சானிடைசர் சங்கடங்கள்! கைகழுவுவதிலும் கவனம்

25

– ஷானு

கொரோனா தொற்றால் இப்போது நாம் அடிக்கடி பார்க்கும் பயன்படுத்தும் பொருளாக மாறியிருக்கிறது `சானிடைசர்’. ஆனால், தொடர்ந்து இந்த சானிடைசரை பயன்படுத்தியதால் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு நிறைய பேர் படையெடுக்க, இப்போது அதன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற குரல்களும் எழத் தொடங்கியுள்ளன. சானிடைசரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

வெளிர் நீலத்தில், பிங்க் நிறத்தில் அழகான பிளாஸ்டிக் பாட்டிலிலிருந்து சில சொட்டுகள் உள்ளங்கையில் விட்டு, இரண்டு கைகளிலும் தேய்த்தால் ஊட்டியையும் கொடைக்கானலையும் இரண்டு கைகளிலும் அள்ளியெடுத்தது போல் `ஜில்’ என உடல் முழுவதும் ஒரு குளிர்ச்சி பரவுவதை சமீப காலத்தில் அனுபவிக்காதவர் இருக்க முடியாது. கொரோனா விழிப்புணர்வாக விரல்களை மூக்கின் அருகில் கொண்டு போகாதீர்கள் என்று சொன்னாலும், அப்படியே அந்த கைகளை மூக்கின் அருகில் கொண்டு சென்று ஆழமாக உள்ளிழுத்து, அதன் மிண்ட் வாசனையை அனுபவிப்பது ஒரு அலாதி ஆனந்தம்.

ஆனால், இயற்கைக்கு மாறாக செயற்கையாக செய்யப்படும் எந்த விஷயமும் அதன் பின்விளைவை அல்லது பக்கவிளைவை நிச்சயம் விட்டுச்செல்லும் என்கிற விதிக்கு ஏற்ப, தற்போது நாம் கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் கிருமிநாசினியான சானிடைசரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடிய கரோனா வைரஸ், இந்தியாவிற்குள் நுழைய ஆரம்பித்தபோது இந்திய மருத்துவ கழகம் அதை எதிர்கொள்ள தயாராகத்தான் இருந்தது. அப்படி அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக மிகப் பிரதானமான சொன்ன விஷயம் ‘கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள்; அதற்கு வாய்ப்பு இல்லாத இடத்தில் கைகளை சுத்தப்படுத்த சானிடைசர் எனும் கிருமி நாசினியை பயன்படுத்துங்கள்’ என்பதுதான்.

ஆனால், நீண்ட நாட்களாக இந்த சானிடைசரை பயன்படுத்துவது உடல் உபாதைகளை, தோல் நோய்களை உண்டாக்குவதாகவும் தற்போது அதே மருத்துவ உலகம்தான் பேசத் தொடங்கியுள்ளது.

பிரச்சினை இருந்தாலும் பயன்படுத்துங்கள்!

இதுகுறித்து ஓய்வுபெற்ற `மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர்’ மருத்துவர் மோகனசுந்தரத்திடம் பேசினோம். “சானிடைசர் இந்த காலகட்டத்தில் மிகவும் தேவையானதுதான். ஆனால், அதைவிட சுலபமானது சோப்பும் தண்ணீரும் பயன்படுத்தி கைகளை கழுவுவது. சோப்பை நன்கு பயன்படுத்தி முழங்கை வரைக்கும் விரல்களுக்கிடையே நன்கு தேய்த்து கையை கழுவுவது ரொம்ப ரொம்ப அவசியம்.

ஒவ்வொரு முறையும் ஒரு வேலையைத் தொடங்கும் முன், வேலையை முடித்தபின், இடையில் வேறு ஏதாவது நோய்த்தொற்று இருக்கக்கூடிய இடத்தை தொட்டு விட்டோம் என்கிற சந்தேகம் வரும் போதும் இப்படி கையை கழுவ வேண்டும். இதனை செய்தாலே இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதை 60 முதல் 80 சதவீதம் தவிர்த்து பாதுகாப்போடு இருக்கமுடியும். அதற்குமேல் உள்ள 20 சதவிகித சிக்கலையும் இந்த செயல் சானிடைசர் பயன்பாடு தீர்த்துவிடும்.

இந்த சானிடைசர் பயன்பாட்டுக்கு காலக்கெடு எல்லாம் கிடையாது. ஒவ்வொரு நாளும் எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். இந்த சானிடைசர்களில் இது நல்லது இது கெட்டது என்கிற பேதம் கிடையாது. ஆல்கஹால் கலந்துள்ள ஏதாவது ஒரு சானிடைசரை பயன்படுத்தினாலே போதும்.

இதனை ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு பெயரில் ஒவ்வொரு விலையில் தயாரிக்கிறார்கள். ஃபார்மசி உடன் இணைந்து உள்ள மருத்துவமனை உள்ள இடங்களில் அவர்களே தயாரிக்கிறார்கள். கெமிக்கல் கலக்காமல் படிகம் பயன்படுத்தியும் இந்த கிருமி நாசினியை இயற்கை முறையில் தயாரிக்கிறார்கள்.

ஆனால், சமீபகாலமாக `இந்த சானிடைசரை தொடர்ந்து பயன்படுத்துவதால் கைகள் வறட்சி ஆகிறது; கைவிரல்களில், விரல் சந்துகளில், கையின் பின்பக்கம் சின்னசின்ன கொப்புளங்கள் வந்து புண்ணாகிறது’ என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இது `அலர்ஜி’ எனப்படும் ஒவ்வாமை சம்பந்தப்பட்ட பிரச்சனைதான். இது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான ஒவ்வாமை இருக்கும். அதற்காக சானிடைசர் பயன்படுத்துவதை நிறுத்திவிட முடியாது. இந்த காலத்தில் தேவை கருதி கட்டாயம் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.

