறான். அடுத்த ஆண்டு இந்த ஆசிரியை நமக்கு வரப்போவதில்லை. அதனால் எந்தப் பயமும் தேவையில்லை. ஆனாலும் தேர்வெழுதி கருத்தும் பதிவு செய்கிறான். இந்த உணர்வை என்னென்பது?

தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம் அமைப்பினர் “உங்களுடைய படைப்புகள் நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள்” என்று பாராட்டினர். இது ஆசிரியர்களுக்கான மேடை. நம்முடைய கற்பித்தலுக்கான வீடியோ, ஆடியோ, பிபிடி, ஆன்லைன் டெஸ்ட், வேர்டு பைல்ஸ் போன்ற படைப்புகளை யார் வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம். சிறப்பான பங்களிப்பு செய்தவருக்கு சான்றிதழ் அளித்து மரியாதை செய்கிறார்கள். நான் வரிசையாக சான்றிதழ்களைக் கண்டதும் மகிழ்ந்தேன். இது மாநில அளவில் சிறந்த ஆசிரியையாக அவர்கள் வழங்கிய அங்கீகாரம் அல்லவா.

கிராமம், நகரம் என வேறுபாடே இல்லாமல் சிறிது நேரம் இப்படி பயனுள்ள வகையில் என் மாணவர்களையும் சக ஆசிரியர்களையும் வைத்திருப்பதில் எனக்கு எப்போதும் பெருமிதம்தான்.

தொகுப்பு: சுந்தரபுத்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here