-ஜஸ்டின் துரை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் ஜூன் – ஜூலை மாதங்களில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர். உலக சுகாதார அமைப்பும் இதே எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதை உறுதிபடுத்துவதுபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகிறது; ஆனால், அதற்கேற்ப கட்டுப்பாடுகள் அதிகரிப்பதற்கு மாறாக ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. மே 17க்கு பிறகு என்ன நடக்கும்?
“இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் கொரோனா தொற்று அதிகரிக்கும்” என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. “இந்தியாவில் மே மாதத்திலேயே கொரோனா பரவல் உச்சநிலையை அடைந்திருக்க வேண்டும். ஆனால், ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு கொண்டே போனதால் கொரோனா பரவல் உச்சமடையும் காலம் தாமதமாகியுள்ளது” என்று சொல்லியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரண்தீப் குலேரியாவும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு பரவல் அதிகரிக்கும் என்பதைத்தான், “ஜுன் – ஜூலை மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும்” என்கிறார்.
தமிழகத்தில் மே 1 முதல் 10ஆம் தேதி வரையிலான இந்த பத்து நாட்களில் மட்டும் 4,881 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மாநிலங்களில் நிலைமை இன்னும் படுமோசம். சூழ்நிலை இவ்வாறிருக்க, மதுக் கடைகளை திறப்பது முதல் பொதுப் போக்குவரத்து சேவைகளை அனுமதிப்பது வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை மெல்ல மெல்ல தளர்த்தி வருகின்றன மத்திய-மாநில அரசுகள்.
சுமார் 500 தொற்றுகள் இருந்த சமயத்தில் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, தற்போது பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்தை தாண்டி எகிறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஊரடங்கை தளர்த்துவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஒருவேளை, உலக சுகாதார அமைப்பும் ஆட்சியாளர்களும் சொல்லிவந்த ‘கொரோனாவுடன் வாழப் பழகுங்கள்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டனவா மத்திய-மாநில அரசுகள்? அல்லது பெரும்பாலான மக்களுக்கு கொரோனாவை பரவவிட்டு, அதன்மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை (Herd Immunity) உருவாக்க முடிவு செய்ய விட்டனவா? மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சிலரிடம் கேட்டோம்.
பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்!
சென்பாலன், மருத்துவர்
“மூன்றுகட்ட ஊரடங்கிற்குப் பிறகும் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை பயமுறுத்தும் அளவில் அதிகரிக்கிறது. இதை ஊரடங்கின் இயலாமையாகத்தான் பார்க்க வேண்டும்.
ஆரம்பத்தில் தத்தித் தவழ்ந்து அதிகரித்த புதிய தொற்றுகள் இப்போது பாய்ந்தோடும் வேகத்தில் அதிகரிக்கின்றன. மொத்த தொற்றுகள் எண்ணிக்கையின் அடிப்படையில் நோக்கினால் நாம் இன்னும் சில தினங்களில் சீனாவை முந்திவிடுவோம். புதிய தொற்றுகள் குறைவதற்கான எந்த அறிகுறியுமே இல்லாத தற்போதைய நிலையில் ஊரடங்கை விலக்குவது மிகவும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
ஊரடங்கை நீட்டிக்க முடியாதா என்றால் இந்தியா போன்ற வறுமைக் கோட்டிற்கு கீழே அதிக மக்கள் வசிக்கும் நாடுகளில் பசி, பட்டினி, வேலையிழப்பால் மரணங்கள் நேரும். இதனால், ஊரடங்கை நீட்டிக்கவும் முடியாது, விலக்கவும் முடியாது எனும் நிலையில், அரசுகள் முன் உள்ளது இருவகையான வாய்ப்புகள்தான்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசியப் பொருட்கள், பண உதவி, இலவச உணவு, தொழில் பாதுகாப்பு, சலுகைகள் என மத்திய, மாநில அரசுகள் அனைத்து மக்களையும் பொருளாதார ரீதியில் ஆதரித்து ஊரடங்கை நீட்டிக்கலாம். அல்லது, பட்டினிச் சாவுகளைத் தவிர்க்க ஊரடங்கைத் தளர்த்துகிறோம், நோயின் ஆபத்து அதிகமாக உள்ளது, மக்களே சுயமாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கலாம்.
