-மோ. கணேசன்
மீன்பிடித் தொழிலில் துறைசார்ந்த வல்லுநர்களையும், பணியாளர்களையும் உருவாக்குவதற்காக சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபிஷரீஸ் நாட்டிக்கல் அண்ட் என்ஜினீயரிங் டிரெயினிங் (CIFNET) எனும் கல்வி நிறுவனம் கொச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சென்னையில் வளாகம் உள்ளது.
கொச்சியில் உள்ள வளாகத்தில் நான்காண்டு இளநிலை மீன் வள பட்டப்படிப்பிற்கும், இரண்டாண்டு தொழிற்பயிற்சி படிப்புகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இளநிலை மீன்வள பட்டப்படிப்பு நான்காண்டு நடத்தப்படும் இளநிலைப் பட்டப்படிப்பில் கடலியல், மீன்வளம், மீன் உற்பத்தி பெருக்கம், சுற்றுச்சூழல், கப்பல் இயக்கம், மீன் பிடிக்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் வகுப்பறையிலும், செய்முறைப் பயிற்சியாகவும் நடத்தப்படும்.
பிளஸ் டூவில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்து, குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பானது 20-க்குள் இருக்க வேண்டும்.
படிப்பில் சேர விரும்புவோர் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். பிளஸ் டூ மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கும்.
இரண்டாண்டு தொழில்நுட்பப் படிப்புகள் வெஸல் நேவிகேட்டர், மரைன் பிட்டர் என்று இரண்டுவிதமான படிப்புகள் உள்ளன.
சென்னை, கொச்சி மற்றும் விசாகப்பட்டடினத்தில் ஒவ்வொரு படிப்பிலும் தலா 20 இடங்கள் வீதம் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. மரைன் பிட்டர் படிப்பில் மீன்பிடிக் கப்பல்கள் பற்றி அதிகமாக கற்றுத்தரப்படும்.
படிப்புகளில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பில், குறைந்தபட்சம் 40 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பானது 15-லிருந்து 20-க்குள் இருக்க வேண்டும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்
இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி பிரிவினருக்கு ரூ. 250. தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 300. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கு ரூ. 150.
கட்டணத்தொகையை டிமாண்ட் டிராப்ட் மூலமாகவும், செலானை பிரிண்ட் அவுட் எடுத்து எஸ்பிஐ வங்கிக் கிளைகளிலும் செலுத்தலாம்.
கேட்புக்கடிதத்துடன் தொகை செலுத்தியதற்கான சான்றுகளோடு கடிதம் அனுப்பினால் விண்ணப்பம் அனுப்பிவைக்கப்படும். சென்னை, கொச்சி அலுவலகங்களிலும் கிடைக்கும். ஆன்லைனில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி The Director, CIFNET, Fine Arts Avenue, Kochi – 682 016 .
விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: 15.05.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 16.06.2018
விவரங்களுக்கு: www.tnjfu.ac.in / http://cifnet.gov.in