அப்படி கைகள் வறட்சியாக உணர்பவர்கள் சாதாரண தேங்காய் எண்ணெய்யை அல்லது கடை களில் விற்கும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம். கடையில் கிடைக்கும் சந்தனத்தை வாங்கி அரைத்து பூசிக் கொள்ளலாம். சானிடைசரை பயன்படுத்துவதை நிறுத்திய பின்பு இந்த கொப்புளங்கள் வருவதும் நின்றுவிடும். அதற்கு மேல் தாக்கம் அதிகமாகி கொப்புளங்கள் ஏற்பட்டால் அருகில் உள்ள தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

இது கைகளில் உள்ள மனித உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து அழிக்கிறது என்ற புகாரும் உண்மைதான். ஆனால், பக்க விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் இந்த வைரஸ் தொற்று பிரச்சனை தீரும் வரை இதனைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்” என்கிறார் உறுதியாக.

பக்க விளைவுகள் நிச்சயம்!

`சானிடைசரில் கலக்கப்படும் வேதியியல் பொருட்கள் என்ன? நீண்ட நாட்கள் பயன்படுத்தும் போது அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?’ என்று வேதியியல் விஞ்ஞானி, முனைவர், மனோஜ் தேவராஜிடம் கேட்டோம். இவர் இஸ்ரேல், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வேதியியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்துவருகிறார். கொரோனா வைரஸ் வெடித்துக் கிளம்பிய நேரத்தில் சீனாவின் அதே வூஹான் மாகாணத்தில் ஹௌஜாங் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி விட்டு கடைசியாக இந்தியாவுக்கு வந்த விமானத்தில் திரும்பியுள்ளார்.

“இந்த சானிடைசர் எனப்படும் வார்த்தை கொரோனா வைரஸ் தாக்குதல் வந்த பிறகு உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தையாக இருக்கிறது. நாம் ஒரு இடத்திற்குள் நுழையும்போது அல்லது வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வரும்பொழுது சோப்பு + தண்ணீர் கிடைக்காத இடத்தில் பயன்படுத்தப்படும், ஆல்கஹாலை அடிப்படையாகக்கொண்ட திரவம் இது. இதில் 70 முதல் 95 சதவீதம் வரை ஆல்கஹால் மட்டும்தான் இருக்கும். கூடவே எத்தனால் மோனோ புரோபனால், புரோபனால் உள்ளிட்டவை கலந்து இருக்கும். வெறும் ஆல்கஹால் விரைவில் ஆவியாகி காற்றில் கலந்துவிடும். அதனால் அதனுடன் கிளிசரின் சேர்த்து சானிடைசர் தயாரிக்கிறார்கள்.

ஆல்கஹால் இல்லாத சானிடைசர் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார மையம் சொல்கிறது. ஆனால், சானிடைசரில் ட்ரை கிளோசம் சேர்க்கிறார்கள். இதை சேர்ப்பதால் கைகளில் உள்ள நல்ல பாக்டீரியாவையும் அழித்துவிடும்.

சமீபத்தில் வெளியான ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் இந்த சானிடைசரில் ‘பிஸ்பினால் ஏ’ கலக்கப்படுவதாக சொல்லப்பட்டது. இது ஒரு நச்சுப்பொருள். கடினமான பிளாஸ்டிக் கன்டெய்னர்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வேதியியல் பொருள். இதைத் தொட்டால் கைகழுவாமல் சாப்பிடக் கூடாது. அதனால்தான் உலக சுகாதார மையம் ஆல்கஹால் உள்ள கிருமிநாசினிகளை பயன்படுத்த அறிவுறுத்து கிறார்கள். சோப்பு இல்லாத இடத்தில் இது சுலபமாக கையில் இருக்கும் கிருமிகளை அழிக்கிறது என்கிற ஒரு நன்மை இருந்தாலும் சில தீமைகளும் இதில் இருக்கத்தான் செய்கிறது.

அதிகமாக ஆல்கஹால் கலக்கப்பட்ட சானிடைசர் எளிதில் தீப்பற்றக் கூடியது என்கிற ஒரு ஆபத்தும் உள்ளது. சனிடைசரில் உபயோகப்படுத்தப்படும் வாசனை திரவியம் மற்றும் அதன் நிறம் சிறுபிள்ளைகளை அதிகமாக ஈர்க்கும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருக்கும். இதனை அடிக்கடி பயன்படுத்துவதால் , சுவாசித்து பார்ப்பதால், `ஆல்கஹால் நச்சு’ ஏற்பட்டு குழந்தைகளுக்கு தலை சுற்றல், தலைவலி, சிலசமயம் மூளைகூட பாதிக்கப்படலாம்.

அதனால், வழக்கமான சோப்பு போட்டு கை கழுவும் முறையையே அதிகம் பின்பற்ற வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத இடங்களில் ஒருவேளை சானிடைசர் பயன்படுத்தும் நிர்ப்பந்தம் வந்தால் ஒரு சொட்டு இரண்டு சொட்டுகள் மட்டுமே கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் உபயோகப்படுத்தும் போது கண்டிப்பாக பெரியவர்களின் மேற்பார்வை இருக்க வேண்டும். குழந்தைகளின் கண்களில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சானிடைசரை தினம்தோறும் பயன்படுத்துவது நாம் கை கழுவும் முறையை மறந்துவிட வாய்ப்பாக அமையும். இதனால், நோய் தொற்றுக்கிரையாகி உடல் நலம் குன்றிவிடும். முக்கியமாக இதை கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உடலில் பூசினால் பக்க விளைவுகள் நிச்சயம் ஏற்படும்” என்று எச்சரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here