வாவ் ஐந்தறிவு – 40

22

– ராஜேஷ் குமார்

விலங்குகளின் விந்தை உலகம்!

சின்னஞ்சிறு ஸ்பின்னிங் மில்

ஒரு நூற்பாலை செய்யும் வேலையை ஒரு சிலந்திப்பூச்சி அநாசயமாக செய்துகொண்டிருக்கிற பணியை பூச்சியியல் வல்லுநர்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக வியப்போடு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மனிதர்கள், எந்திரங்கள் நூற்கும் நூலிழையில்கூட வித்தியாசம் வந்துவிடும். ஆனால் சிலந்தி பின்னும் நூலிழையில் 0.0001 சதவீதம் கூட வித்தியாசம் வராது என்கிற உண்மையை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

உலகிலேயே சிலந்தி பின்னும் நூலிழைதான் மிக மிக லேசானது என்கிற உண்மையை கின்னஸ் விருதுக்கு அனுப்பி வைத்தால், கின்னஸ் அவார்டு அமைப்பு எதிர் வார்த்தை, மறு வார்த்தை பேசாமல் விருதை வழங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும். இதன் நூலிழையின் மென்மை எந்த அளவுக்கு உள்ளதென்றால், இந்த பூமி உருண்டையைச் சுற்றிவரும் நீளத்திற்குத் தேவையான இழையை எடை போட்டால் 250 கிராம் கூட தாண்டாத அளவுக்கு அவ்வளவு ஸாஃப்ட். இதன் காரணமாகவே சிலந்தியை நூலாம்பூச்சி என்றும், சிலந்தியின் வலையை நூலாம்படை என்றும் மக்கள் கூறுவார்கள்.

அரானியேடா (ARANEIDA) என்ற பிராணியியல் வகுப்பைச் சேர்ந்த இந்த சிலந்திகளில் இருபெரும் பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவின் பெயர் லபிடோக் நாத் (LABIDOG NATH). இன்னொரு பிரிவின் பெயர் ஆர்தோக் நாத் (ORTHOG NATH).

இதில் ‘லபிடோக்நாத்’ வகையைச் சேர்ந்த சிலந்தி இனத்திற்கு மட்டுமே சிலந்தி வலையைப் பின்னத் தெரியும். இந்த இனத்தைச் சேர்ந்த சிலந்திகள் மட்டும் விதவிதமாய் வலை பின்னுவதில் வல்லமை பெற்றுத் திகழ்கின்றன. அதிலும் மனிதர்கள், விலங்குகள் நடமாட்டம் இல்லாத பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வலை பின்னும். அந்தப் பகுதிகளில் எதுமாதிரியான பூச்சிகள் வலையில் மாட்டும் என்பதையும் அவை தெரிந்துவைத்திருப்பதால், அந்தப் பூச்சிகள் வலையில் மாட்டினால் தப்பித்துப் போகாத அளவுக்கு அகலமாகவும், நீளமாகவும் இழைகளைப் பின்னி வைத்திருக்கும்.

சிலந்தியின் இன்னொரு இனமான ‘ஆர்த்தோ நாத்’ சிலந்திகளுக்கு வலை பின்ன தெரியாது. எனவே அவை நேரிடையாகவே பூச்சிகளின் மேல் பாய்ந்து கவ்விப்பிடித்து இரையாக்கிக் கொள்கின்றன.

அப்ஜக்ஷன் யுவர் ஆனர்

சிலந்திகள் உலகம் முழுவதும் 45 ஆயிரம் வகைகளோடு ஒரு பெரிய ராஜாங்கத்தையே நடத்திக்கொண்டிருக்கின்றன. ஒரு குட்டிச்சுவரின் மூலை முதல், மலை, மரம், பாறை இடுக்குகள், இருண்ட குகைகள் போன்ற எல்லாவற்றிலும் கூட்டம் கூட்டமாய் வசிக்கின்றன. அலைகள் இல்லாத கடலின் மேற்பரப்பின்மீது கூட லாவகமாய் நடந்து சென்று பூச்சிகளைப் பிடித்து உண்ணும் சிலந்திகளும் உண்டு.

