பொதுத்தேர்வுக்கு மாற்று வழிகள் என்ன?

33

-சுந்தரபுத்தன்

பேரிடர் காலத்தில் தேர்வுமுறையை மாற்றவேண்டிய அவசியம் பற்றி கல்வியாளர்களும் ஆசிரியர்களும் பேசுகிறார்கள்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக தேர்வுகள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. தேர்வுகள் சரியில்லை, மதிப்பெண்களை நோக்கிய ஓட்டமாக மட்டுமே கல்வி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பள்ளிக்கல்வியில் பல மாற்றங்களும் நடந்துவந்திருக்கின்றன. 35 மதிப்பெண் தேர்ச்சிக்குரிய தகுதியாக வைக்கப்பட்டது. பள்ளிகளில் பல காரணங்களாக நடந்த இடைநிற்றலை நிறுத்துவதற்காக எட்டாம் வகுப்பு வரையில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. கல்வி உரிமைச் சட்டத்தின் தொடர்ச்சியாகவும் பல்வேறு கல்விக் கொள்கைகளின் விளைவாகவும் CCE (Continuous and Comprehensive Evaluation) என்ற தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுமுறை கொண்டுவரப்பட்டது.

பள்ளிகளில் 5 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு புதுமையான கற்பித்தல் முறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஏபிஎல் கார்ட்ஸ் அட்டை (Activity Based Learning) மற்றும் ஏஎல்எம் என்ற செயல்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்படி பலவிதமான கற்பித்தல் மற்றும் கற்றல் உத்திகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெற்றி அடைந்தமாதிரி தெரிந்தாலும், எதுவும் முழுமையான வெற்றியை எட்டாமல் பாதியில் முடிந்த பயணமாக நின்றுவிட்டது.

மதிப்பீட்டு முறைகள் சரியில்லை என அதுவும் மாற்றப்பட்டது. நேஷனல் கரிக்குலம் பிரேம்வொர்க் NCF- 2005 சிசிஇ என்ற மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்தது. அதில் நல்ல மாற்றம் நடந்தது. குழந்தைகளின் திறன்களுக்கு 40 சதவீதம், தேர்வுகளுக்கு 60 சதவீதம் என மதிப்பெண்கள் தரப்பட்டன. கொஞ்சம் நடைமுறைச் சிக்கல்களால் வெறும் ரிக்கார்டுகளில் பதிவு செய்வதற்காக மட்டுமே நடைபெறுவதாக மாறியது.

சிசிஇ மதிப்பீட்டு முறை தொடர்ந்திருந்தால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அது பயன்பட்டிருக்கும். CCE கிரேடு சிஸ்டம் மதிப்பெண்களுக்கு மாற்றாக புராஜெக்ட் செய்வது, ஓவியங்கள் வரைவது என கற்றல் நடைமுறைகள் வந்தன. இதை முழுமையாக ஆசிரியர்களும் செய்யமுடியவில்லை. பெற்றோர்களும் புரிந்துகொள்ளவில்லை.

சிசிஇ முறையை பள்ளிகளுக்கு வந்து கல்வி அதிகாரிகளும் மாணவர்களை நேரடியாக, முழுமையாக மதிப்பீடு செய்யவில்லை. உண்மையான கற்றலோ கற்பித்தலோ நடைபெறாமல் தோல்வி மட்டும் மிஞ்சியது. கீழ் வகுப்புகளின் பாடப்புத்தகங்களைக்கூட குழந்தைகளுக்குத் வாசிக்கத் தெரியவில்லை என புள்ளிவிவரங்கள் வந்தன. ஆசிரியர்கள்மீது குறைகள் கூறப்பட்டன. மீண்டும் பழைய பல்லவியை பாடத்தொடங்கினார்கள். CCE முறை சரியில்லை என ஆசிரியர்களும் குறை சொல்லத் தொடங்கினர்.

இந்தச் சூழலில் படித்துவரும் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை எதிர்கொள்கிறார்கள். ஏன் தேர்வுமுறையை மாற்றமுடியாதா என்று கேள்விகள் விவாதம் என்ற அளவிலேயே இருந்துவருகிறது. ஊரடங்கு காரணமாக தேர்வுகள் நடத்தமுடியாத நிலை நீடித்துவருகிறது. பல மைல் தூரங்களில் இருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும். ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் கூடவேண்டியிருக்கும். இப்படி நிறைய சிக்கல்கள் உள்ளன. அப்படியே தேர்வு நடத்தினாலும் பல மாணவர்கள் பயத்தில் வராமல் போகக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

