வாவ் ஐந்தறிவு – 35

108

– ராஜேஷ் குமார்

விலங்குகளின் விந்தை உலகம்!

இருவாய் பறவை

எந்த ஒரு பறவையாக இருந்தாலும் அதற்கு ஒரு வாய் தான் இருக்கும். ஆனால் நாம் இப்போது பார்க்கப்போகும் பறவைக்கு இரண்டு வாய்கள். அதன் காரணமாகவே இந்தப் பறவைக்கு இருவாய் பறவை என்று பெயர். காலப்போக்கில் இந்த இரு வாய் என்பது இருவாட்சி என்று மாறி விட்டதால் இப்போது இந்த பறவை இருவாட்சி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

இப்பறவையின் ஆங்கிலப்பெயர் ஹார்ன்பில் (HARNBILL). உண்மையில் ஹார்ன்பில் என்பது ஒரு வகை மரம். இந்த மரத்தில் மட்டுமே இப் பறவைகள் கூடுகட்டி வாழ்வதினால் அந்த மரத்தின் பெயரையே இப்பறவைக்கும் சூட்டிவிட்டார்கள். இது அளவில் பெரிய பறவை. பறக்கும் போது ஒரு விலங்கு பறப்பது போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும். இந்த பறவை உயிரியல் வகைப்பாட்டில் கொர்டேட்டா (CHORDATA) என்ற தொகுதியைச் சேர்ந்தது. இதனுடைய விஞ்ஞானப்பெயர் புசெரோடிடே (BUCEROTIDAE).

இந்த இரு வாய் பறவைகளின் கூடு ஹார்ன்பில் எனப்படும் உயரமான மரங்களில், வித்தியாசமான முறையில் அமைந்திருக்கும். இதன் கூடு என்பது மரங்களின் மறைவு பகுதிகளில் காணப்படும் பொந்துகள்தான்.

இனப்பெருக்க காலம் வந்துவிட்டால் ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் தங்களுக்குள் ஜோடிகளை சேர்த்துக்கொண்டு அப்பகுதியில் காணப்படும் எல்லா ஹார்ன்பில் மரங்களுக்கும் பறந்து சென்று மரத்தின் உயரமான பகுதிகளில் உள்ள பாதுகாப்பான மரப்பொந்துகளைத் தேடும். எதிரிகளால் நெருங்க முடியாத மரப்பொந்துகளைத் தேடும். எதிரிகளால் நெருங்க முடியாத மரப்பொந்து இதுதான் என்பதை உறுதி செய்து கொண்ட பின் அவை இணை சேர்கின்றன.

இணை சேர்ந்த பின் முட்டையிடும் பருவம் வந்ததும் பெண் பறவை அந்த பாதுகாப்பான மரப்பொந்துக்குள் போய் அமர்ந்துகொள்ளும். அதற்குப் பிறகு ஆண் பறவையானது நீர்நிலைகளுக்குப் போய் களிமண் போன்ற பசையுள்ள மண்ணைச் சேகரித்துக் கொண்டுவந்து மரப்பொந்தின் வாயை அடைக்க ஆர்ம்பிக்கும். பெண் பறவைக்கு உணவு கொண்டுவந்து கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும்.

பெண் பறவை முட்டைகள் இடுவதற்கு முன்பாக உடம்பிலுள்ள முதிர்ந்துபோன சிறகு இறக்கைகளை வலுக்கட்டாயமாக உதிர வைத்து, பொந்துக்குள் ஒரு மெத்தை போன்ற தளத்தை உருவாக்கிக்கொள்ளும். அதன் பின்னரே முட்டைகளை இட ஆரம்பிக்கும்.

1 முதல் 3 முட்டைகள் வரை மட்டுமே இடும். நிறைய குஞ்சுகள் இருந்தால் உணவளித்து பராமரித்து அவற்றை வளர்க்க முடியாது என்பதை தாய்ப்பறவை உணர்ந்து வைத்திருப்பதால் மூன்று முட்டைகளுடன் நிறுத்திக் கொள்கின்றன.

முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளியே வர ஒன்றரை மாதம் முதல் இரண்டு மாதம் வரை பிடிக்கிறது. குஞ்சுகள் சற்று பெரிதாகும் வரை, ஆண் பறவையானது பெண் பறவையையும் அதன் குஞ்சுகளையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. இந்த இருவாட்சி பறவை அனைத்துண்ணி வகையை சேர்ந்தது. பழங்கள், கொட்டைகள், பூச்சிகள், எலி, தவளை போன்ற சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்ணக் கூடியது.

உணவு தேடி வெளியே சென்ற ஆண் பறவையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு, அது கூடு திரும்பவில்லை என்றால் பெண் பறவை குஞ்சுகளை காப்பாற்றுவதற்காக மண் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்து, உணவு தேடி குஞ்சுகளுக்கு கொண்டு வந்து கொடுக்கும்.

விசித்திரமான உணவு உண்ணும் முறை

இருவாட்சி பறவையின் நாக்கு குட்டையாக இருப்பதால் அவற்றால் பிடித்த இரையை உடனடியாய் விழுங்கமுடியாது. இரையைக் கொத்தி அதன் உயிர் பிரிந்ததும், அதை அலகின் நுனியில் வைத்து, சற்று மேலே தூக்கிப்போட்டு வாயில் கவ்வி, அதை மறுபடியும் வாயின் உட்புறத்தை நோக்கி மெதுவாய் நகர்த்திக் கொண்டு போய் சேர்த்துவிடும். இப்படிப்பட்ட உணவு முறைக்கு ஏற்றாற்போல் அதனுடைய இயற்கையான அலகுக்கு மேற்புறம் கொண்டை போன்ற அமைப்பு இருக்கும். அந்த அமைப்பைப் பார்க்கும் போது அதற்கு இரண்டு அலகுகள் இருப்பது போன்ற தோற்றத்தைத் தரும்.

உண்மையான காதலுக்கும் பாசத்திற்கும் இந்த இருவாட்சி பறவைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஒரு பெண் பறவை ஒரே ஒரு ஆண் பறவையுடன் மட்டுமே வாழ்நாள் முழுவதும் இணைந்து இருக்கும். தன்னுடைய இணையைப் பிரிந்த பறவை சில நாட்கள் வரை உணவு எடுத்துக்கொள்ளாமல் உயிர்த் தியாகம் செய்வதும் உண்டு. இவை எதிரிகளுக்கு உணவாகாமல் இருந்தால் முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
இந்த பறவைகளின் அன்பையும் பாசத்தையும் உணர்ந்து, இந்தியாவில் உள்ள கேரளா, அருணாச்சலப்பிரதேசம் மியான்மர் நாட்டில் உள்ள சின் போன்ற மாநிலங்கள் தங்களுடைய அரசு சின்னங்களாக அறிவிப்புச் செய்துள்ளன.

இருவாட்சியின் வகைகள்

இந்த இருவாட்சி பறவைகளில் உலகம் முழுவதும் 54 வகைகள் உள்ளன. இந்தியாவில் 9 வகைகள் உள்ளன. தென்னிந்தியாவில் நான்கு வகைகள் காணப்படுகின்றன. பழங்கால இலக்கியங்களில் இந்த பறவை ‘மலை முழுங்கான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காணப்படும் நான்கு வகை இருவாட்சிப் பறவைகள். 1. பெரும்பாத இருவாட்சி, 2. மலபார் இருவாட்சி, 3. சாம்பல் நிற இருவாட்சி, 4. மலபார் பாத இருவாட்சி என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இது தவிர அந்தமான் தீவுகளில் நார் கொண்டை இருவாட்சி, ரூ வெஸ்ட் நெக்ட் இருவாட்சி, வடகிழக்கு இந்தியாவில் பழுப்பு இருவாட்சி, இந்திய பாத இருவாட்சி போன்றவை நேபாளம், இமயமலையில் காணப்படுகின்றன.