முதல் வகையில் பட்டினிச் சாவுகளைத் தவிர்க்கலாம். பொதுமக்களிடம் இருந்தும் ஊரடங்கிற்கு போதிய ஆதரவு கிடைக்கும். ஊரடங்கின் நோக்கமும் நிறைவேறும். நோயின் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்த பின் படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தலாம். ஆனால், அரசின் செலவீனம் அதிகரிக்கும்.
இரண்டாம் வகையிலும் பட்டினிச் சாவுகளைத் தவிர்க்கலாம். ஆனால், அதிக மக்கள் நோயின் தாக்கத்திற்கு ஆளாக நேரலாம். நோயின் பரவலைக் கட்டுப்படுத்த பலகாலம் ஆகலாம். இத்தனை நாள் ஊரடங்கால் ஏற்பட்ட ஒரு முக்கிய நன்மை நோய் பற்றிய விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வை வைத்து நோயிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பை மக்களிடமே விட்டுவிடலாம். ஆயினும் நோய் பரவும் சூழலில் வேலை செய்வோருக்கு (காய்கறி விற்பனையாளர், பேருந்து நடத்துனர் போன்றோருக்கு) நோய் தொற்றும் ஆபத்துகள் அதிகம் உள்ளன. ஆனால், அரசின் நிதிச்சுமை உயராது. அரசிற்கு பொறுப்புகள் குறையும்.
இதுவரையில் குறிப்பிடத்தகுந்த பொருளாதார உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் பொதுமக்களிடம் ஊரடங்கிற்கு எதிரான மனநிலையே இருக்கிறது. நோய் தொற்றின் பரவல் அதிகரிக்கும் இந்தச் சூழ்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுவது, மக்களை கொரொனாவோடு வாழ பழகிக்கொள்ளுமாறு அரசு கொடுக்கும் சமிக்ஞை என்றுதான் கருத வேண்டியுள்ளது. டெல்லி முதலமைச்சரும், மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளரும், இன்னும் பலரும் அதை வெளிப்படையாகவே கூறிவிட்டனர்.
ஊரடங்கு தளர்விற்குப் பின் முழுப் பொறுப்பும் மக்கள் மீதுதான் இருக்கப் போகிறது. முன்பு எப்போதையும் விட அதிகமான முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். முக்கியமாக வயதானோர், முன்னரே உடல் நலம் பாதிக்கப்பட்டோர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தோர் போன்றோர் அதிக பாதுகாப்புடன் இருக்கவேண்டும். ஊரடங்குக் கட்டுப்பாடுகள் இருப்பதாக எண்ணிக் கொண்டு அப்போது பின்பற்றிய சமூக விலகலைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். வயதானோர் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
‘ஹெர்ட் இம்யூனிட்டி’ எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி இப்போது பலரும் பேசுகின்றனர். தற்போது வரையில் தமிழ்நாட்டில் 0.01 சதவிகிதம் மக்கள் கூட நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறாத நிலையில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி பேசுவதற்கு இது தகுந்த நேரமல்ல.
மேலும், கொரொனா தாக்கியபின் வரும் எதிர்ப்பு சக்தி எத்தனை காலம் நீடிக்கும் என்பது குறித்தும் தெளிவான தரவுகள் இல்லை. ஏற்கனவே நம் சமூகத்தில் இருக்கும் பல நோய்களுக்கே இன்னும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை. கொரொனாவிற்கு எதிராக மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக பல ஆண்டுகள்கூட ஆகலாம். அதுவரையில் ஏற்படும் உயிரிழப்பு, பொருளிழப்புகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மந்தை எதிர்ப்பு சக்தியை மட்டும் நம்பி இருப்பது தற்போதைய சூழ்நிலையில் ஆபத்தான விஷயம்.
