வாவ் ஐந்தறிவு – 39

38

-ராஜேஷ் குமார்

விலங்குகளின் விந்தை உலகம்!

வாத்து முட்டாள் பறவையா?

நம்மால் எளிதில் பார்க்கக்கூடியப் பறவைகளில் கோழிகளுக்கு அடுத்தபடியாக உள்ளது வாத்துகள்தான். நம் இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 50 மில்லியன் வாத்துகள் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இவற்றின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது.

அனாட்டிடே (ANATIDAE) என்ற பறவை இனக்குடும்பத்தைச் சேர்ந்த வாத்துகளின் வகைகளை வாய் வலிக்க சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவிலுள்ள வாத்துகளில் மர வாத்து (WOOD DUCK), கொண்டை வாத்து (CHICK PEA DUCK), புள்ளி வாத்து, பர்மீஸ் வாத்து, வெள்ளை ரெக்கை வாத்து போன்றவை காலம் காலமாய் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை. பல்வேறு நாடுகளில் இருந்து குளிர் காலத்தில் இந்தியாவுக்கு கடல் கடந்து பறந்துவரும் வாத்துகளும் நிறைய உண்டு. அவற்றில் மார்பிள் வாத்து, செந்தலை வாத்து, வெள்ளைக்கால் வாத்து, சிரவை வாத்து, கருங்கலியன் வாத்து, மார்க்கலியன் வாத்து போன்றவை வின்டர் விசிட்டர்கள் (WINTER VISITORS).

மனிதர்கள் வளர்க்கும் வாத்துகளில் இந்தியன் ரன்னர், காக்கி கேம்பெல் போன்றவை முட்டைக்காகவும், பெகின், எயில்ஸ்பர், மங்கோலி போன்ற வாத்துகள் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

அனாடிடே குடும்பத்தைச் சேர்ந்த எல்லாப் பறவைகளுக்கும் வாத்து என்பதுதான் பொதுவான பெயர். இதில் அன்னப்பறவையும் அடக்கம். வாத்துகள் எல்லாமே நன்னீர் குளங்களிலும், உப்புள்ள கடல் நீரிலும் கூட வாழக்கூடியவை.

இதன் அலகு கரண்டி போன்று அகன்று தட்டையாகவும், எந்த இரையாக இருந்தாலும் அதை சுலபமாய்ப் பிடிப்பதற்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது. வாத்துகள் பல்வேறுபட்ட உணவை எடுத்துக்கொள்பவை.
புற்கள், நீரில் உள்ள பாசித் தாவரங்கள், மீன்கள், புழுக்கள், தலைப்பிரட்டை என்றழைக்கப்படும் தவளைக் குஞ்சுகள், நத்தைகள் போன்ற பலவகை உயிர்களை உணவாக எடுத்துக் கொள்கின்றன.

காக்கி கேம்பெல் வாத்து இனம் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. முட்டை உற்பத்தியில் மிகச் சிறந்த இனம் இது. நாளொன்றுக்கு தவறாமல் 1 முட்டை வீதம் ஆண்டு முழுவதும் முட்டைகள் கிடைக்கும். ஒரு முட்டையின் எடை 70 கிராம் வரை இருக்கும்.

அதேபோல் ‘வெள்ளை பெக்கின்’ எனப்படும் வாத்து வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பிராய்லர் கோழிகள் போல் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் குஞ்சு பிறந்த 40 நாட்களுக்குள் இரண்டரை கிலோ அளவுக்கு வளர்ந்து, விற்பனைக்குத் தயாராகிவிடும்.