மலை இருவாட்சி

இருவாட்சி குடும்பத்தில் மிகப்பெரிய இனம் மலை இருவாட்சி ஆகும். இது இறக்கைகளை விரித்துக் கொண்டு பறந்தால், எந்திர இரைச்சல் போன்ற ஒலி காற்றில் பரவும். இந்த பறவையின் நீளம் 4 அடி. இறக்கை விரித்த நிலையில் 5 அடி அகலத்தோடு காணப்படும். 3 முதல் 4 கிலோ எடை கொண்டது. இந்த வகை இருவாட்சியின் பூர்வீகம் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும்.

இருவாட்சி பறவைகள் பழங்களை விரும்பி உட்கொள்ளும். பழங்களை விதைகளோடு சேர்த்து உண்ணுவதால் வெளியேறும் எச்சத்தில் காணப்படும் விதைகள் வீரியம் மிக்கவையாக உள்ளன. விதைகள் இப்படி வீரியம் மிக்கவையாக இருப்பதால், செடியாகி, மரமாகின்றன. இப்பறவையின் உணவு செயல்பாடுகளால் காட்டில் மரங்கள் பெருமளவில் வளர்கின்றன. மரங்கள் அடர்த்தியாக இருப்பதால் இந்த வகைக் காடுகள் மழைக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இருவாட்சிப் பறவைகளின் எண்ணிக்கை குறைந்தால் மழைக்காடுகள் உருவாவதும் குறைந்து விடும் என்று பறவை ஆர்வலர்கள் கருதுகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மரங்கள் பெருமளவில் வெட்டப்படுவதால் இப்பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

மலபார் சாம்பல் இருவாட்சி

இருவாட்சி பறவை இனத்தில் மலைப்பகுதிகளில் மட்டும் வாழும் ஒருவகை இனம் இந்த சாம்பல் இருவாட்சி. இந்த பறவைகள் மிக நீண்ட அலகுகளைக் கொண்டிருந்தாலும் மற்ற இருவாட்சி இனங்களில் காணப்படும் ‘இருவாய்’ போன்ற அமைப்பு இதற்குக் கிடையாது. கேரளாவில் ரப்பர் தோட்டங்களில் இவை மிகுதியாகக் காணப்படுவதால் இதற்கு மலபார் சாம்பல் இருவாட்சி என்று பெயர். இவை ஒரு குறிப்பிட்ட ஒலிகளை எழுப்பி தங்களுடைய இனம் எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கின்றன.

இந்த இருவாட்சி பறவை இனத்தில் வெள்ளை வால் ஹார்ன்பில் எனப்படும் வகை அரிதானது. இது பிலிப்பைன்ஸ் தீவில் மட்டும் காணப்படுகின்ற ஒன்று. உடலில் பல நிறங்களில் இருக்க வால் மட்டும் வெள்ளை நிறத்தில் அழகாக காணப்படும்.

இந்த ஹார்ன்பில் பறவையைப் போலவே இன்னொரு பறவையும் வித்தியாசமான நீண்ட அழகோடு காணப்படும் இந்த பறவையின் பெயர்தான் டூகான் (TOUCAN).

உலகிலேயே பெரிய வண்ணமயமான அலகு கொண்ட பறவை டூகான். இவை மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் தென்படுகின்றன. டூகான்களில் பெரிய இனமான டோகோ டூகான் (TOCO TOUCAN) 700 கிராம் எடையுடன் 30 அங்குல நீளத்தோடு காணப்படும். இதிலேயே மிகச் சிறிய இனமும் உண்டு. இதனுடைய பெயர் லெட்டெர்டு அரிகரி (LETTERED ARACARI). 130 கிராம் எடையோடு 12 அங்குல நீளம் வளரும்.
ஆண், பெண் இரு டூகான்கள் இரண்டுக்குமே எட்டு அங்குல நீளமுள்ள பெரிய அலகு உண்டு. கெரட்டின் (KERATIN) என்ற கடினமான பொருளால் ஆனது இந்த அலகு. இது பார்ப்பதற்கு கடினமான எலும்பு போன்ற தோன்றினாலும் மிகவும் லேசானது. எடை மிகவும் குறைவு. அலகில் அதிகமான காற்ற்றைகள் இருப்பதுதான் அந்த எடை குறைவுக்குக் காரணம்.

