எம் அரசே… எம் அரசே ஏன் எம்மை கைவிட்டீர்?

24

-ராம் சங்கர்

கொரோனாவுக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை பெறலாம் என அரசு சொல்வது சரியா?

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வந்தவர் என்றாலே, பாதிப்பில்லாவிட்டாலும் தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் தனிமைப்படுத்திய அரசு, இப்போது கொரோனா நோயே வந்தாலும் வீட்டிலிருந்தபடியே சரி செய்துகொள்ள வேண்டியதுதான் என்று சொல்லியுள்ளது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா போன்ற தொற்று நோய்களுக்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறலாம் என்ற தமிழக அரசின் முடிவு ஆரோக்கியமானதா ஆபத்தானதா? நிபுணர்களுடன் பேசினோம்.

அறிகுறி இல்லாத கொரோனா ஆபத்து இல்லாததா?

அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் என்ற சொல்லாடல் இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் வரை அறிகுறியற்றவர்கள்தான் என சுகாதாரத் துறை செயலர் சொல்லியுள்ளார். இதனால்தான், பெரும்பான்மையானோருக்கு பெரிய பாதிப்பில்லை; எனவே வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்ற வாதமும் வலுத்துள்ளது.

ஆனால், “அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளுக்கும் ஆபத்து பக்கத்திலேயே இருக்கிறது” என்கிறார்கள் மருத்துவ உலகினர்.

“ஒருவருக்குள் கொரோனா புகுந்தால் அது உடல் கூறுகளை தொந்தரவு செய்யும். சாந்தமான மனநிலையோடு சீராக செயல்பட்ட செல்களை மதம் பிடிக்கச் செய்யும். இதனால் காய்ச்சல், தலைவலி, நுரையீரல் கோளாறு போன்ற பிரச்சனையை எந்நேரத்திலும் ஏற்படுத்தலாம். இதனையே அறிகுறி எனச் சொல்கின்றனர்.

ஆனால், அபரிமிதமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர்களின் செல்கள் திடமாக இருக்கும். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் மேலே குறிப்பிட்ட எந்த பிரச்சனையும் வராது. இதுவே அறிகுறிகளற்ற கொரோனா எனப்படுகிறது. இவர்களைத்தான் வீட்டில் வைத்து சிகிச்சை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்கிறது.

அதேநேரம், இது போன்றவர்களுக்கு உறுதியாக இறுதிவரை அறிகுறி வராது எனச் சொல்லமுடியாது. அறிகுறியில்லாதவர்களைப் பொருத்தவரை தன்னலம் கெடாது என்றாலும் பொதுநலம் கெடும். பரவும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால் வீட்டில் இருப்பது ஆரோக்கியமானதா” என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்படுகிறது.

சென்னையை சார்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனாவால் சமீபத்தில் மரணித்தார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது எந்த அறிகுறியும் இல்லை. ஆனாலும், மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலும், திடீரென உயிர் பிரிந்தது. அவர் இறக்கும் வரை அவர் உடலில் எந்த அறிகுறியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயலாமையை மறைக்கவே நடவடிக்கை!

வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு தமிழக அரசு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் ஒன்றை அளிக்கிறது. அதில் முககவசம், கையுறை, ஹைட்ராக்ஸிக்குளோரோக்வின், சின்க் மாத்திரைகள், சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர், மாஸ்க், உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்த பட்டியல் போன்றவை அதில் இருக்குமென தமிழக அரசு அறிவித்துள்ளது பாதிக்கப்பட்டவர்கள் தனியறையில் இருக்க வேண்டும், அவர்களை பார்த்துக் கொள்ள கேர் டேக்கர் ஒருவர் அவசியம், தனி கழிவறை வசதி அவசியம் போன்றவற்றையும் தமிழக அரசு அறிவுறுத்துகிறது.

அரசின் இம்முடிவு குறித்து மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். “இதை மக்களை கைவிடும் அரசின் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கிறேன். கொரோனா போன்ற நோய்கள் தமிழகம் இதுவரை பார்த்திடாத ஒன்று. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை விருப்பப்பட்டால் வீட்டிற்கு செல்லுங்கள் எனச் சொல்வது ஒருபோதும் ஏற்புடையதல்ல. நோயாளிகள் பூர்ண நலம் பெறும் வரை மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும்.

மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் இருக்கச் சொன்னால் குடும்ப உறுப்பினர்கள்தான் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் தமிழக அரசு என்னதான் அறிவுரைகளை வழங்கினாலும் குடும்ப உறுப்பினர்களும் மருத்துவர்களும் ஒன்றாகிவிடாது.

தமிழக சுகாதாரத் துறை, “எங்களிடம் போதுமான படுக்கை வசதிகள் இருக்கின்றது. தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளையும் கைப்பற்றி படுக்கை வசதிகளை மேம்படுத்துவோம்” எனக் கூறியவர்கள் இப்போது வீட்டிலேயே இருங்கள் எனச் சொல்வது சரியாகப் படவில்லை.

ஒருவேளை எண்ணிக்கை அதிகரித்தால் தங்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது போல் தெரிகிறது. இந்த மூடிவை திரும்பப் பெற்று, அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளையும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் வைப்பதே நல்லது. இல்லையெனில் சமூகப் பரவலை தமிழகம் சந்திக்கும் அவலம் ஏற்படும்” என்கிறார்.

சமூகப் பரவலுக்கு வித்திடும்!