இப்படிப்பட்ட சர்வ வல்லமை படைத்த சிலந்திகள், நினைத்தே பார்க்கமுடியாத நிறங்களில், விதவிதமான அளவுகளில், அந்தந்த நாடுகளின் பருவநிலைக்கு ஏற்ற மாதிரி வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்த உயிரினம் தன்னிடம் சில அதிசயமான விஷயங்ளை வைத்து இருந்ததால், பூச்சியியல் ஆய்வாளர்கள் சிலந்தியை பூச்சியினத்தில் சேர்க்க, கருத்தரங்குகளில் ஆட்சேபணை தெரிவித்தார்கள். காரணம் சிலந்திக்கு எட்டு கால்கள் இருந்தது போலவே எட்டுக் கண்கள் இருந்ததுதான். போதாதக் குறைக்கு வாயின் முன்புறம் உள்ள ‘செலிச்சிரே’ (CHELICERAE) கொடுக்குகளில் விஷமும் இருந்த காரணத்தினால், சிலந்தியை எந்தத் தொகுப்பில் சேர்ப்பது என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு விவகாரம் நடந்து, கடைசியில் ‘அரானியேடா’ என்ற பூச்சியினத்தோடு இணைத்தார்கள்.

உடற்கூறு அடிப்படையில் சிலந்திகள் மற்ற பூச்சிகளைப்போல் இல்லாமல் இரண்டு இணைப்பு பாகங்களாக (TAGMATA) காணப்படுகிறது. செபலோதோரக்ஸ் (CEPHALOTHORAX) எனப்படும் தலை நெஞ்சுப்பகுதியும், அப்டமன் (ABDOMEN) எனப்படும் வயிற்றுப்பகுதியும் ஒரு சிறிய உருண்டைவடிவ காம்பு போன்ற உறுப்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற பூச்சிகளைப் போன்று சிலந்திகளுக்கு ஆன்டெனா எனப்படும் உணர்கொம்புகள் இல்லை. அதற்குப் பதிலாக அதன் உடம்பில் இருக்கும் மத்திய நரம்பு மண்டலம் உணர்வுகளை அறியும் பணியைச் செய்கிறது.

சிலந்தியின் எட்டுக்கால்கள் வித்தியாசமான அமைப்பைக் கொண்டவை. சிலந்தியைச் சற்று உற்றுப்பார்த்தால் ஆறு இணையான கை, கால் போன்று உடம்பினின்றும் நீட்டிக்கொண்டு இருக்கும். அதை எண்ணிப் பார்த்தால் மொத்தம் 12 இருக்கும். இந்த பன்னிரண்டில் எட்டு கால்கள் போக மீதமுள்ள நான்கு உறுப்புகள் இரையைப் பாய்ந்து பிடிக்கவும், தற்காப்புக்காககவும், சுற்றுச்சூழலை உணரவும் பயன்படுகின்றன.

உணவு உண்ணும் முறை வினோதமானது

சிலந்திகளுக்கு வாய் அமைப்பு சரியாக அமையாத காரணத்தால், அவை இரையைப் பிடித்ததும் உடனடியாய் சுவைத்து சாப்பிட முடியாது. மேலும் சிலந்தியின் குடல் பகுதி மிகவும் சிறியது. எனவே ஒரு கெட்டியான உடலமைப்பு கொண்ட இரையை விழுங்கி, அதனால் ஜீரணிக்கமுடியாது. இதன் காரணமாகவே, தான் பிடித்த உணவை சிலந்திகள் வித்தியாசமான முறையில் உண்கின்றன. அதாவது சிலந்தி தனக்கான இரையைக் கால்களால் பற்றிக்கொண்டதும், இரையின் உடலுக்குள் தன்னுடைய உடம்பைக் கொண்டு ஒரு விதமான திரவத்தைப் பாய்ச்சும்.

இந்த திரவம் ஏறக்குறைய ஒரு அமிலத்தின் வீரியத்தோடு இருப்பதால், ஒட்டுமொத்த இரையும் அடுத்த சில நிமிடங்களில் அதனுடைய கெட்டித் தன்மை இழந்து கூழ் போன்ற திரவமாக மாறிவிடும். அந்த திரவத்தைத்தான் உறிஞ்சி உணவாக எடுத்துக் கொள்கிறது. இதை ஆங்கிலத்தில் லிக்விட் சக்கர் என்கிறார்கள்.