கவனம் தேவை

பறவைகளையும் பிராணிகளையும் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு ஓர் எழுதப்படாத விதி உள்ளது. ஒரு முயலைப் பிடித்து தூக்க வேண்டும் என்றால், அதனுடைய நீண்ட காதுகளைப் பிடித்துத் தூக்க வேண்டும்.
பூனையைப் பிடித்து தூக்க வேண்டும் என்றால் அதனுடைய பிடரியின் மேல் உள்ள தோலை மட்டும் இரண்டு விரல்களால் பற்றித் தூக்கவேண்டும். கோழியைத் தூக்க, அதன் கால்களைப் பிடித்து தலைகீழாக கவிழ்த்துகொள்ள வேண்டும். ஆனால் எந்த ஒரு வாத்தாக இருந்தாலும் சரி, அதன் கழுத்தைப் பிடித்துதான் தூக்க வேண்டும். பிற பறவைகளைப் பொறுத்தவரை கழுத்தைப் பிடித்து தூக்குவது என்பது ஏறத்தாழ அது உயிரிழப்பில்தான் முடியும். ஆனால் வாத்துகளை மட்டும் அதன் கழுத்துப் பகுதியில்தான் தூக்க வேண்டும். மற்ற பறவைகளைப் போல் அல்லது வாத்தின் கால்கள் மரக்குச்சிகள் போல் மெலிதாகவும், வலுவில்லாமலும் இருப்பதால், அதன் கால்களைப் பிடித்து தூக்கினால் கால்கள் உடைந்துவிடும் அபாயம் உள்ளது.

மேலும் வாத்தின் கால்கள் அதன் உடம்பின் மையத்தில் இல்லாமல் சற்று பின்னால் அமைந்து இருப்பதால், பூமியின் புவியீர்ப்பை சரி செய்து கொள்வதற்காக பலசாலி போல் சிறிது மார்பை நிமிர்த்திக் கொண்டு நடக்க வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு. அதன் காரணமாகவே வாத்து நடையை சோம்பேறி மனிதர்களின் நடைக்கு உதாரணமாய்ச் சொல்வார்கள். அந்த நடைக்கு ‘லெதார்ஜிக் வாக்கிங்’ என்று பெயர்.

வாத்துகளின் கழுத்தைப் பிடித்துத் தூக்கும் போது அதற்கு வலியோ வேறு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்குக் காரணம், அதனுடைய கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் ட்ரெக்கியா (TRACHEA) என்னும் மூச்சுக்குழல் உறுதியான வளையம் போன்ற அமைப்புகளுடன் பிவிசி பைப் குழாய் போன்ற உறுதியுடன் காணப்படும். எனவே வாத்தின் கழுத்தைப் பிடித்து ஒருவர் தூக்கினால், அது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக இருக்கும்.

வாத்துகளுக்கு உடம்பில் ஈரப்பதம் இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக வாத்துகள் உடம்பில் ஈரம் இருக்கும் வரை தரையில் சுற்றி திரிந்துகொண்டு இருக்கும். ஈரம் காய்ந்ததும் நீரில் இறங்கி உடம்பை நனைத்துக் கொண்டு நீந்த ஆரம்பித்துவிடும். வாத்துகளை, கோழிகளைப் போல் அடைத்துவைத்து வளர்த்தால், அவை வெப்பத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் இறந்துவிடும். கோழிகளை விடவும் வாத்துகளை வளர்க்கும் செலவு குறைவு. முறையான தடுப்பு ஊசி போட்டு விட்டால் நோய் தாக்குதல் இருக்காது.

ஆண் வாத்து, பெண் வாத்து இரண்டுமே ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருந்தாலும் இரண்டு முக்கியமான வித்தியாசங்களை கவனித்து அது ஆணா? பெண்ணா? என்பதை உறுதி செய்துகொள்ளலாம். ஆண் வாத்து அதிகமான சத்தத்தை வெளிப்படுத்தாமல் “குவாக்… குவாக்…” என்று கத்தும். அதே நேரத்தில் பெண் வாத்து “பக்… பக்…” என்று அதிக சத்தத்தோடு கத்தும். ஆண் வாத்தின் கழுத்துப்பகுதி பச்சை நிறத்தில் காணப்படும்.