இதுதொடர்பாக நம்முடன் பேசிய பேராசிரியர் உமா, “கொரோனா தொற்று தொடர்பான இதுவரையான தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதுதான். ஆனால், இப்போது திடீரென கொரோனா நோயாளிகளை வீட்டில் இருக்கச் சொல்வது அச்சதை ஏற்படுத்துகிறது. நோயாளிகளை பார்த்துக்கொள்பவர் நிச்சயமாக தாய், தந்தை, மனைவி போன்றவர்களாகத்தான் இருப்பர். பாசப் பிணைப்புக்கு மத்தியில் சமூக விலகல் காற்றில் பறக்கவிடப்பட வாய்ப்பு அதிகம். இது பாதிப்பை அதிகப்படுத்தும்.

மேலும், திடீரென ஏதேனும் அவரச உதவிகள் தேவைப்பட்டால் வீட்டில் இருந்துகொண்டு என்ன செய்ய முடியும். வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வந்தாலே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த வீடு அந்நியப்படுத்தப்படுகிறது. இதிலும் கொரோனா நோயாளி வீடு என்றால் சுற்றத்தார் அவர்களை பார்க்கும் விதம் அந்த வீட்டு உறுப்பினர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும்.

நம்பிக்கை தரும் இல்லம்!

ஆனால், இது ஆரோக்கியமான நடவடிக்கைதான் என்கிறார் மருத்துவ மாணவி விமலா. “பொதுவாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மைத் தொற்றிக்கொள்ளும். இப்போது, கொரோனா நோய் காலத்தில் மருத்துவமனைக்கு டெஸ்டிங் செல்ல வேண்டும் என்றாலே அச்சம் அதிகரிக்கிறது. அதிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உளவியல் ரீதியாக தளர்ந்து போக வாய்ப்புகள் உண்டு. இந்நேரத்தில் வீட்டிலேயே இருப்பது இதற்கு மருந்தாகலாம்.

உடலில் உள்ள மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தியே நம்பிக்கைதான். ஆனால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு இது அறவே இருப்பதில்லை. மன அமைதியும் நோயை வென்று வரும் என்ற நம்பிக்கையையும் வீட்டில் இருக்கும் சூழல்தான் ஏற்படுத்தித் தரும். அதே சமயம் மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைக்கு மாறாக செயல்பட்டால் நோய் பரவி பல ஆபத்துகளை அதிகரிக்கும் என்பதை மறுக்க முடியாது. எனவே, மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்கிறார்.

அச்சம் தேவையில்லை!

தற்போது தமிழக அரசின் ஆணைப்படி ஒரு நபருக்கு கொரோனா வந்தால் அவர் வசிக்கும் தெருக்கள் சீல் வைக்கப்படும். சீல் வைக்கப்பட்ட இடங்களில் எந்த தளர்வும் செல்லாது. அத்தியாவசிய தேவைகளுக்குகூட வெளியில் செல்வதற்கு அனுமதி பெற வேண்டும். இதனால் ஒரு வீட்டில் உள்ளவருக்கு கொரோனா வந்தால் கிட்டதட்ட 100 வீடுகள் முடக்கப்படுகிறது. அப்படி முடக்குவது கட்டாயம்கூட. ஆனால், வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றால் இப்படி பகுதிகளை முடக்குவது அதிகரிக்குமா? இதனால் சுற்றத்தார் சிரமங்களுக்கு உள்ளாக மாட்டார்களா? வீட்டில் இருக்க அதிக எண்ணிக்கையிலானோர் விருப்பம் தெரிவித்தால் மீண்டும் மாநிலம் முடங்க வேண்டிய சூழல் ஏற்படுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர் சுமந்த் சி. ராமனிடம் பேசினோம். “இது இன்று உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு நடைமுறைதான். அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால், மருத்துவமனையில் படுக்கைப் பற்றாக்குறை வந்தபோது நோயாளிகளில் அறிகுறிகள் இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களை வீட்டிலேயே இருக்க செய்தது அந்நாட்டு அரசு.

அதேநேரம், நாம் அச்சப்படுவது போல யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்துவிட முடியாது. அரசு மருத்துவமனைகளில் பரிசோதித்து பாஸிட்டிவ் என தெரிந்து வீட்டில் இருக்க விருப்பம் தெரிவித்தால் அரசு அதனை பரிசீலிக்கும். அவர்களின் வீட்டை சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்வார்கள். கொரோனா நோயாளிகள் தங்க தக்க இடமாக இருக்கிறதா என்ற ஆய்வுக்கு பிறகே அனுமதி தரப்படும்.

மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து அறிவுரைகளையும் மருத்துவர்கள் தருவார்கள். தேவையான மருந்து பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் தரப்படுகிறது. எல்லாரையும் வீட்டில் இருக்க சொல்கிறார்களோ என்ற ஐயமும் அச்சமும் வேண்டாம். அறிகுறிகள் இருந்தாலோ, வயது முதிர்ந்திருந்தாலோ அவர்கள் வீட்டில் இருக்க அனுமதியில்லை.

வீட்டிலிருந்தாலும் பாதிக்கப்பட்ட நபர் தன் அறையை வீட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும். முதலில் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பான இடைவெளியை சரிவர பின்பற்றவேண்டும். அவர்களுக்கு ஆறுதலாய் இருப்போம் என அருகிலிருந்தால் ஆபத்துதான்” என்று எச்சரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here