CUCET 2020

19

-த.க.தமிழ்பாரதி

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர எழுதவேண்டிய நுழைவுத்தேர்வு

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் நாற்பதுக்கும் அதிகமான மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. பொதுவாக, கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் ஐஐடிக்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் முன்னிலையில் உள்ளன. பன்மொழி அறிவு, பல்வேறுபட்ட சிந்தனைகள், மாநிலங்களுக்கு இடையிலான பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியன மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிப்பதால் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடைப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வளர்ந்துவரும் கல்வி நிறுவனமான இப்பல்கலைக்கழகம், அண்மையில் தனது பத்தாம் ஆண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

திருவாரூரிலிருந்து பத்து கி. மீ. தொலைவில் நீலக்குடி, நாகக்குடி கிராமங்களில் 500 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்திருக்கிறது.

சிறப்புகள்

தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த திறமையான பேராசிரியர்கள், பெரிய வகுப்பறைகள், உயர்தர ஆய்வுக்கூடங்கள், இலவச வைஃபை வசதி, நூலகம் உள்ளன. மாணவர்களுக்காக நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை உள்ளிட்ட அமைப்புகளும் இயங்குகின்றன. அவ்வப்போது நிகழும் கருத்தரங்குகளும், பயிலரங்குகளும் மாணவர்களுக்குப் பயன்தருவதாக அமைகின்றன. பன்முகத்தன்மையை அதிகரிக்கும் பலவகையான மன்றங்களும் உள்ளன. நாட்டின் வேறுபட்ட பல பகுதிகளில் இருந்து பயிலும் மாணவர்களுடன் பழகுவதால் பண்பாட்டுப் பரிமாற்றம் நிகழ்கிறது.

வளாக வாழ்க்கை

பல்கலைக்கழகத்தின் பொது வேலைநேரம் காலை 9 முதல் மாலை 4 மணிவரை. எனினும், துறைசார்ந்து வேலைநேரம் மாறுபடலாம். அருகில் வசிக்கும் மாணவர்கள் தினசரி வந்து செல்லலாம். கங்களாஞ்சேரி வரை தமிழ்நாடு அரசு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்குகிறது. கங்களாஞ்சேரியிலிருந்து பல்கலைக்கழகம் வருவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் வேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதிகள் உள்ளன. மாணவ மாணவியருக்கு தனித்தனி விடுதிகள் உள்ளன. புதிய விடுதியில் அறைக்கு நால்வர் வீதமும், பழைய விடுதியில் அறைக்கு இருவர் வீதமும் அனுமதிக்கப்படுகின்றனர்.

முனைவர் பட்ட மாணவர்களுக்குத் தனி விடுதி வசதி உள்ளது. உடற்பயிற்சிக்கூடமும், தொலைக்காட்சி அறையும் விடுதிகளில் உண்டு.

பயிலும் மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில்கொண்டு ஹெல்த் சென்டர் இயங்குகிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு விடுதிக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரிவினர்களுக்கு செமஸ்டருக்கான விடுதிக்கட்டணம் ரூ. 1500 என்ற அளவில் உள்ளது. விடுதி உணவுக்கு மாதம் ஒன்றுக்கு ஏறத்தாழ ரூ. 2200 செலவாகிறது. செமஸ்டர் கட்டணம், தேர்வுக் கட்டணம் தனியார் கல்வி நிறுவனங்களை விட மிகக் குறைவாகவே உள்ளது.

நுழைவுத்தேர்வும் கல்வித்தகுதியும்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகம் பற்றிய புரிதல் இல்லாமையால் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தின் 2020-21 கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மூன்றாண்டு இளநிலைப் படிப்புகள் ஏதும் கிடையாது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப் படிப்பிற்கு (Integrated Master Degree) அல்லது நான்காண்டு படிப்புகளுக்கே விண்ணப்பிக்கமுடியும். தற்போது இளநிலை முடிப்பவர்கள் முதுநிலை பட்டப்படிப்பிற்கும், முதுநிலைப் பட்டம் முடித்தவர்கள் ஆய்வுப் படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம்.

ஒருங்கிணைந்த இளநிலைப் பொருளாதாரத்தில் மூன்றாண்டு இங்கே படிக்கும் மாணவர்கள், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிலையத்தில் முதுகலை படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆய்வுப் படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் முதுகலை செவ்வியல் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுநிலைப் படிப்புகள்

இயற்பியல், வேதியியல், கணிதவியல், உயிர் அறிவியல், பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு தலா 33 இடங்கள் உள்ளன. ஒருங்கிணைந்த நான்காண்டு பிஎஸ்சி, பிஎட் கணிதப் படிப்புக்கு 55 இடங்களும், BPA இசையியல் படிப்பில் 17 இடங்களும் உள்ளன.