ஒரு பெண் வாத்தானது ஆண்டுக்கு 150 முட்டைகள் வரை இடும். வழக்கம்போல வாத்துகளும் அடைகாத்து குஞ்சு பொரிக்கும். சில வாத்துகள் முட்டையிட்டாலும் அதைக் கண்டுகொள்ளாமல் போய்விடும். கண்டு கொள்ளாமல் இருக்கும் முட்டைகளை செயற்கையான முறையில் குஞ்சு பொரிக்கும் வழியை பண்ணையாளர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். முட்டைகளை 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைப்பார்கள்.

பிறகு வெதுவெதுப்பான நீரை இரண்டாம் நாளிலிருந்து இருபத்தி மூன்றாவது நாள் வரை முட்டைகள் மீது தெளித்து வருவார்கள். தினசரி நான்கு தடவையாவது முட்டைகளைத் திருப்பிவைப்பார்கள். 28-வது நாள் முடியும் முன்பாக வாத்து குஞ்சு வெளியே வரும். இது கோழிக்குஞ்சை விட சற்று பெரிதாக காணப்படும்.

பொதுவாக வாத்துகள் பறக்காது என்று சொல்வார்கள். ஆனால் ஒரு சில வாத்துகளைத் தவிர பெரும்பாலான வாத்துகள் பறக்கவே செய்கின்றன. வனப்பகுதியில் வாழும் வாத்துகள் தாங்கள் இருக்கும் இடத்தில் போதுமான அளவுக்கு உணவு கிடைக்காத போதும், வேறு இடத்தைத் தேர்வு செய்யும் போதும், தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி கொண்டு வானத்தில் ஆங்கில எழுத்து ‘V’ வடிவில் பறக்கும்.

ஒரு முட்டாள் பறவையா?

மனிதர்கள் சண்டை போட்டுக் கொள்ளும்போது ‘மட வாத்து’ மாதிரி நடந்து கொள்ளாதே என்று கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பார்கள். கிராமப்புறத்தில் உள்ளவர்கள் இப்படி பேசுவது அதிகம். இந்த வார்த்தையில் உண்மை இல்லாமல் இல்லை.

ஒரு வாத்தைப் பிடித்து ஒரு கோணிப்பையில் போட்டு, அந்த கோணிப்பையின் வாயைத் திறந்து வைத்துக் கொண்டால், அதைப் பார்க்கும் மற்ற வாத்துகளும் ஏன் எதற்கு என்று யோசிக்காமல், வரிசையாய் வந்து அந்த கோணிப் பைக்குள் புகுந்துகொள்ளும். அதே போல் ஒரு வாத்தைப் பிடிப்பதற்காக அதைத் துரத்தினால், அது தப்பித்து கோழியைப் போல் அங்குமிங்கும் ஓடாது. மற்ற வாத்துகள் இருக்கும் பக்கமாய் ஓடிப்போய், தான் பிடிபடுவதற்கு ஏற்றார்போல் நின்று கொள்ளும். செம்மறி ஆடுகள் எப்படி சாய்ந்தால் ஒரே பக்கம் சாய்கிறதோ, அதே போல் வாத்துகளும் கூட்டமாக சிதறி ஓடாமல் ஒரே பக்கமாக ஓடும். இதனால் வாத்துகளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நூற்றுக்கணக்கில் ஓட்டிச்செல்வது சுலபம். ஒரு விஷயத்தில் சுயமாக முடிவு எடுக்காமல் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கும் ஒரு நபரை அவர் ‘ஒரு மட வாத்து’ என்று சொல்லப்படுவது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

வாத்துகளுக்கு நீந்துவது என்பது ஒரு பிடித்தமான செயல். இளம் வாத்துகள் நீரினின்றும் அவ்வளவு சுலபத்தில் வெளியே வராது. இவை வேகமாய் நீந்துவதற்குக் காரணம் அதன் விரல் இடுக்குகளில் வெப் (WEB) என்னும் சவ்வு, அதன் பாதங்களை துடுப்புகளாக மாற்றி இருப்பதுதான்.

