கடவுளின் தேசத்தை காப்பாற்றிய டீச்சர்!

21

-பூ. சர்பனா

கொரோனாவுக்கு பாடம் கற்பித்த அமைச்சர் சைலஜா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது கேரளா. அதற்குக் காரணமான, மாநில சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சரை, உலக அளவில் பிரபலமான ‘வொக்’ (VOGUE) இதழ் ‘கொரோனா வாரியர்’ என்ற தலைப்பில் அட்டைப்பட கட்டுரையாக வெளியிட்டு கௌரவித்துள்ளது; கொரோனாவை வெற்றிகரமாக கையாண்ட ஆசிய போராளிகள் பட்டியலில் தென் கொரியா, சீனத் தலைவர்களின் புகைப்படங்களோடு இவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பிபிசி இணையதளம்!

கேரளாவின் வெற்றிக் கதை

இந்தியாவில் முதன்முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளாதான். சைனாவில் இருந்து கொரோனா பாதிப்புடன் மூன்று பேர் கடந்த ஜனவரி மாதமே கேரளா திரும்பினார்கள்.

அவர்களை தனிமைப்படுத்தி பரவலை கட்டுப்படுத்தினாலும் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து கொரோனா தொற்றுடன் பலர் கேரளா திரும்பினார்கள். இதனால் பிப்ரவரி மாதம் இந்தியளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது கேரளா. ஆனால், அதன்பின்னர் மற்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்ல, அனைவரும் மலைக்கும் வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலை 502இலேயே நிறுத்திவிட்டது கேரளா. இன்று தமிழகத்தில் சென்னையில் மட்டுமே ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று 500 என்ற எண்ணிக்கையில் எகிறிக்கொண்டிருப்பதுடன் ஒப்பிட்டால் கேரளாவின் கட்டுப்பாடு ஆச்சரியம் தரும்.

கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரையும் அதேதான் நிலை. தமிழகத்தில் 47, மகாராஷ்டிராவில் 700க்கும் மேற்பட்டோர், இந்தியா முழுவதும் 2200க்கும் மேலே கொரானாவிற்கு பலியாகியுள்ள நிலையில், கேரளாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 பேர் மட்டும்தான். 500 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் 474 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்கள். தற்போது 30 பேர்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களும் குணமாகி வருகிறார்கள்.

இந்த சாதனைக்கு காரணம், கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சரின் சிறந்த நிர்வாகம்.
கொரோனா தொற்று முதன்முதலில் தோன்றிய சைனாவின் வூகான் மாநிலத்தில் கேரளாவிலிருந்து அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; இன்னொரு பக்கம் உலகின் எல்லா பக்கம் இருந்தும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் மாநிலம்; இதுபோல் வெளிநாடுகளில் அதிகம் பேர் பணிபுரியும் மாநிலம் என்பதால்தான் கேரளாவிலேயே முதன்முறையாக கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டது. ஆனால், அதற்காக அசந்துவிடவில்லை கேரளா. காரணம் ஷைலஜா டீச்சர்தான். அவருக்கு தொற்று நோய்களை எதிர்த்து போராடுவது என்பது புதிதல்ல. ஏற்கனவே, எபோலா, நிபா வைரஸ் எல்லாவற்றையும் வீழித்தி வெற்றி நடை போட்டவர்தான்.

முந்தைய அனுபவங்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டதன் விளைவுதான் இன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களைவிடவும் கொரோனா கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குகிறது கேரளா. ஷைலஜா டீச்சரின் முறையான அணுகுமுறையும் ஒருங்கிணைந்த தலைமையும்தான் இதற்கு காரணம் என்கிறது ‘வோக்’.

“கேரளாவிற்கு மத்திய அரசிடமிருந்து போதிய நிதி கிடைக்கவில்லை. ஆனாலும், கொரோனா தொற்றாமல் திறம்பட நிர்வகிப்பது எப்படி? சிக்குன் குனியா, எபோலா, நிபா போன்ற வைரஸ் தொற்றுகளால் கேரளாவில் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் சிறந்த களப்பணி ஆற்றி நோயை கட்டுக்குள் கொண்டுவந்தவர் ஷைலஜா. ஏற்கனவே, இப்படி பல வைரஸுகளுடன் போர் புரிந்தவர், கொரோனா வைரஸுடன் நடத்தும்போர் மூலம் போர்ப்படை தளபதியாக பிரபலமடைந்துள்ளார்” என்று, ‘வோக்’ மேலும் குறிப்பிடுகிறது.

கேரளாவை ஆட்சி செய்வது கம்யூனிஸ்ட் கட்சி என்பதால், தொடக்கத்தில் விமர்சித்துக் கொண்டிருந்த பாஜக தலைவர்கள்கூட, “இப்போது கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதில் கேரளா மாடல்தான் முன்மாதிரியாக உள்ளது” என்று பாராட்டுகிறார்கள். கடந்த, மே 3ஆம் தேதி ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர், ’கேரளா மிகச்சிறந்த கட்டுப்பாட்டு யுக்தியை கையாள்கிறது. அந்த, யுக்தியைத்தான் நாங்களும் மற்ற மாநிலங்களுக்கு குறிப்பிடுகிறோம்’ என்று ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

கொரோனாவை வென்றது எப்படி?