டெக்ஸ்டைல் பிரிவில் பிஎஸ்.சி மற்றும் எம்பிஏ பட்டத்தை பல்கலைக்கழகம் வழங்குகிறது. ஆனால், அதற்கான வகுப்புகள் கோவையில் நடத்தப்படுகின்றன. மேற்காணும் பிரிவுகளில் சேர, பிளஸ் டூ தேர்வில் உரிய பாடங்களில் பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும் குறைந்தபட்சம் பெற்றிருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டு முதுநிலைப் பட்டங்களில் சேர இளநிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எம்காம் படிப்பில் 44 இடங்களும், எம்டெக் மெட்டீரியல் சயின்ஸ் 33 இடங்களும், எம்எஸ்டபிள்யு 22 இடங்களும், எம்பிஏ வணிக மேலாண்மை 44 இடங்களும், எம்பிஏ சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் 20 இடங்களும் உள்ளன.

நூலக தகவல் அறிவியல், செயல் முறைசார் உளவியல், வேதியியல், கணினி அறிவியல், நோயியல் மற்றும் பொதுசுகாதாரம், புவியியல், நிலவியல், தோட்டக்கலை, நுண்ணுயிரியல், புள்ளியியல் மற்றும் செயல்முறைசார் கணிதவியல், செவ்வியல் தமிழ், ஆங்கிலம், இந்தி, வரலாறு, பொருளாதாரம், மாஸ் கம்யூனிகேஷன், சட்டப் படிப்பு ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றில் தலா 17, 20, 22, 33 என்ற முறையில் இடங்கள் உள்ளன.

மேற்காணும் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலைப் படிப்பில் உரிய பாடங்களில் பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களும், ஆதிதிராவிடர், பழங்குடி மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும் குறைந்தபட்சம் பெற்றிருக்க வேண்டும். இது துறைகளைப் பொறுத்து சற்றே மாற்றமடைகிறது. அனைத்துத் துறைகளிலும் ஆய்வுப்படிப்பு வழங்கப்படுகிறது.

சமுதாயக் கல்லூரி

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளூர் மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவுகிறது. அருகிலுள்ள உள்ள மக்களை கல்வி பெறச் செய்து சமுதாயத்தில் ஏற்றம் காண வைப்பதற்காக இச்சமுதாயக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சேர பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படைத் தகுதியாகும்.

உளவியல் மற்றும் ஆலோசனை, சரக்கு மற்றும் சேவை வரி, கிராமப்புற சந்தையியல் மற்றும் விற்பனைத்திறன், அடிப்படை கணினிக் கல்வி, நிதிசார் அடிப்படைக் கல்வி, பங்கு மற்றும் பொருள்கள் சந்தை செயல்பாடு, முதலீட்டு மேலாண்மை, தொழில்முனைவு பயிற்சி, சட்ட சார்பியல், கிராபிக் டிசைனிங், புகைபடம் எடுத்தல் மற்றும் வீடியோகிராபி, பூச்சியியல் மேலாண்மை, இயற்கை வேளாண்மை, மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் உயிரி உரம் தயாரித்தல், கணினி மூலம் கணக்கியல் பயிற்சி, விமான டிக்கெட் புக்கிங் பயிற்சி, சுற்றுலா வழிகாட்டல் பயிற்சி போன்ற சான்றிதழ் படிப்புகளும், டிஜிட்டல் குறும்படம் தயாரித்தல் மற்றும் வீடியோ தயாரிப்பு, மருத்துவமனை மற்றும் நோயாளிகள் மேலாண்மை போன்ற டிப்ளமோ படிப்புகளும் கடந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் முறை

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேர மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (CUCET) எழுதவேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல், செல்ஃபோன் எண் கொடுத்து விண்ணப்பதைப் பதிவு செய்யவேண்டும். ஏனெனில், அட்மிசன் வரையிலும் அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாகத்தான் நடக்கும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய விண்ணப்பதாரரின் ஸ்கேன் செய்யப்பட்ட நிழற்படம், கையெழுத்து அவசியம்.
பிளஸ் டூ முடித்த விண்ணப்பதாரர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மூன்று பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒன்று கிடைக்கவில்லை என்றாலும், மற்றொன்று பயன்படும். நுழைவுத்தேர்வு முடிவுகளுக்குப் பின், மூன்றில் எதில் வேண்டுமானாலும் சேரலாம்.

ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளில் பி.எஸ்சி பி.எட் கணிதப் பிரிவில் 55 இடங்கள் இருப்பதால், அதற்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

ஒருவேளை, வெளி மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்க விருப்பப்பட்டாலும், இதே விண்ணப்பத்திலேயே விண்ணப்பிக்கலாம். வேறு இரண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் மூன்று பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதே முறைதான் முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும்.

இளநிலை, முதுநிலை நுழைவுத்தேர்வுக்குக் கட்டணமாக பொது, ஓபிசி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ரூ. 800. ஆதிதிராவிடர், பழங்குடிப் பிரிவினருக்கு ரூ. 350. ஆய்வுப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் பொது, ஓபிசி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ரூ. 1000. ஆதிதிராவிடர், பழங்குடிப் பிரிவினருக்கு ரூ. 450. மாற்றுத் திறனாளிகள் கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத்தேர்வு நடைமுறை

பிளஸ் டூ முடித்தவர்கள் எழுதவேண்டிய நுழைவுத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. பிரிவு அ – ஆங்கில, கணித, பொது அறிவை பரிசோதிப்பதாக 25 கேள்விகள் அமையும். பிரிவு ஆ – 75 கேள்விகள் கொண்டிருக்கும்.

பிரிவு ஆ நான்கு உட்பிரிவுகள் கொண்டது. கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் என்ற நான்கனுள் மூன்றனுக்கு விடையளிக்க வேண்டும். ஒருங்கிணைந்த கணிதம், வேதியியல், இயற்பியல் மற்றும் பிஎஸ்ஸி., பிஎட் பட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் கட்டாயம் கணிதம், வேதியியல், இயற்பியல் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். உயிரியலை ஒதுக்கிட வேண்டும். ஒருங்கிணைந்த உயிர் அறிவியல் விண்ணப்பித்தவர்களுக்கு கணிதம் தவிர்த்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். பொருளாதாரம், இசையியல் விண்ணப்பித்தவர்களுக்கும் நுழைவுத்தேர்வில் துறை சார் கேள்விகளுக்கு விடையளித்து எதிர்கொள்ளவேண்டும்.

இளநிலைப் படிப்பை முடித்து முதுநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் அ பிரிவில் ஆங்கிலம், கணித, பொது அறிவு தொடர்பான 25 கேள்விகளும், ஆ பிரிவில் விண்ணப்பித்த பாடம் சார்ந்த 75 கேள்விகளும் இடம்பெறும். விடையைத் தேர்ந்தெடுத்துக் குறிக்கும் OMR தாள் முறையில் தேர்வு நடைபெறும். சரியான பதிலுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும். ஆதலால், தெளிவான உறுதியான பதில்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். சென்னை, கோவை, கடலூர், மதுரை, நாகர்கோயில், திருவாரூர், திருச்சி ஆகிய நகரங்களில் தேர்வு நடத்தப்படும்.

ஆய்வுப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு கணினிவழி நுழைவுத்தேர்வு சென்னை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெறும்.

மாணவர் சேர்க்கை நடைமுறைகள்

நுழைவுத் தேர்வு நடந்த பின் முடிவுகள் அறிவிக்கப்படும். அதற்குப் பின், பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பித்த பிரிவில் உரிய விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்களா? என்பதை அறிய பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படுகிறது. நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியாகும். அதன்படி மாணவர் சேர்க்கைக்கான அழைப்பு விடுக்கப்படும்.

ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்த படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை நிகழும். வீட்டிலிருந்தபடியே இணைய வழியில் மாணவர்கள் அட்மிசன் பெறலாம். அதற்கு மின்னஞ்சலை சரிவர கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். பிற படிப்புகளுக்கு நேரடியாக பல்கலைக்கழகம் வந்து சேர்க்கை பெறவேண்டியிருக்கும்.

கொரோனா பிரச்சினை தீர்ந்ததும் தேர்வு நாட்கள் அறிவிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பழைய கேள்வித்தாள்களை http://recruitmentresult.com/cucet-previous-papers / https://collegedunia.com/exams/cucet/practice-papers
போன்ற இணைப்புகளின் வழியாகப் பெறலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 23.5.2020
விவரங்களுக்கு: www.cucetexam.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here