-மோ. கணேசன்
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா மட்டுமின்றி, இயற்கைப் பேரிடர் காலங்களில் சிக்கித்தவிக்கும் மக்களின் இடர்களைக் களையும் நோக்கத்தில் செயலிகள் மற்றும் இணையதளங்களை உருவாக்குவதற்கான போட்டி ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பலவகையான பேரிடர்களையும் கணக்கில் கொண்டு, 25 துறைகளை உள்ளடக்கி ஒரு ஒருங்கிணைந்த செயலியை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
செயலியின் தன்மை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கண்டறிதல், அந்தத் தொழிலாளர்களுக்கான தங்குமிடங்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான பணிகளைப் பிரித்தளித்தல், கொரோனாவுக்கான சிகிச்சை மையங்கள், மருந்தகங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களை ஒருங்கிணைத்தல், நோயாளிகளின் சிகிச்சை மற்றும் அறிகுறிகளின் நிலை தொடர்பான தகவல்கள், மருத்துவர் நியமனம், மருத்துவமனை அனுமதி, ஒருங்கிணைந்த டோல் ப்ரீ எண்கள், மக்கள் நெருக்கத்தை அறிந்து எல்லையை வரையறுத்தல், நிவாரண நிதிகளையும் நிவாரணப் பொருட்களையும் திரட்டுதல் போன்ற தகவல்களை ஒருங்கிணைப்பதாக செயலிகள் இருக்கவேண்டும்.
மேலும், கொரோனா பரிசோதனைகளை நடத்தி ஆன்லைனில் முடிவுகளைப் பெறுதல், வீட்டுக்கண்காணிப்பில் சிகிச்சைகளைத் தொடர்தல், குறித்த நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கான அலாரம், தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு உணவளித்தல், நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனைகளை வழங்குதல், அரசுப் பணிகளை ஒருங்கிணைத்தல், அத்தியாவசியப் பணிகளுக்காக பயண அனுமதிகள், தனிநபர்கள் பயண அனுமதி கோருதல், சிறு குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விநியோகங்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு உதவுதல், ஆதரவற்றோர், திருநங்கை, திருநம்பி, மாற்றுத்திறனாளர்கள், எச்.ஐ.வியினர், தங்கும் இடமற்றவர்கள், தனித்து வாழும் பெண்கள் ஆகிய பிரிவினருக்கு உதவுதல் என்பவை போன்ற பல்வேறு தளங்களை ஒருங்கிணைத்து, பேரிடர்காலத் துயர்களில் இருந்து மக்களைக் காக்க ஒரு அதிவிரைவுச் செயலியை உருவாக்குவதே திட்டத்தின் செயல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் சிறப்பு
இந்தப் போட்டி தகவல்தொழில்நுட்ப மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்துத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம். வெற்றிபெறுபவர்களின் சாதனைகள் அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது கல்வி நிறுவனங்களின் தரவரிசை உயர்வதற்கும் துணைபுரியும்.
விண்ணப்பிக்கும் முறை
சிறந்த செயலிகள் மற்றும் இணையதளங்களை உருவாக்குபவர்களுக்கு தேசிய மற்றும் மாநில அளவில் பரிசுகள் வழங்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு, உங்கள் படைப்புகளை ஆன்லைன் வழியாகவே சமர்ப்பிக்கலாம்.
போட்டி முடிவடையும் தேதி: 6.5.2020
விவரங்களுக்கு: www.annauniv.edu/covid19.html