இதுகுறித்து ஷைலஜா டீச்சர் பேசும்போது, “2020 ஜனவரி 30ஆம் தேதி அன்றுதான் இந்தியா தனது முதல் கொரோனா தொற்று நோயை கேரளாவில் பதிவு செய்தது. முதன்முதலில் சைனா வூஹான் பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்கள் கேரளாவிற்கு வந்தார்கள். அப்போதே, எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்து நிறைய கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவை உருவாக்கினோம்.

நாங்கள் நிபா வைரஸுக்குப் பிறகு நிறைய பாடம் கற்றுக்கொண்டோம். அதனால், எங்கள் செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறோம். சுகாதாரம், கல்வி, சமூக மேம்பாடு என அனைத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை கனிவுடன் அணுகுதல், உயர் தொழில்நுட்பத்தோடு மருத்துவமனை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், கிராமப்புற மருத்துவமனைகளில் சோதனைக் கருவிகளை வைத்திருத்தல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியதால் பல்வேறு நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடிந்தது.

கேரளாவில் இதுவரை 16 ஆயிரத்து 693 கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் பல்வேறு குழுக்களை ஏற்படுத்தி வீடியோ காலில் பேசுவதோடு மக்களிடமும் தன்னம்பிக்கையை உருவாக்க தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். தொடர்ந்து எல்லா மாவட்டங்களுக்கும் பயணித்து சமூக விலகலை சிறப்பாக கடைபிடிக்க வைத்தோம். மக்களும் புரிந்துகொண்டு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். இவை எல்லாம்தான் கொரோனாவை படிப்படியாக வீழ்த்த முடிந்தது. முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது” என்கிறார்.

யார் இந்த ஷைலஜா டீச்சர்?

“கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் 1956ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி பிறந்தவர் ஷைலஜா டீச்சர். இவரது பெற்றோர் குந்தன், சாந்தா. ஷைலஜா டீச்சர் பழசிராஜா கல்லூரியில் பி.எஸ்.சி. படித்துவிட்டு பி.எட் விஸ்வரேஸ்வரர் கல்லூரியில் ஆசிரியர் பட்டயப் படிப்பை முடித்தார். அதன்பிறகு, சிவபுரம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர், தலைமை ஆசிரியர் என்று பணிபுரிந்தவர், அரசியலில் ஏற்பட்ட ஆர்வத்தால், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தீவிர அரசியலுக்கு வந்தார். ஆனால், கல்லூரி காலங்களிலேயே ஸ்டூடெண்ட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 63 வயதாகும் ஷைலஜா டீச்சர், கண்ணூர் மாவட்டத்தில் குத்துப்பரம்பா தொகுதியிலிருந்து, கடந்த 1996ஆம் ஆண்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, கடந்த 2006ஆம் ஆண்டு பேராவூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றவர், கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரவையில் இடம்பிடித்த இரண்டு பெண் அமைச்சர்களில் இவரும் ஒருவர்.

இவரது கணவர் பாஸ்கரன் மட்டனூர் முனிசிபல் சேர்மனாக உள்ளார். கடந்த 1981ஆம் ஆண்டு இருவர்களின் திருமணம் நடந்தது. சோபித், லசித் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் துபாயில் பொறியாளராகவும், இரண்டாவது மகன் கண்ணூர் விமான நிலைய பொறியாளராகவும் பணிபுரிகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மத்தியக் குழு உறுப்பினர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவருக்கு, டீச்சர், அரசியல்வாதி என்ற முகம் மட்டுமல்ல எழுத்தாளர் என்ற முகமும் உள்ளது. இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ஷைலஜா டீச்சர் கொரோனாவை கட்டுப்படுத்தியதற்கு காரணம், அவரது களப்பணிகள் மட்டுமல்ல, அவர் கற்ற அறிவியலும்தான். அவர் பள்ளியில் அறிவியல் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், “கொரோனாவை எதிர்கொள்ள அறிவியல் ஆய்வுகள், மனிதநேயம், பரிசோதனை, மருத்துவ சீர்திருத்தம் ஆகியவை தேவைப்படுகிறது. மூட நம்பிக்கை, உணர்ச்சி வசப்படுதல் ஆகியவை இங்கே கை கொடுக்காது” என்று உறுதியாக கூறுகிறார் ஷைலஜா டீச்சர். இவர் ஒரு நாத்திகவாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது புகார்கள் அதிகம் வந்ததால், பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்ததோடு, பெற்றோரை கவனிக்காத 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகள் மீது அதிரடியாக வழக்கும் பதிவு செய்ய காரணமாக இருந்தவர்தான் ஷைலஜா டீச்சர் என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here