மதுக்கடைக்கு போடுங்க பூட்டு! அரசு வருவாய்க்கு இதோ மாற்று!

20

– சு.வீரமணி

ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான ஆலோசனைகள்!

பூரண மதுவிலக்கு என்பதுதான் இப்போது தமிழகம் முழுவதும் தாய்மார்களின் ஒரே கோரிக்கை. கொரோனோவால் தற்காலிகமாக மூடப்பட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்று இளைய தலைமுறையும் கொதிக்கிறது. ஆனால், ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடிக்கு மேல் வருமான இழப்பை சந்திக்க அரசு தயங்குகிறது. மது வருமானத்துக்கு மாற்று என்ன?

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் செயலாளர் வீரப்பனிடம் பேசினோம். “மது விற்பனை மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு 20 முதல் 30 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது என்ற ஒரு கருத்தினை மட்டுமே பார்க்கக்கூடாது; அந்த வருமானத்தின் இன்னொரு பக்கமான மது மூலமாக நடக்கும் விபத்துகள், குற்றச்செயல்கள், அதனால், உருவாகும் பொருளாதார இழப்புகளை ஒப்பிட்டு பார்த்தால் மது விற்பனையால் அரசுக்கு நட்டம்தான் என்பது தெரியவரும்.

வருவாய்தான் அரசுக்கு முக்கியம் என்றால், ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேலாக வருமானம் கொடுக்கும் சில வழிகளை நாங்கள் முன்மொழிகிறோம்.

தாது மணல் & ஆற்று மணல் விற்பனை

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களில் தாதுமணல் எடுக்கும் வணிகம் என்பது இப்போது தனியார் வசம் உள்ளது. தமிழக அரசே இந்த தாதுமணல் விற்பனை வணிகத்தை அரசு நிறுவனம் மூலமாக மேற்கொண்டால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைக்கும். அதுபோல ஆற்று மணல் குவாரிகளில் இருந்து அரசே தனது நிறுவனம் மூலமாக நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடிக்கும் மேலாக வருவாய் கிடைக்கும்.

மின் துறையை மேம்படுத்துதல்

இப்போது அரசுக்கு கூடுதல் செலவு வைக்கும் துறையாக மின் துறை உள்ளது. தமிழக அரசு தனியார் நிறுவனங்களிடமிருந்து 7 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்தி வாங்குகின்றனர். இந்த செலவை குறைக்க வேண்டுமானால் அரசே மின் உற்பத்தியில் இறங்க வேண்டும். ஏற்கனவே இருக்கக்கூடிய மின்நிலையங்களை நவீனப்படுத்தி கூடுதல் மின்சார உற்பத்தி செய்வதுடன், காற்றாலை, சூரிய ஒளி போன்ற மின் நிலையங்களை மாநிலம் முழுவதும் நிறுவி மின்சார உற்பத்தி அதிகரிக்க வேண்டும். இதன்மூலமாக பல ஆயிரம் கோடி அரசுக்கு செலவு மிச்சமாகும், அதிகளவில் வருமானமும் கிடைக்கும்.

கட்டிடங்களை வரைமுறைப்படுத்துதல்

தமிழகத்திலுள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் முறையான அனுமதி பெறாமல் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை முறைப்படுத்தி அதற்குரிய கட்டணத்தை வசூலித்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி வருவாய் கிடைக்கும்.

உள்ளாட்சி தணிக்கை

கடந்த 20 ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வரவு, செலவு கணக்குகள் சரியாக தணிக்கை செய்யப்பட்டு நிதி இழப்புக் குறிப்புரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், பல அரசியல், நிர்வாக காரணங்களால் இவற்றின் மீது இதுவரை முறையாக நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு இந்த குறிப்புரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால். அரசுக்கு 20 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும்.

சுற்றுலா மேம்பாடு

தமிழகத்தில் சரித்திர, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள், கலைச் சின்னங்கள் 3000க்கும் மேல் இருக்கின்றன. இவற்றில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். இதுபோல ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு, வால்பாறை போன்ற சுற்றுலா தளங்களின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழகத்தில் உள்ள வரலாறு மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை மேம்படுத்தினால் தமிழகத்துக்கு குறைந்தது ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும். கேரளா, கோவா, வடகிழக்கு மாநிலங்கள் ஆண்டுக்கு தலா 10 ஆயிரம் கோடிக்கும் மேலாக சுற்றுலா வரி மூலமாக வருமானம் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது.

அரசுத் துறையை மறுவரையறை செய்தல்

அரசுத்துறையில் பல தேவையற்ற பணியிடங்கள் மற்றும் தேவையற்ற துறைகள் உள்ளன. இவற்றை கண்டறிந்து அந்த பணியிடங்களை, துறைகளை மாற்றியமைத்து அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை உருவாக்கினால் பல கோடி நிதி மிச்சமாகும். அதுபோல அரசு நிர்வாகத்தில் எல்லா அதிகாரத்தையும் ஒருவரிடமே குவிக்காமல் மண்டல, மாவட்ட, வட்ட அளவில் உள்ள ஆட்சித் தலைவர்களுக்கு அதற்கான அதிகாரத்தை பகிர்ந்தளித்தால் அரசின் நிர்வாக செலவு பெருமளவு குறையும். பல வளர்ச்சிப் பணிகளுக்கான அதிகாரத்தை அந்தந்த பகுதியில் உள்ள அரசு அதிகாரிக்கு வழங்கினால் ஆண்டுக்கு பல கோடிகள் மதிப்புள்ள தேவையற்ற செலவுகள் குறையும்.