இதற்கு முன் ஏற்பட்ட கொள்ளை நோய்கள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரோ, அல்லது சிகிச்சைகான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரோ, அல்லது நோய் பரவ சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்பட்ட பின்னரோதான் குறைந்துள்ளன. இதில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால்தான் கொரொனாவும் குறையும்.”
அதிக உயிரிழப்புகளை சந்திக்க வேண்டும்!
அன்புச்செல்வன், மருத்துவ ஆராய்ச்சியாளர், இங்கிலாந்து ஹல் பல்கலைக்கழகம்
ஊரடங்கை தளர்த்திவிட அரசுகள் முயன்றுகொண்டு இருக்கும் கடந்த சில நாள்களில் மட்டும் கொரோனா தொற்றின் வேகம் பன்மடங்கு உயர்ந்திருப்பது மிகுந்த அச்சத்தையும் கவலையையும் தருகிறது. இது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியுடைந்த கதைபோல ஆகிவிடுமோ என்று அறிவியலாளர்களும் மருத்துவர்களும் அஞ்சுகிறோம். வெகுசில நாடுகளைத் தவிர, உலகெங்கும் கொரோனா பரவுவேகம் உயர்ந்து கொண்டிருப்பதை, ஒவ்வொரு நாளும் உயர்கின்ற மரணங்களின் எண்ணிக்கை உணர்த்துகிறது.
மக்கள்தொகை குறைந்த, கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்த தைவான், ஜெர்மனி, சுவீடன் உள்ளிட்ட சிலநாடுகள்தாம் ஊரடங்கைத் தளர்த்தியிருக்கின்றன. ஆனாலும், முகக்கவசம், தனிமனித விலகல், கூட்டம் சேர்வதற்கு தடை போன்ற முன்னெடுப்புகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் நோய்த்தொற்று வேகம் அதிகமாகியிருப்பதன் மூலம் அடிப்படை இனப்பெருக்க விகித (R0) மதிப்பு மூன்று முதல் நான்கு வரையில் இருக்கக்கூடும். ஆகவே, பரவுவேகத்தைப் பொருட்படுத்தாது, ஊரடங்கைத் தளர்த்துதல், மக்கள் கூடும் இடங்களான சந்தைகள், பொதுப் போக்குவரத்துகள் மற்றும் மதுக்கடைத் திறப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கும்போது, நூற்றுக்கணக்கான மனித உயிர்களை நாம் விலைகொடுக்க வேண்டுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.
இதுவரை, கொரோனா வைரஸின் முள்கள் போன்ற புரதங்கள், இனிமக்காடி எனப்படும் ஆர்.என்.ஏ. உள்ளிட்ட மரபணு வேதிப் பொருள்களில் மட்டும் ஏறத்தாழ 198 முறைகள் பிறழ்வுகள் (Mutations) நிகழ்ந்திருக்கின்றன என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நிறுவியிருக்கிறார்கள். மரபணுப் பிறழ்வுகளால் உண்டான வைரஸ்கள் ஒவ்வொன்றும் தனிப் பண்புகளுடன் மனித உடலுக்குள் செயல்படுகின்றன என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி மரபணுவியல் பேராசிரியர் லூசி வோன் ட்ராப் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு, மரபணுப் பிறழ்வுகளால், புதிய பண்புகளுடைய வைரஸ்களின் எண்ணிக்கை கூடும்போது, அவற்றிற்கான தடுப்பூசி கண்டுபிடித்தலில் கடுமையானத் தொய்வு ஏற்படக்கூடும். எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ஹெச்.ஐ.வி. வைரஸின் மரபணுக்களில் இதுபோன்ற தொடர் பிறழ்வுகள் ஏற்பட்டதால்தான் இதுவரை தடுப்பூசி எதுவும் எய்ட்ஸ்க்குக் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பீட்டளவில், மற்ற நாடுகளைவிட, இந்தியாவில் தொற்று வேகத்துக்கு ஏற்ப இறப்பு விகிதம் இல்லை என்பது சிறு ஆறுதலைத் தந்தாலும், அடுத்தடுத்த மாதங்களில் பரவுவேகம் அதிகமாகும்போது இறப்பு விகிதமும் உயரக்கூடும் என்னும் அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. வெறும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டபோது சமாளிக்கத் திணறிய நாம், வரும் நாள்களில் ஆயிரக்கணக்கானோருக்கு அதுவும் ஒரே சமயத்தில் தொற்று ஏற்பட்டுவிட்டால் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?
