– ராம்ஷங்கர்
ஊரடங்கால் உலகமே அடங்கி இருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் ரயில், லாரி, பேருந்து மற்றும் சொந்த வாகனங்கள் என அனைத்தின் இயக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டுள்ளது. சுவாசிக்கும் காற்றை அசுத்தப்படுத்தப்படுத்தும் இவை இயங்காததால் காற்று மாசு என்ற பேச்சுக்கே இடமில்லை!
வெப்பம் தணியும்
இதுகுறித்து சமூக ஆர்வலரும் பேராசிரியருமான ஜெ.வீ. அருணிடம் பேசினோம். “இந்த ஊரடங்கு அறிவிப்பால் காற்றின் தரம் உயர்ந்து நச்சுத்தன்மை வெகுவாக குறைந்துள்ளது உண்மைதான்.
இதற்கும் கொரோனா தொற்றுக்குமே ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. நுரையீரல் பாதிப்பு இருப்பவர்கள் மிக எளிதாக கொரோனாவிடம் சிக்கிக்கொள்வார்கள். சீனாவிலும் இத்தாலியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டதட்ட 70 சதவிகிதம் பேருக்கு நுரையீரல் கோளாறு இருந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் நிரந்தர கொரோனா என்றால் காற்றில் கலந்திருக்கும் நச்சுப் பொருள்கள்தான். வாகனங்கள், தொழிற்சாலைகள் கக்கும் காற்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலருக்கு நுரையீரல் கோளாறு ஏற்படும்.
எந்த தொற்றாக இருந்தாலும் நுரையீரல் சீராக இருந்தாலே 50 சதவிகிதம் தடுத்துவிடலாம். தற்போது ஏற்பட்ட நல்லதொரு மாற்றம் நுரையீரலுக்கு எந்த பாதிப்பையும் தராது. இதுவும் ஒரு வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைதான்.
காற்றின் தரத்தைக் காற்றிலுள்ள மாசு அளவை வைத்து கணக்கிடுவர். 50க்கு கீழ் இருந்தால் பாதுகாப்பாகவும், 100க்கு மேல் இருந்தால் மிதமாகவும், 100க்கு மேல் இருந்தால் ஆபத்தாகவும் கருதப்படும். இந்த ஊரடங்கு நடவடிக்கைக்குப் பிறகு பெருவாரியான மாநிலங்களில் காற்று மாசு கட்டுக்குள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அடர்ந்த காட்டுப் பகுதியில் மட்டுமே சில மிருகங்கள் வாழும். அதற்குக் காரணம் அங்குதான் காற்று சுத்தமாகவும் ஒலி மாசு கட்டுக்குள்ளும் இருக்கும். ஆனால், இந்த ஊரடபங்கிற்குப் பிறகு கேரளாவிலும் புனுகு பூனைகள் ஊருக்குள் உலா வருவதைக் காணமுடிகிறது. அவை வாழ்வதற்கான தகுந்த இடமே இல்லை; அவை அழிவின் விளிம்பு நிலைக்கே சென்றுவிட்டது என அறிவிக்கப்பட்ட நிலையிலும், அவைகள் ஊருக்குள் உலா வருகிறது என்றால் எந்த அளவிற்கு சுற்றுச்சூழல் தூய்மை அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்த 21 நாள் ஊரடங்கால் வரும் கோடை எப்போதும் போல் இல்லாமல் சற்று வெப்பம் தணிந்தே காணப்படலாம்.
புவி வெப்பமடையத் தொழிற்சாலைகள் மற்றும் வாகனத்திலிருந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைட், கிளோரோ புளோரோ கார்பன், கார்பன் மோனாக்ஸைட் போன்ற வாயுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊரடங்கு உத்தரவால் இந்த நச்சுத்தன்மை வாய்ந்த அமிலங்கள் காற்றில் கலக்காததால் புவி வெப்பமடைவது தடுக்கப்பட்டு குளிர்ச்சி ஏற்படும்.
சீராகும் சென்னை
சென்னையில் தனியார் வாகனங்கள் 30 லட்சமும் அரசுத் துறை வாகனங்கள் மூவாயிரமும் இயக்கப்படுகிறது. தலைநகரில் மட்டும் இவ்வளவு என்றால் தமிழகம் முழுவதும் எவ்வளவோ! மேலும், மாநிலம் முழுவதும் பயணிக்கக் கூடிய லாரிகள், ஆம்னி பஸ்கள் என எண்ணிக்கை எகிறுகிறது. ஆனால், இவை அனைத்தும் தற்போது இயங்கவில்லை.
