கல்வி: வேலைவாய்ப்பை உருவாக்கும் களம் அல்ல!

17

-பேராசிரியர். அ. முகமது அப்துல்காதர்

மாணவர்கள் தங்கள் கற்கும் கல்வியை பொருள் சார்ந்ததாக பார்க்காமல், அறம் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும்.

இன்றைய நிலையில் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்விக்கு வரும்போது, பெற்றோர்கள் எந்த படிப்பில் சேர்ந்து படித்தால் அதிக சம்பளம் பெற முடியும் என்பதை மட்டும் பார்த்து, தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்களே தவிர, பிள்ளைகளின் விருப்பம் என்ன என்பதை பற்றி பலர் கருத்தில் கொள்வது இல்லை.

இன்றைய காலகட்டத்தில் உயர்கல்வி என்பது வேலைக்குச் செல்வது, அதிக சம்பளம் பெறுவது என்ற கண்ணோட்டத்தில்தான் அனைவராலும் பார்க்கப்படுகிறது. அந்தந்த காலகட்டத்தில் எந்தத் துறை சார்ந்த படிப்பைப் படித்தவர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்களோ, அந்த படிப்பில் சேர்க்கவே போட்டி போடுகிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் அந்தத் துறையில் வேலைவாய்ப்பு குறையும்போது, தாங்கள் படித்த படிப்பிற்கு வேலைவாய்ப்பு இல்லை என்று புலம்பும் நிலை ஏற்படுகிறது.

உயர்கல்வி படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்பதே இன்றைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது. நமது பள்ளிக்கல்வி முறையில் மதிப்பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதால், மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது திறன்கள் பற்றிய அறிவை பெறாதவர்களாக உள்ளார்கள்.

அதற்கு மிக முக்கிய காரணம் பள்ளிகளில் பிராக்டிகல் வகுப்புகளுக்கும், அறிவியல் சம்மந்தமான புராஜக்ட் செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்காததால், அத்தகைய மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்றிருந்தும் உயர்கல்வியில் வேலைவாய்ப்பை பெறமுடியவில்லை என்பதுதான்.

கல்லூரியில் சேர்ந்து படிக்கக்கூடிய படிப்பு, மாணவர் தேர்ந்தெடுத்த படிப்பாக இருந்தால், அதில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடு பட்டு தமது உயர்படிப்பை சிறந்த முறையில் முடித்துவிடுவார்கள். ஆனால், பெற்றோர் வற்புறுத்தலிலோ அல்லது மற்றவர்கள் விருப்பத்திலோ படிப்பைத் தேர்ந்தெடுத்து இருந்தால், கண்டிப்பாக அந்த படிப்பை முடிப்பது கடினமானது.

ஒரு படிப்பு உயர்ந்தது, மற்றொரு படிப்பு தாழ்ந்தது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அனைத்து துறையைச் சார்ந்த படிப்புகளும் சிறந்த படிப்புகள் தான். ஒரு படிப்பு தாழ்ந்தது என்றால், அதற்கு ஏன் பல்கலைக்கழகம், இத்தனை கல்லூரிகள், பேராசிரியர்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கல்வி என்பது வேலைவாய்ப்பை மட்டுமே உருவாக்கும் களம் அல்ல என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இதைத்தான் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொல்கிறார், “கல்வி என்பது அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும். அது மூன்று அம்சங்களை கொண்டு இருக்க வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் நல்லது எது, கெட்டது எது என்பதைப் புரிந்துகொள்ள உதவவேண்டும். சாதி மதங்களை மெய் ஆன்மீகம் நிறைந்ததாக மாற்றும் திறன் வேண்டும். கல்வி மூலமாக நமது நாடு பொருளாதார முன்னேற்றம் பெற வேண்டும்” என்றார்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு பட்டதாரிகளுக்குத்தான் உள்ளது. மாணவர்கள் தங்கள் கல்வியில் பெற்ற அறிவையும் திறன்களையும் கொண்டு சுயமாக சமூகத்திற்குப் பயன்படும் விதத்தில் கண்டுபிடிப்புகளை உருவாக்கினால் இன்று நமக்கு எத்தனையோ கண்டுபிடிப்புகள் கிடைத்து இருக்கும்.

மதிப்பெண்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை திறன்களுக்கு கொடுக்காததால்தான் இளைஞர்களின் அறிவும் திறமையும் பயன்படாமல் போய்க்கொண்டிருக்கின்றன. மிகச்சிறிய நாடான பின்லாந்து, பொருளாதாரத்தில் பின்தங்கியபோது, ஒரு பொறியியல் மாணவரின் கண்டுபிடிப்பான நோக்கியா போன் மூலமாகத்தான் அந்த நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டது.

வேகமாக வளர்ந்துவரும் நவீன தொழில் நுட்பப்பத்தை பயன் படுத்திவரும் நிறுவனங்கள், தங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, திறன் உடைய பட்டதாரிகளை மட்டுமே வேலைக்கு எடுக்கிறது. வேலைக்கான பயிற்சி என்ற பெயரில் அதற்கான நேரத்தையும், செலவீனத்தையும் இழக்க நிறுவனங்கள் விரும்பவில்லை.

அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடந்தாலும், அதற்கான திறன்களை மாணவர்கள் பெறவில்லை என்பதால், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற தவறான கருத்து நிலவுகிறது.