டூகானின் அலகு ஒரு ஏர் கண்டிஷனர் இயந்திரம் போல் செயல்படுகிறது. அலகில் உள்ள காற்றறைகளின் மூலம் உடலின் வெப்பத்தை சீர் செய்யும் பணியை மேற்கொள்கிறது. அதாவது அலகின் வழியாக அதிகமான ரத்த ஓட்டம் பாயும்போது உடலின் வெப்பம் ஆவியாகி வெளியேறுவதால் பறவையின் உடம்பு குளிர்ச்சி அடைகிறது.
இந்த நீண்ட அலகின் இன்னொரு உபயோகம் ஆழமான பொந்துகளில் உள்ளே இரை தேடவும், பழங்களை மரத்திலிருந்து சுலபமாகப் பறிக்கவும், பழங்களின் கொட்டைகளை உடைக்கவும் இது பயன்படுகிறது. எதிரிகளை பயமுறுத்தவும், பாலினத்தைக் கவரவும் அலகு உதவுகிறது. அதே நேரத்தில் இதன் அலகு உறுதியாக இல்லாத காரணத்தினால், மண்ணைக் கிளறி குழி தோண்டவோ, எதிரிகளைத் தாக்கி காயத்தை உண்டாக்கவோ முடியாது.

இதன் அலகு எவ்வளவு நீளம் உள்ளதோ, அதே அளவு நாக்கும் உள்ளது. நாக்கின் நிறம் சாம்பல் நிறத்தில் இருக்கும். ஹார்ன்பில் போல் இந்த டூகான் பறவைகள் வானத்தில் பறக்க முடியாது. காரணம் இந்த பறவையின் சிறகுகள் மிகவும் சிறியவை. பறந்தாலும் அதிக தூரம் பறக்க முடியாது. சிறிது தூரம் மட்டுமே பறந்துவிட்டு, ஏதாவது கிளையில் போய் உட்கார்ந்து ஓய்வு எடுக்கும். இதன் கால்கள் வலிமையாகவும் குட்டையாகவும் இருக்கின்றன.

டூகான் பறவைகள் பாம்பு, பருந்து போன்ற எதிரிகளைப் பார்த்து விட்டால் அதிக இரைச்சல் எழுப்பும். தூங்கும்போது அலகின் அளவு இடைஞ்சலாய் இருப்பதால் அலகை தன் தலையோடு சேர்த்து முதுகுப்புறம் திருப்பி இறகுகளுக்குள் புதைத்துக்கொள்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இணை சேர்கின்றன. இருவாய்ப் பறவைகள் போலவே பாதுகாப்பான மரப் பொந்துகளைத் தேர்ந்தெடுத்து கூடாக மாற்றிக் கொள்கின்றன. முட்டையில் இருந்து வெளிப்படும் குஞ்சுகளுக்கு உடம்பில் ஒரு ரோமம் கூட இருக்காது. அளவில் மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். குஞ்சுகள் வளரும் போது உடம்பின் நீளத்திற்கு ஏற்றார் போல் அலகின் நீளமும் வளரும்.
இருவாட்சி என்னும் இருவாய்ப் பறவைகளும் ஏறக்குறைய அதன் பண்புகளோடு ஒத்துப் போகின்ற டூகான் பறவைகளும் காடுகளில் வாசம் செய்யாவிட்டால் உலகில் மழைக்காடுகள் உருவாகாத நிலை ஏற்படும்.

மழைக்காடுகள் இல்லாவிட்டால் மழை பெய்வதும் ஒரு அரிதான நிகழ்வாக அமைந்து விடும்.
எனவேதான் உலகின் ஐ.நா.சபையானது இந்த இருவாட்சி, டூகான் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு ராணுவ கட்டளை போன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்து அதை கண்காணித்தும் வருகிறது.

(வாவ் வளரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here