கல்வியாளர் ச. மாடசாமி, ‘இந்த கொரோனா காலத்தில் மரணங்களும் பசி கூக்குரல்களும் அதிகரித்திருக்கும் வேளையில், தகுதி என்ற பெயரில் பிள்ளைகளைப் பலி கொடுப்பதா? மேல்படிப்புக்கான மாணவரின் தகுதியைத் தீர்மானிக்க தேர்வு ஒன்றுதான் வழியா? தேர்வு ஒரு சௌகர்யம். அவ்வளவுதான். நுட்பம் ஏதுமற்ற சௌகர்யம். மிகவும் வித்தியாசமான தருணம் இது. இந்த நேரத்திலும் புதிய ரூபம் எடுக்காவிட்டால் எப்படி?’ என்று முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

இதுவே மிகச் சரியான தருணம். தேர்வுக்கு மாற்றாக வேறு முறைகளைப் பற்றி சில கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டோம்.

உமா, கல்வியாளர்

கல்விமுறையில் குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கிற துறைகளில் படிக்கும் காலம் வரவேண்டும். அது தொடர்பான திறன்களை மட்டும் சோதிக்கக்கூடிய சூழல் பள்ளிகளில் வேண்டும். இதுவொரு கனவுதான். ஆனால் அதற்கு ஒரு வடிவம் கிடைத்துவிட்டால் மிகப்பெரிய கல்வி வளர்ச்சியையும் தகுதியான மனிதவளத்தையும் நாம் பெறமுடியும். இன்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நீட் தேர்வு பல குழந்தைகளின் கனவுகளை கிள்ளி எறிந்துவிட்டது.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவம். பத்தாம் வகுப்புத் தேர்வில் 430 வாங்கிய மாணவியும், 381 வாங்கிய மாணவனும் 285 மதிப்பெண் வாங்கிய மாணவியும் வருத்தப்பட்டனர். இவர்களுக்கு மட்டுமல்ல. மற்ற எல்லாக் குழந்தைகளுக்கும் சொல்வது ஒரே விஷயம்தான். பத்தாம் வகுப்புத் தேர்வு என்பது ஒரு நுழைவுச் சீட்டுதான். தற்போது, ஒருவேளை தேர்ச்சி பெறவில்லை என்றாலும், வரும் உடனடித் தேர்வில் அதைப் பெற்றுவிடலாம். ஆகவே குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக வருந்தி அழவேண்டாம் என்றேன். இந்த இடத்தில் இருந்துதான் நாம் தேர்வுக்கான மாற்றுமுறை யோசிக்கவேண்டியிருக்கிறது.

அதாவது CCE தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை நாம் கவனத்தில் கொண்டு அதை மறுபரிசீலனை செய்யலாம். ஏற்கனவே கடந்த கல்வியாண்டு வரை 9ஆம் வகுப்பு வரையிலும், தற்போது 8 ஆம் வகுப்பு வரையிலும் நடைமுறையில் இருந்துவரும் இந்த மதிப்பீட்டு முறையை பொதுத்தேர்வுகளுக்கு மாற்றாக 12 ஆம் வகுப்பு வரை கொண்டுவருவதற்கு திட்டமிடலாம். நமது கல்வி வரலாற்றில் புதிய பக்கத்தைத் தொடங்க கொரோனா பேரிடர் நமக்குப் பாடம் கற்பித்துள்ளது.

பரமேஸ்வரி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், வேலூர் பதினோராம் வகுப்பில் இன்னும் ஓரிரு பாடங்கள் (ஒரேயொரு நாள்) நடத்தப் படாமல் உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவேயில்லை. இப்போது என்ன செய்வது என்பது கேள்வி. வழக்கமான தேர்வுகளின்றி திறமை, ஆர்வம், கற்றல் திறன் அடிப்படையில் மாணவர்களை திறனாய்வு செய்யவேண்டும் என்ற விவாதம் தொடர்கிறது. ஆனால் தீர்வுகளையோ பரிசோதனை முயற்சிகளையோ அது எட்டவேயில்லை.

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தாமல் தவிர்த்துவிடலாம். பெரும்பாலான மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே தொடருவார்கள். அவர்களை ஆசிரியர்களுக்குத் தெரியும். எந்தப் பிரிவைத் தேர்வு செய்யலாம் என்ற அறிவுரையை வழங்கமுடியும். மாற்றுப் பள்ளிகளில் இருந்துவரக்கூடிய மாணவர்களுக்குச் சிறு தேர்வினை வாய்மொழியாகவோ எழுத்துத் தேர்வாகவோ வைத்து அனுமதிக்கலாம். அதையே தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் முயலலாம்.

