வெற்றியின் வேர்கள் – 22

51

-எம். சிதம்பரம்

வர்லாம்… வர்லாம்… வா!

பாத யாத்திரைக்கு நான் தயார்… கார் தயாரா?

-பாத யாத்திரைக்குக் கூட காரில் செல்லும் தலைவர்கள் மட்டுமல்ல, பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே உண்ணாவிரதம் இருக்கும் தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் எல்லாம் தலைவர்களா? அவையெல்லாம் தான் தலைமைப் பண்புகளா?

யார் தலைவன்? எவை தலைமைப் பண்புகள்?

நான் பாடம் நடத்த வேண்டிய ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் அவரவர் விருப்பத்துக்கு அமர்ந்திருந்தனர். அனைவரையும் ஆங்கில அகர வரிசைப்படி அமரச் சொன்னேன். உடனே அங்கு ஒரே குழப்பம். அமளி. கூச்சல். அந்த வகுப்பு பங்குச்சந்தை போல காட்சியளித்தது.

அண்ணாமலை என்ற மாணவன் முதல் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான். ஜாகீர்கான் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான். இருவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டு அங்கு நிலவிய குழப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ராஜேஷ் என்ற மாணவன் நான் எங்கு அமர வேண்டும் என்று சொல்லுங்கள். அமர்ந்து கொள்கிறேன்” என்றான்.

அப்போது அமராவதி என்ற மாணவி முன்வந்து, Aவில் தொடங்கும் பெயர் உள்ளவர்கள் எல்லாம் இங்கு வாருங்கள் B – அங்கு செல்லுங்கள். C – அதோ அங்கு நில்லுங்கள் என்று கட்டளையிட்டு, குழம்பிக்கொண்டிருந்த அனைவரையும் தெளிவுபடுத்தி வழிநடத்தினாள். பின் ஒவ்வொருவரின் பெயரின் முதல் எழுத்தைவைத்து டெலிபோன் டைரக்டரியில் வருவதுபோல் வரிசைப்படி அமரச் செய்தாள். பின் அந்தந்த எழுத்துக்கு ஏற்ப அனைவரும் வரிசைப்படி அமர்ந்திருக்கிறார்களா என்று அவர்களது பெயரை உச்சரிக்கச் செய்து சரிபார்த்தாள். இடம்மாறி அமர்ந்திருந்த சிலரை இடம்மாற்றி உட்கார வைத்தாள். பின் அவளும் தான் அமரவேண்டிய இடத்தில் சென்று அமர்ந்துகொண்டாள்.

ஆறு நிமிடத்துக்குள் அவர்களுக்கு இடப்பட்ட பணி சிறப்புற நிறைவேற்றப்பட்டது. முதல் மூன்று நிமிடத்தில் வெறும் குழப்பமும் கூச்சலும் இருந்த இடத்தில் அமைதியும் கட்டுப்பாடும் வந்தது எப்படி? சவாலான ஒரு செயல் வெற்றிகரமாக நிறைவேறியது எப்படி?

கூச்சல் நிலவிய சூழலில், குழப்பம் நிறைந்த மாணவரிடையே ஒரு தெளிவை உருவாக்கி, தலைவராய் உருவான அமராவதியால். அவரிடம் இருந்த தலைமைப் பண்புகளால்.

நீங்களும் எந்தவொரு சூழலிலும் பதட்டப்படாமல் அமராவதிபோல் தலைவராய் உயர்ந்து, பிறர் துயர் துடைக்கலாம். வெற்றி பெறலாம்.

மனிதர்களிடையே பலவகை உண்டு. என்ன செய்வது எனத்தெரியாது சிலர் குழம்பிக்கொண்டே இருப்பார்கள். சிலரோ குழப்பத்தை உண்டாக்கக் கூடியவர்களாய் இருப்பார்கள். அண்ணாமலை, ஜாகீர்கான் போன்றவர்கள் தங்கள் வேலைகளை மட்டுமே சிறப்பாய் செய்வார்கள். இவர்கள் பிறரைப் பற்றி அக்கறை காட்ட மாட்டார்கள்.
ராஜேஷ் போன்றவர்கள் பிறர் சொல்வதைக் கண்ணை மூடிக்கொண்டு செய்வார்கள். இவர்கள் ஃபாலோயர்கள் அல்லது சோம்பேறிகள்.