குளம், குட்டை, ஏரி, வாய்க்கால், அணைக்கட்டு மற்றும் பேக் வாட்டர் போன்ற பகுதிகளில் வாத்துகள் அதிக அளவில் காணப்படும். நீரில் இருக்கும்போது அசைவம் ஆகவும் நீரிலிருந்து வெளியே வந்ததும் சைவமாகவும் தன்னுடைய உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்கின்றன. வயல்வெளிகளில் இருக்கும்போது சிதறிய தானிய வகைகள், விதைகள் போன்றவற்றை ருசி பார்க்கின்றன.

இப்படிப்பட்ட உணவுப் பழக்கம் வாத்துகளுக்கு இருப்பதால், வயல்வெளிகளில் அவை எச்சங்களின் காரணமாய் மண்ணின் வளம் மேம்படுகிறது. அந்த மண்ணில் விளையும் பயிர்கள் செழித்து வளர்கின்றன. இதனால் விவசாயிகள், வாத்துப் பண்ணை வைத்து இருப்பவர்களுக்கு, தங்களுடைய நிலங்களை பலப்படுத்துவதற்காக பணம் கொடுத்து வரவழைப்பதும் உண்டு. வாத்துப் பண்ணை வைத்திருப்பவர்களும், இதை ஒரு தொழிலாக மேற்கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துகளோடு வருடத்திற்கு ஒருமுறை டூர் கிளம்பிவிடுவார்கள். இப்போது சீன விவசாயிகள் தண்ணீர் இல்லாமல், வறண்ட நிலத்தில் வாத்துகளை வளர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் வாத்துகளை செல்லப் பறவைகளாக வளர்க்கிறார்கள். இதில் கரும்பச்சை நிறத்தில் இருக்கும் கிழக்கிந்திய வாத்துக்கு மவுசு அதிகம். இந்த வாத்து மனிதர்களை மிகவும் நேசித்து ஒட்டி உறவாடும்.

வாத்தின் வகைகள்

வாத்துகளில் பலவகை இருந்தாலும் டப்ளிங் டக் (DUBBLING DUCK), டைவிங் டக் (DIVING DUCK), எய்டர் டக் (EIDER DUCK), கோல்டன் ஐ டக் (GOLDEN EYE DUCK), மெர்கன்ஸர் டக் (MERGANSER DUCK), பெர்சிங் டக் (PERCHING DUCK), ஸ்காட்டர் டக் (SCOTER DUCK), ஸீ டக் (SEA DUCK), ஸ்டிஃப் டெய்ல் டக் (STIFF TAIL DUCK), டீல் டக் (TEAL DUCK) போன்ற வாத்துகள் டாப்-10 லிஸ்டில் இடம் பிடித்துள்ளன.

அன்னப்பறவை என்பது SWAN குடும்பத்தைச் சேர்ந்த வாத்து இனம்தான். இது அனாசெரினே (ANASERINAE) என்ற துணை குடும்பத்தைச் சேர்ந்தவை. சிற்பம், ஓவியம் முதலிய கலைகளிலும் அன்னத்திற்கு சிறப்பான இடம் உண்டு. பாலில் கலந்துள்ள நீரை விட்டு விட்டு, பாலை மட்டும் குடிக்கின்ற தனிப்பண்பு அன்னத்திற்கு இருப்பதாகச் சொல்லப்படுவது இதுவரை உறுதி செய்யப்படாத ஒன்று.

ஆனால் அன்னம், வாத்து, நாரை போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற ஒரு அமைப்பு உள்ளது. அந்த அமைப்பின் காரணமாக, அவை நீர்நிலைகளில் உள்ள தண்ணீரைப் பருகும்போது, அழுக்கான பொருட்கள் வடிகட்டப்படுகின்றன. இதையே சற்று மிகைப்படுத்தி பாலையும் நீரையும் கலந்து வைத்தால், அன்னப் பறவைகள் பாலை மட்டும் குடித்து விட்டு தண்ணீரை விட்டு விடும் என்று சொல்லப்பட்டிருக்கலாம் என்பது பறவை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

(வாவ் வளரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here