பதினோராம் வகுப்பு மாணவர்களை அப்படியே 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றதாக அறிவித்துவிடலாம். இனிவரும் காலத்தில் நாம் மாற்றுக் கல்வியை, தேர்வுமுறைகளைப் பற்றி உறுதியாக யோசிக்கத்தான் வேண்டும். நம்முடைய பாடப்புத்தகம் அப்படியான ஒரு முறையை நோக்கிய முதல் அடி என்றுதான் சொல்ல வேண்டும். இதை முன்வைத்து பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையிலும் தேர்வுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவது பற்றியும் சிந்திக்கவேண்டும்.

பத்மா, அரசு உதவிபெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர், சென்னை

இன்றைய நிலையில் குழந்தைகள் அனைவருமே மிகுந்த பீதியில்தான் இருப்பார்கள். ஒருபுறம் குடும்பங்கள் உணவுக்கே வழியின்றி துன்பப்படும் நிலையில் உள்ளன. மேலும் பொருளாதாரத்தில் மிகுந்த நலிவுற்ற சூழலில் இருக்கின்றன. ஆசிரியர்களே முன்வந்து மாணவர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்து வருவதைப் பார்க்கிறோம். அங்கிருந்து வரும் குழந்தைகளை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆசிரியர்கள் ஃபோன் செய்து மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பாக வழிகாட்டி வருகிறோம். வொர்க்சீட் அனுப்புகிறோம். எத்தனை பேர் படிப்பார்கள் என்பதும் மனரீதியாக தயாராக இருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. என்னைக் கேட்டால், புத்தகங்களில் இருந்து அவர்கள் பதில்களைத் தேடி எழுதும் ஓப்பன் புக் சிஸ்டத்தைப் பற்றி சிந்திக்கலாம்.

அடுத்து கொலாபரேஷன் முறை இருக்கிறது. தனியாக ஒரு முறையும், மற்ற மாணவர்களுடன் சேர்ந்து கூட்டாக ஒரு முறையும் தேர்வுகளை நடத்தி, அதில் ஒரு மாணவரின் தனிப்பட்ட கல்வித்திறனை அறியலாம். ஆன்லைன் வழியாக சிபிஎஸ்இ பாடங்கள் நடத்தலையா என்று கேட்கிறார்கள். எத்தனை மாணவர்களிடம் ஆன்லைன் வசதிகள் இருக்கின்றன? எங்கள் பள்ளியில் காலை 8.30 மணிக்கு சிறப்பு வகுப்பு என்றால், சில மாணவர்கள் வரமாட்டார்கள். காலையில் பேப்பர் போட்டுவிட்டு பள்ளிக்கு வரும் நிலையில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள்.

கோகுல்நாதன். அரசு பட்டதாரி ஆங்கில ஆசிரியர், ஈரோடு

பொதுவாக மொழிப் பாடங்களுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தி வருகிறோம். எழுதும் திறனை மட்டுமே பரிசோதிக்கிறோம். ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்போது LSRW என்று வகைப்படுத்தப்படும் திறன்கள் அவசியம். அதாவது ஒரு மாணவரின் கவனித்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் போன்ற நான்கு திறன்களையும் பரிசோதிப்பதாக மொழித் தேர்வுகள் அமையவேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலும் வீட்டிலும் ஆங்கிலம் பேசக்கூடிய சூழல் வாய்ப்பதில்லை. திரைப்படங்கள், செய்திகள், பத்திரிகைகள் வழியாக ஆங்கில மொழி பரிச்சயமாகவேண்டும். வகுப்புகளில் ஆங்கில ஆசிரியர்கள் 90 சதவீதம் ஆங்கிலத்திலேயே பேசுவது நல்லது. ஆடியோ வீடியோ போன்ற ஸ்மார்ட் வகுப்பறை, கற்றல் கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தி மொழிப் பாடங்களை நடத்தலாம்.

வெறும் எழுத்துத் தேர்வை மட்டும் வைக்கும்போது, பாடங்களின்மீது புரிதலற்ற மனப்பாடம் மட்டுமே வெளிப்படுகிறது. ஒரு கேள்வியை மாற்றிக் கேட்டால் பதில் எழுதமுடியாத நிலையில் இருக்கிறார்கள். சுயமாக சிந்தித்து எழுதமுடிவதில்லை. க்ரிட்டிக்கல் திங்கிங் வளரவில்லை. ஒரு கேள்வி ஒரு பதில் என்ற அளவிலேயே மாணவர்கள் கற்பிக்கப்படுகிறார்கள். மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைத்தும், கேட்க வைத்தும், புரிய வைத்தும் எழுதவைத்தும் தயார்ப்படுத்தவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here