இங்கிலாந்தில் கடந்த நாற்பது நாள்களில் மட்டும் தோராயமாக, நாளொன்றுக்கு 700 பேர் வரை நோய்த் தொற்றினால் இறந்து போயிருக்கின்றனர். தற்போது இறப்புவிகிதம் குறைந்து வருவதைக் கொண்டு ஊரடங்கு சிறிதுசிறிதாக தளர்த்த முயலும் அரசுக்கு இங்கே கண்டனங்கள் வலுக்கின்றன. பிரித்தானியப் பேரரசின் அங்கமான வேல்சு மற்றும் ஸ்காட்லாந்து நாடுகள், தொற்றுவேகம் கட்டுக்குள் வரும்வரை ஊரடங்கு தொடரும் என்று அறிவித்திருக்கின்றன. ஆகவே, இந்திய அரசும் மாநில அரசுகளும் அறிவியல் மருத்துவ வல்லுனர்களின் உதவியுடன் கொரோனா வைரஸை எதிர்கொள்ள வேண்டும்.
கொரோனா பரவும் தன்மை குறைந்துள்ளது!
அரவிந்தராஜ், மருத்துவர்
ஒரு நோயின் தன்மையை இரண்டு கோணங்கள் கொண்டு ஒப்பிடுதல் அவசியம். ஒன்று பரவும் விகிதம்; மற்றொன்று இறப்பு விகி
தம். இதுவரை உலகை உலுக்கிப்போட்ட ஸ்பானிஷ் ப்ளூ (1918), சார்ஸ் (2003) ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இவை அதிக அளவில் பரவின. அதிக அளவில் அதிகமாக மக்களை கொன்று குவித்தன. 1918-இல் தாக்கிய ஸ்பானிஷ் ப்ளூ உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவிகிதம் மக்களை பாதித்து அதில் 50 மில்லியன் மக்களை கொன்றது.
கொரோனா வைரஸின் பரவும் தன்மையை R-Naught (R°) என்னும் அளவு கொண்டு கணக்கிடுகிறோம். R-Naught என்பது நோய்க்கிருமி தாக்கிய ஒருவர் எத்தனை ஆரோக்கியமான நபருக்கு அதை பரப்புகிறார் என்பதன் அளவீடே R°.
ஊராடங்கிற்கு முன்பான கொரோனா வைரஸின் R°- 4. ஊரடங்கு பிறப்பித்து 45 நாட்கள் கழித்த பின்பு கொரோனா வைரஸின் R°-1.8. அதாவது, ஊரடங்கிற்கு முன்பாக கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் 4 பேருக்கு கிருமியை பரப்பினார். ஊரடங்கு பிறப்பித்த பின் பரவல் 4 நபர்கள் என்பதில் இருந்து 1.8 பேருக்கு என்று குறைந்துள்ளது.