இன்றைய தொழில் நிறுவனங்கள் அறிவையும், திறமையும் அடிப்படையாக கொண்டுதான் செயல்படுகின்றன. இன்றைய சூழ்நிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது தவறான கருத்து. திறமையில்லாதவர்களின் திண்டாட்டமாகதான் மாறிவருகிறது என்பதுதான் இன்றைய நிஜமாக உள்ளது. திறமையான பட்டதாரிகளை தேடிப்பிடித்து வேலைக்கு அமர்த்துவதில் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்படுகின்றன. ஆனால் திறமையானவர்கள் குறைவாக இருப்பதால் நிறுவனங்கள் கல்லூரிக்கும், பல்கலைக்கழகத்திற்கும் சென்று நேர்காணல்களை நடத்தி, திறமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் படிப்பை முடிக்கும் முன்பே வேலைக்கான ஆணைகளை வழங்குகின்றன.

கணிப்பொறித் துறை வளர்ச்சி அடைந்த காலத்தில் பொறியியல் பட்டதாரிகள் அனைவருமே வேலை வாய்ப்பு பெற்றார்கள். ஆனால், அந்தத் துறையில் இன்றைய நிலை, எத்தனையோ பணியாளர்களை வேலையிலிருந்து அனுப்புகிறார்கள் என்பதை நாம் அறிகிறோம். அதற்கு மிக முக்கிய காரணம், நவீன தொழில்நுட்பத்திற்கு நிகராக திறன்களை வளர்த்துக்கொள்ளாமல், ஒரே வேலையை தினமும் செய்யும் பணியாளர்களால் நிறுவனத்துக்கு பயனில்லை என்று முடிவு செய்கின்றனர். தங்களை மேம்படுத்தி, திறமைகளை வளர்த்துக்கொள்ளும் பணியாளர்களை எந்த நிறுவனமும் வேலையிலிருந்து அனுப்புவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தாங்கள் தேர்ந்தெடுத்து படிக்கும் துறைரீதியான வேலைவாய்ப்பை மட்டும் நம்பி இருக்காமல், போட்டி தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு மாணவர்கள் முன்வர வேண்டும். பெரும்பான்மையான போட்டி தேர்வுகள் அனைத்துமே பட்டதாரிகளுக்குத்தான் உள்ளது. சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளில் வெற்றிபெற்றால், உங்கள் வாழ்வில் மிகப்பெரிய கௌரவும் பெற்று மக்களுக்கு பணியாற்றும் மிகப்பெரிய வாய்ப்பும் கிடைக்கும்.

அத்தகைய தேர்வுகளுக்கான பயிற்சியை உயர்கல்வியில் முதலாமாண்டில் இருந்தே எடுத்துக்கொண்டால் கண்டிப்பாகத் தேர்வில் வெற்றி பெறலாம்.

கல்லூரிகளில் தங்கள் புராஜக்ட் மூலமாக சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக தங்களை உருவாக்கிக் கொண்டால், அதன் மூலமாக சிறிய தொழில் நிறுவனங்களை உருவாக்க முடியும். இதன் மூலமாக நிறைய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரமுடியும்.

இளைஞர்கள் படித்து பட்டம் பெற்று அவர்களின் அறிவையும் திறமையையும் பிறந்த மண்ணுக்குப் பயன்படுத்தவேண்டும். தாய்நாட்டில் பெற்ற அறிவையும் திறமையும் அயல்நாட்டுக்கு கொடுத்தால் நம் நாடு எவ்வாறு வளர்ச்சி பெறும்? எவ்வாறு வல்லரசாகும்? இளைஞர்களே சிந்தியுங்கள். கலாம் அவர்கள் எத்தனையோ ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி வெற்றி பெற்றாலும், அவரின் மிகப்பெரிய வெற்றியாகவும் பேரானந்தமாகவும் அவர் சொல்வது மாற்றுத்திறனாளிகள் எளிதாக நடக்க காம்போசைட் மூலக்கூறுகளால் ஆன காலணிகளை உருவாக்கியதைத்தான். அதை அவர்கள் அணிந்து மிகவும் எளிதாக நடந்தும், ஓடியும் சென்றதை என் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியாகவும், அது சமூகத்திற்கு பயன்பட்டதால் பேரானந்தமாகவும் உணர்கிறேன் என்றார். அதுமட்டுமல்ல, அவர் ஒவ்வொரு முறையும் மாணவர்களிடம் சொல்வது ‘நீங்கள் கல்வியில் பெற்ற அறிவையும் திறமையும் சமூகத்திற்கு பயன்பட வேண்டும்’ என்பது தான்.

திறமைகள் பல்வேறாக நம்மிடையே இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் வாழ்வில் வெற்றியும், தோல்வியும் நிர்ணயிக்கப்படுகின்றன. படிக்கும்போதே திறமையை அடையாளம் கண்டு அதற்குத்தக்க பயிற்சிகளை அளித்து, திறமையை மேம்படுத்துபவரே உயர்கல்வியில் வெற்றியின் உச்சத்திற்கு செல்கிறார்கள்.

மாணவர்கள் தங்கள் கற்கும் கல்வியை பொருள் சார்ந்ததாக பார்க்காமல், கல்வியை அறம் சார்ந்ததாக பார்க்க வேண்டும். பொருள் சார்ந்த கல்வியில் இளைஞர்களிடம் சமூக அக்கறை குறைந்து விடும். அறம் சார்ந்த கல்வியில்தான் நமது சமூகம் வளர்ச்சி பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here