போக்குவரத்து துறையில் வருமானம் பெருக்கலாம்

இப்போது தமிழகத்தில் போக்குவரத்து கழகங்கள் பெரும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் இந்த துறையில் உள்ள ஊழலும் நிர்வாக முறைகேடுகளும்தான். நாடு முழுவதும் சில பேருந்துகளை இயக்கும் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபத்தோடு இயங்கிக் கொண்டிருக்கையில், அரசு பேருந்துகள் நட்டத்தில் இயங்குவது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, இந்த துறையில் உள்ள நிர்வாக சீர்கேடுகள், தேவையற்ற பணியிடங்கள், ஊழல் போன்றவற்றை குறைத்தாலே ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி லாபம் கொழிக்கும் துறையாக இது மாறும்” என்கிறார் வீரப்பன்.

மதுவுக்கு மாற்றான வருமானம் பற்றி பேசும் தற்சார்பு பொருளாதார வல்லுனர் ரமேஷ் கருப்பையா, “ஓர் அரசு வருமானத்தை பெருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதைவிடவும் முக்கியமானது தேவையற்ற செலவுகளை குறைப்பதும்தான். இன்றைய அரசு நிர்வாகத்தில் தேவையற்ற செலவுகளே அதிக அளவில் இருக்கிறது, அதனை குறைத்தாலே பல ஆயிரம் கோடி செலவுகள் மிச்சமாகும்.

அதுபோல அரசு பல மட்டத்திலும் தானும் தற்சார்பு அடைந்து, மக்களையும் தற்சார்பு அடைய வைத்தால் பல்லாயிரம் கோடி செலவுத் தொகையை மிச்சப்படுத்தலாம்.

விவசாயமே எதிர்காலம்
இந்த கொரோனோ காலத்தில் உலகம் முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கிக் கிடந்தது. ஆனால், ஒரு தொழில் மட்டும்தான் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தது, அது விவசாயம்.

எக்காலத்திலும் எப்போதும் ஒரு பொருளுக்கு தேவை இருந்துகொண்டே இருக்கிறது என்றால், அது உணவுதான். எனவே, வேளாண் தொழிலுக்கு ஒருபோதும் ஓய்வு இல்லை. அதனால், நமது வளமான விவசாயத்தையே முதன்மை தொழிலாக்கி, சிறப்பாகவும் புதிய யுத்திகளுடனும் வேளாண்மை செய்தால் உலகுக்கே வழிகாட்டும் வகையில் தமிழகம் மாறும். தேவைக்கேற்ற விளைப்பொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் உள்நாட்டு உணவுத் தேவையை நிறைவு செய்வதுடன், வெளிநாட்டு ஏற்றுமதியும் செய்யலாம்.

முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை செப்பனிட்டு, வேளாண்மையை பெருக்கினால், பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கலாம்.

உணவுப் பொருள்கள் மதிப்புக் கூட்டுதல்

தமிழகத்தில் நெல், வாழை, கடலை, சிறுதானியங்கள், தக்காளி மற்றும் பழங்கள் மிக அதிக அளவில் விளைகின்றன. அவற்றை முறையாக மதிப்புக்கூட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்தால் அதன்மூலமாக பல ஆயிரம் கோடிகள் வருமானம் கிடைக்கும், பல்லாயிரம் தொழில்வாய்ப்புகளும் உருவாகும்.

எரிவாயு தன்னிறைவு

இப்போது நாம் அதிக அளவிலான தொகையை எரிபொருள் வாங்குவதற்காக பயன்படுத்துகிறோம். அதற்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை நாமே உருவாக்கலாம். தாவர, விலங்கு, மனிதக் கழிவுகளை பயன்படுத்தி நாமே இயற்கை எரிவாயுவை உருவாக்கினால், ஒவ்வொரு வீட்டுக்கும் நம்மால் இலவசமாக எரிவாயுவை வழங்க முடியும். இதன்மூலமாக நமது அரசு ஒவ்வொரு ஆண்டும் எரிவாயுவிற்காக செலவு செய்யும் பல்லாயிரம் கோடி மிச்சமாகும், குப்பை மேலாண்மையும் எளிதாக நடக்கும்.

ஊருக்கேற்ற திட்டங்கள்

அரசுக்கு இப்போது அதிக அளவிலான செலவுக்கு காரணம், கிராமங்களிலிருந்து அதிக அளவில் நகரங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்காக செய்யும் நிர்வாக செலவுகள்தான். எனவே, நாம் ஒவ்வொரு கிராமத்திற்குமான தற்சார்பு தொழில் திட்டங்களை உருவாக்கினால் கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வது தடுத்து நிறுத்தப்படும், நகர் மக்களும் மீண்டும் கிராமங்களுக்கு திரும்புவார்கள். இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு மிச்சமாகும்.

மூலிகை வளத்தை பயன்படுத்துவோம்

நமது மாநிலத்தில் எண்ணற்ற மூலிகை வளங்கள் உள்ளன; மேலும், மூலிகைகளை எப்படி பயன்படுத்துவது என்று ஆய்வுப்பூர்வமாக செய்யப்பட்ட சித்த மருத்துவ சான்றுகளும் உள்ளன. நிலவேம்புக் குடிநீர் மூலமாக டெங்கு கட்டுப்படுத்தப்பட்டது, இப்போது கபசுர குடிநீர் நல்ல பலன் தந்துகொண்டிருக்கிறது. எனவே, நமது மூலிகை வளத்தை உலகமே உற்றுநோக்க தொடங்கியுள்ளதை, நாம் பெரும் வாய்ப்பாக கருதி இதனை மிகப்பெரிய தொழில்துறையாக உருவாக்கலாம். இங்குள்ள மூலிகைகளை பயன்படுத்தி மருந்துகளை உருவாக்கி அதனை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யலாம்” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here