இதற்கும் மேலாக விஷ வாயுக்களைக் கக்கி வந்த தொழிற்சாலைகளும் மூட்டப்பட்டுள்ளது. இதனால், இயல்பை விட சுற்றுச்சூழல் நல்ல மாற்றமடைந் துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. கடந்த பிப்ரவரி இறுதியில் கணக்கிடப் பட்ட காற்றில் உள்ள மாசின் அளவு 105ஆக இருந்தது தற்போது 68 ஆகக் குறைந்திருக்கிறது. இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காற்றின் தரம் உயர்ந்துள்ளது.
இந்தியாவிலே அதிகளவில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட மாநிலம் டெல்லி. மத்திய அரசின் ஊரடங்கு அறிவிப்பால் மீண்டும் டில்லி பொழிவு பெறுவதாக ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. இங்கு முன்னர் 160ஆக இருந்த காற்று மாசின் அளவு 93ஆகக் குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது.
வாகனங்களில் நச்சு தன்மை வாய்ந்த க்ளோரோ புளோரோ கார்பன் அதிகம் இருக்கின்றன.
இது நம் நுரையீரலைப் பதம் பார்த்து விடுகிறது. மேலும், மனிதனின் தோலில் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகின்றன. கேட்கும் திறன் இழப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் உறக்க இழப்பு போன்றவை இதனால் இதுவரை ஏற்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு அறிவிப்பால் தன்னைத்தானே இயற்கை சீரமைத்துக் கொண்டதால் இதுபோன்று நோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்பதில் ஐயமில்லை.
ஒலியால் ஏற்பட்ட வலி இப்போது இல்லை
காற்று மாசை போல நம்மைப் பாதிக்கச் செய்வது ஒலி மாசு. குறிப்பிட்ட டெசிபலிற்கு மேல் சத்தத்தினை கேட்பதன் விளைவு மோசமாக இருக்கக்கூடும். ஒலி மாசினால் உளவியல் ரீதியான சிக்கல் ஏற்படலாம்; அமைதியின்மை இல்லாமல் போவதால் நிம்மதியின்மை தலைதூக்கும். அதேபோல் காதுகளில் இருக்கும் சவ்வு மற்றும் நரம்புகளில் அதிர்வு ஏற்படுவதால் தலைவலி வரலாம். முதியவர்களுக்கு சில வேளைகளில் இதய கோளாறு வரவும் ஒலி காரமாய் திகழ்கிறது. திடீரென சத்தம் ஏற்படுத்தினால் படபடப்பு ஏற்படலாம். கவனச் சிதறல், சிந்திப்பதில் இடையூறு போன்ற பிரச்சினைகள் ஒலி மாசால் ஏற்படுகிறது.
மன அழுத்தத்தால் ஏற்படும் அதிக ரத்த அழுத்தம், ரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய், குடற் புண், ஒற்றைத் தலைவலி போன்றவற்றை ஒலி மாசு அதிகப்படுத்தும். குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது, எடை குறைந்து பிறப்பதற்கும் ஒலி மாசுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வைரஸ் நோய்க் கிருமிகள், நச்சுப் பொருட்களின் தாக்கத்தை எதிர்க்கும் உடலின் எதிர்ப்புச் சக்தியை ஒலிமாசு குறைக்கிறது. ஆனால், தற்போது இதுபோன்ற எந்த பிரச்சினையும் வர வாய்ப்பில்லை என்பதே மருத்துவர்களின் கருத்து.
தற்போது இந்தியாவே வீட்டிற்குள் இருப்பதால் ஒரு நூலகத்தில் ஒலிக்கும் டெசிபல்தான் நகரில் ஒலிக்கிறது. இதனால் பறவைகள், விலங்குகள் என அனைத்திற்கும்கூட நிம்மதியான சூழல் நிலவுகிறது.
இது தொடருமா?
தற்போது ஏற்பட்டுள்ள இந்த நல்லதொரு மாற்றத்தைத் தக்க வைத்துக்கொள்ள அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம். இதற்கு மின்சார வாகனங்களே சிறந்த வழி.
இந்த உலகம் மனிதனுக்காக உருவாக்கப் பட்டது; விலங்குகளும் மரங்களும் மனிதனின் தேவைக்காகத்தான் படைக்கப்பட்டன என நினைப்பவர்கள் ஒரு ரகம். இந்த சமூகம் அனைத்து உயிர்களுக்குமானது என நினைப்பவர்கள் இன்னொரு ரகம். பெரும்பான்மை மனிதர்கள் எந்த ரகமென்று சொல்ல வேண்டியதில்லை.
ஆனால், மிருகங்களின் இடத்தை ஆக்கிரமித்து அவர்களை வெளியில் துரத்தி, அவைகள் வாழ்ந்த இடத்தின் வளத்தை அழித்த மனிதன், தற்போது வீட்டினுள் முடங்கி கிடக்கிறான். வீட்டுக் காவலில் மனிதன் இருப்பது இயற்கைக்குக் கிடைத்த ஒரு விடுதலையாகவும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது” என்கிறார் அருண்.