இந்த அளவு ஒன்றுக்கு கீழ் சென்று விட்டால்(R°<1) நாம் நோய்ப் பரவலை கட்டுக்குள் வந்து விட்டதாய் அர்த்தம். ஊரடங்கில் மக்களிடம் நெருங்கி பழகாமல் எவ்வாறு பரவலை கட்டுப்படுத்தி R° அளவை குறைத்தோமோ, அதே மாதிரி ஊரடங்கு தளர்விலும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி R° அளவை குறைத்தல் அவசியம். இந்த கொரோனாவின் தன்மையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறதே தவிர, அதிக மக்களை கொல்வதில்லை. எனவே, கொரோனாவை கண்டு மக்கள் பீதிகொள்ளத் தேவையில்லை. அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. கொரோனாவின் தாக்கம் எப்போது கட்டுக்குள் வரும் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. எனவே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசு கஜானாவின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கில் ஏற்படும் தளர்வுகள் நமக்கு உணர்த்தும் செய்தி கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்பதே. ஊரடங்கு தளர்த்தல் என்பது உங்களை பழைய வாழ்க்கைக்கு உட்படுத்த அல்ல. முறையான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொண்டு புதிய வாழ்க்கைக்கு உங்களை வரவேற்கவே. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கை கழுவுவது, முதியவர்கள் மற்றும் உடல் உபாதை கொண்டவர்கள் வெளியே வராமல் இருத்தல் என மக்கள் தற்போது பின்பற்றும் அனைத்தையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். பரிசோதனை அதிகமானதால் பாதிப்பு அதிகம்! ஃபரூக் அப்துல்லா, பொதுநல மருத்துவர் நாட்டிலேயே அதிகமான கொரோனா தொற்று பரிசோதனைகளை செய்துள்ள மாநிலம் தமிழகம். நமக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், ஆந்திரா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. அதிக பரிசோதனை செய்யப்படும் போதுதான் அதிகமான நோய் தொற்றாளர்களை கண்டறிய முடியும். தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டவர்களுள் பாசிடிவ் வந்துள்ளவர்களின் சதவிகிதம் 2.6 சதவீதமாக இருக்கிறது. இந்த அளவானது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் 10 சதவீதமாக இருந்தது. பரிசோதனைகளை அதிகப்படுத்தியதாலும் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை பரிசோதனைகளை கூட்டிய அளவுக்கு கூடாததாலும் 10 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயம். அதாவது பரிசோதனைகளை அதிகப்படுத்தும்போது, பாசிடிவ் ரேட் குறைந்தால், நோய் தொற்று நமது கட்டுக்குள் இருக்கிறது என்று பொருள். அதுவே பரிசோதனைகளை அதிகப்படுத்தும் போது பாசிடிவ் ரேட் கூடினால் நோய் தொற்று நமது கட்டுக்குள் இல்லை என்று அர்த்தம். கிட்டத்தட்ட நமது அளவுக்கு பரிசோதனை செய்துள்ள மஹாராஷ்ட்ராவில் பாசிடிவ் ரேட் 9 சதவீதமாக இருக்கிறது. இது அங்கே நிலைமை கட்டுக்குள் இல்லை என்பதை காட்டுகிறது. நாட்டிலேயே நோய்த் தொற்று அடைந்தவர்களில் மரண விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. 0.72 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது. அதாவது தொற்று பெறும் நூறு பேர்களுள் ஒருவருக்கும் குறைவாகவே மரணமடைகின்றனர். இதற்கு காரணம், பலம் குன்றிய வைரஸ், அதிகரிக்கப்பட்ட பரிசோதனைகள், மருத்துவ கட்டமைப்பு மற்றும் அரசு மருத்துவக் குழுவின் சேவை, பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகளற்ற நோய் தொற்றுகளாக இருப்பது. வீட்டில் முடங்கிக் கிடந்தாலும் கொரோனாவை விரட்டிட முடியாது. பழைய மாதிரி ஒன்றாகக் கலந்தாலும் கொரோனாவை ஒழிக்க முடியாது. அதனுடன் நாமும் நம்முடன் அதுவும் சேர்ந்து வாழ இருக்கிறோம். காரணம் கொரோனாவால் ஏற்படும் மரண விகிதங்களைக் காட்டிலும் நாட்டில் பொருளாதார பிரச்சனையால் பட்டினியால் ஏற்படும் மரணங்கள் அதிகமாகும் சூழல் ஏற்பட்டு விடும். எனவே, ஊரடங்குக்குப் பின்னும் கொரோனாவுடன் நாமும் நம்முடன் கொரோனாவும் சேர்ந்துதான் வாழ இருக்கிறோம் என்பதை மனதில் நன்கு பதிய வைத்துக்கொள்ள வேண்டும்,