நடமாடும் நூற்பு ஆலை

சிலந்தியின் வயிற்றுப் பகுதியில் ஆறு விதமான நூல் சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகளில் இருந்து வெளிப்படும் ஒரு திரவம் வெளியில் உள்ள காற்றோடு வினைபுரிந்து, அடுத்த வினாடியே, ஒரு மெல்லிய இழையாக மாறுகிறது. இந்த மிக மிக மெல்லிய இழையே ஆறு பாகங்களாகப் பிரிந்து திசைக்கு ஒன்றாகப் பரவுவது இன்னொரு அதிசயம். இந்த இழைகள் மீண்டும் தேவையான அளவுக்கு இணைந்து அந்த இழை பலமாக அடிக்கும் காற்றுக்கும் அறுந்துவிடாமல் நீட்சியோடு இருக்கிறது.

பொதுவாக சிலந்திகள் இழைகளைப் பின்னும்போதே இரண்டு வகையான இழைகளைப் பின்னுகிறது. ஒன்று தான் வசிப்பதற்கு. மற்றொன்று இரையைப் பிடிப்பதற்கு. இரையைப் பிடிப்பதற்கான இழை பசைத் தன்மையோடு காணப்படும். சிலந்தி வசிப்பதற்கான இழையில் அந்த பசைத் தன்மை இருக்காது. அதே போல் எதிரிகளிடம் விரைவாக தப்பிச் செல்வதற்காக ஒரு நீண்ட இழையை நேர்க்கோடு போன்று பின்னி வைப்பதும் உண்டு.

பல்வேறு அளவுகளில் சிலந்திகள் காணப்படுகின்றன. கொலம்பியா நாட்டில் மிகச் சிறிய சிலந்திகள் உள்ளன. இதன் பெயர் பட்டு டிகுவா (PATU DIGUA). குடலின் நீளம் 0.37 மில்லி மீட்டர். அதாவது 0.015 அங்குலம். அதேபோல் மிகப்பெரிய சிலந்திகளும் இந்த நாட்டில்தான் உள்ளன. இதன் பெயர் டிரன்டுலாஸ்’ (TARANTULAS). உடலின் நீளம் நான்கு அங்குலம். ஆனால் அதன் கால்கள் 9 அங்குல நீளம் கொண்டவை.

சில்க் ஸ்பைடர் எனப்படும் ஒரு வகை சிலந்திகள் தன்னுடைய இனத்தையே இரையாக எடுத்துக்கொள்ளும் குணம் கொண்டவை. ஐரோப்பாவில் காணப்படும் ஒரு வகை சிலந்தியின் பெயர் நாற்புள்ளி சிலந்தி. (ARANEUS QUADRATUS). இதன் உடம்பின் மேற்புறத்தில் கண்கள் போன்று நான்கு புள்ளிகள் காணப்படுகின்றன.

அதேபோல் மயில் சிலந்தி (PEACOCK SPIDER) என்பது சிலந்தி வகைகளில் மிகவும் அழகானது. தன்னுடைய உடம்பில் பல வண்ணங்களைக் கொண்டது. இந்த சிலந்தி தாவித்தாவி நடக்கும்போது நடனம் ஆடுவதுபோலவே இருப்பதால், இதற்குக் காரணப்பெயராக அமைந்தது.