இப்படி உடனே சொல் பேச்சைக் கேட்கிறவர்களையும், கேட்காதவர்களையும், குழம்புகிறவர்களையும், குழப்புகிறவர்களையும் ஒருங்கிணைத்து இலக்கினை நோக்கி அனைவரையும் அழைத்துச் செல்லும் அமராவதி போன்றவர்களே தனிப்பெரும் தலைவர்களாக உருவாகிறார்கள்.

அமராவதி, அவர் பெயர் Aவில் தொடங்குவதால் அண்ணாமலைபோல் முதல் வரிசையில் அமர்ந்துகொண்டு, பிறர் கஷ்டப்படுவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்திருக்க முடியும். அவருக்கு இடப்பட்ட பணி வெகு சுலபமானது. அதை மட்டுமே செய்துவிட்டு, திருப்தி அடைந்திருக்க முடியும். ஆனால், அவர் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கவில்லை. தன் சக மாணவர்களைப் பற்றியும் அவர்களின் திருப்தி பற்றியும் சிந்தித்தாள்.

தன்னையும் தாண்டி பிறரைப் பற்றி, சமூகத்தைப் பற்றி, அவர்களின் நலனைப் பற்றி சிந்தித்துச் செயல்படுகிறவர்களே மக்கள் தலைவர்களாய் வளர்கிறார்கள்.

ஒரு தலைவன் தன் இலக்கை அடைந்தால் மட்டும் போதும் என்று எண்ணாமல் பிறரும் அவர்களது இலக்கை அடைய வழிகாட்டுபவனாய் இருக்கவேண்டும். பிரச்னை என்ன என்பதைத் தெளிவாக உள்வாங்கித் திட்டமிட்டு, அனைவரையும் தெளிவாக்கி, ஒவ்வொருவரின் செயல்திறனையும் ஒருங்கிணைத்து, இலக்கினை நோக்கி அழைத்துச்சென்று வெற்றிவாகை சூட வேண்டும்.

A Leader knows the way… shows the way… goes the way…

ஒரு தலைவருக்கு எங்கு செல்லவேண்டும் என்று மட்டும் தெரிந்தால் போதாது. எப்படிச் செல்லவேண்டும்? எந்த வழியில் செல்லவேண்டும்? போன்றவையும் தெரிந்திருக்கவேண்டும். அவருக்குத் தெரிந்தால் மட்டும் போதாது. பிறருக்கும் அவ்வழியினைக் காட்டிட வேண்டும். காட்டினால் மட்டும் போதாது. அவ்வழியிலேயே அவரும் செல்லவேண்டும். எப்படியென்றால், அமராவதி அனைவருக்கும் ஒரு வழியை (system) விதிமுறையை உருவாக்கி, அனைவரையும் வழிநடத்தி, அவரும் அதனை பின்பற்றியது போல.

விருதுநகரில் இதயம் நிறுவனத்துக்காக அதன் பணியாளர்களுக்கு 17 ஆண்டுகளுக்கு முன் பயிற்சி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தேன்.

சிறிதுநேரம் கழித்து மதிய உணவு இடைவேளை வந்தது. அனைவரும் வரிசையாகச் சென்று உணவு எடுத்துக்கொள்வது போன்ற ஏற்பாடு. அந்த நிறுவனத்தின் தலைவர் வி.ஆர். முத்துவும் வரிசையில் நின்று உணவு எடுத்துக்கொண்டார். ஒரு தலைவன் கட்டமைப்பை, விதிமுறைகளை அவனும் பின்பற்ற வேண்டும். தன் குழுவில் ஒருவனாக அவன் இயங்கவேண்டும். கடினமான பணிகளை சுலபமாக்க வழிமுறைகள் வகுக்கத் தெரிந்தவனாகவும் இருக்கவேண்டும்.

தன் கடமைகளைச் சரிவரச் செய்பவன் ஒரு சிறந்த குடிமகனாக இருக்கமுடியும். அமராவதிபோல் பிறரையும் தனது கடமைகளை உணரச்செyது செயல்பட வைப்பவர்களே தலைவர்களாக முடியும்.

அமராவதிபோல் செயல்பட்டு சமூகத்தில் தலைவர்களாக உயருங்கள்.

– தொடர்ந்து வெல்லுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here