வித்தியாசமான இனப்பெருக்கம்

பொதுவாக சிலந்திகளில் ஆண் சிலந்திகளைக் காட்டிலும் பெண் சிலந்திகள் சற்று பெரிதாகவும், சற்றே எடை கூடியும் காணப்படும். இனச்சேர்க்கைக்குத் தயாராகும் ஆண் சிலந்திகள், பெண் சிலந்திகளை நெருங்கும்போது அவை அண்டவிடுவதில்லை. நீண்ட நேர முயற்சிக்குப் பின்பே, பெண் சிலந்திகள் இணங்கி வருகின்றன. பின்னி வைத்திருக்கும் வலைக்குள் ஆண் சிலந்தி பெண் சிலந்தியைச் சுற்றி சுற்றி வரும். பிறகு தன்னுடைய சிறிய ரோமக்கால்களால் ஸ்பரிசித்துக் கொண்டே சேர்க்கையில் ஈடுபடும். சேர்க்கையில் இருக்கும்போதே ஆண் சிலந்தி தன்னுடைய (PEDIPALPS) கைகளால் உயிர் அணுக்களை எடுத்து பெண் சிலந்தியின் உடம்புக்குள் செலுத்தும்.
இனச்சேர்க்கை முடிந்த பின், பெண் சிலந்திகள் ஆண் சிலந்திகளை உயிரோடு விட்டுவைப்பது இல்லை. தன்னுடைய விஷத்தை ஆணின் உடம்பில் பாய்ச்சி கொன்றுவிடும். இறந்த ஆண் சிலந்தியின் உடம்பை தன்னுடைய உடம்பில் சுரக்கும் நொதியை வைத்து கூழாக்கி உறிஞ்சிவிட்டு, உடம்பைக் கீழே தள்ளிவிடும்.
இப்படிப்பட்ட பெண் சிலந்திகளை விடோ ஸ்பைடர் (WIDOW SPIDER) என்றும் ப்ளாக் ஸ்பைடர் (BLACK SPIDER) என்றும் அழைக்கிறார்கள். சில சாதுவான பெண் சிலந்திகள் மட்டும் ஆண் சிலந்திகளை உயிரோடு விட்டுவிடுவதும் உண்டு.

சிலந்திகள் தன்னுடைய சில்க் லைனிங்கில் ஒரு தனிப்பட்ட பாதுகாப்போடு கூடிய ஒரு வலையை அமைத்து, அதில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் எண்ணிக்கையிலான முட்டைகளை இடும். முட்டைகளில் இருந்து வெளிவரும் சிலந்திக் குஞ்சுகளை பல்லிகள் கபளீகரம் செய்துவிடுவதால் தப்பியவை மட்டுமே சிலந்திகளாக மாறி வீட்டின் பல பகுதிகளுக்கும், வீட்டுக்கு வெளியே இருக்கும் மரங்களுக்கும் பரவி, வலைகளைப் பின்ன ஆரம்பிக்கும். பொதுவாக சிலந்திகள் ஓராண்டு ஆயுள் கொண்டவை.

ரெட் பேக் ஸ்பைடர்

ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழக்கூடிய வலிமையான ஒரு சிலந்தியின் பெயர் RED BACK என்பதாகும். இதற்கு இன்னொரு பெயர் மாஸ்டர் ட்ராப்ள். இந்த சிலந்திகள் வடிவமைக்கும் கூடுகள் மிகவும் பலம் பொருந்தியவை. பிளாஸ்டிக் இழைகள் போன்று கடினத்தன்மையோடு இருப்பதால் இந்த வலையில் தவளைகள், சிறு பாம்புகள், பறவைகள் மாட்டிக்கொண்டு விடுபட முடியாமல் இறந்துபோகும்.

உலகின் மிகப்பெரிய சிலந்தி கோலியாத் ஸ்பைடர் (GOLIATH SPIDER). இந்த வகை சிலந்தி கோலியாத் என்ற பறவை இனத்தை மட்டுமே இரையாக உட்கொள்ளும் தன்மை கொண்டவை. இந்த அபாயகரமான சிலந்திகள் தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் பெருமளவில் காணப்படுகின்றன. இதன் உடல் ஒரு அடி நீளத்தோடும், 200 கிராம் எடையோடும், வயிறு, கால்கள் ஆகியவற்றில் முடிகளோடும் பார்ப்போரை அச்சம் கொள்ள வைக்கிற அளவுக்கு உள்ளன. இதனுடைய சராசரி ஆயுட்காலம் பெண் என்றால் 25 ஆண்டுகளாகவும், ஆண் என்றால் 5 ஆண்டுகளாகவும் அமைந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன.

(வாவ் வளரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here