உலக நாகரிகங்களில் ஓர் உலா – 23

49

-முனைவர் வைகைச்செல்வன்

‘தலை’ சிறந்த ஒல்மெக் நாகரிகம்

கி.மு. 1500க்கும், கி.மு.400க்கும் இடைப்பட்ட காலப்பகுதியுடன் பொருந்திப்போகும் பண்பாடுதான் ஒல்மெக் நாகரிகம். இடை அமெரிக்க கலாச்சாரத்தின் பின்புலத்தில் தொடக்க காலத்தில் செழித்தோங்கி வளர்ந்திருந்த ஒரு நாகரிகமாகும். மெக்சிகோவில் நிலவிய, கொலம்பசுக்கு முற்பட்ட முதல் பெரிய நாகரிகமாகப் புகழ்பெற்று விளங்கியது. இந்நாகரிகத்தைச் சார்ந்த மக்கள் தென் மைய மெக்சிகோவில் உள்ள வெப்பமண்டல தாழ்நிலப் பகுதியில் வாழ்ந்துள்ளனர். இப்பகுதி இன்றைய மெக்சிகோவின் மாநிலங்களான வேராக்குரூசு, தபாசுக்கோ ஆகியவற்றில் அடங்கியுள்ளது.

கி.மு. 1600 – 1500 காலப் பகுதியில் “ஒல்மெக் பண்பாடு” வேராக்குரூசு மாநிலத்தின் தென்கிழக்கு கரைக்கு அண்மையில் உள்ள சான்லாரென்சோ தெனோச்தித்லான் பகுதியைச் சூழ்ந்த இடங்களில் உருவானது.

இடையமெரிக்காவின் முதல் நாகரிகமாக புகழ் பெற்று விளங்கிய ஒல்மெக் நாகரிகம், அதன் பின்னர் நிலவிய பல நாகரிகங்களுக்கு ஆதாரம் அமைத்துக் கொடுத்தது.

ஒல்மெக் நாகரிக மக்களின் தொடர்பில், அவர்களுடைய கலைப்படைப்புகளே மிகவும் பழக்கமான அம்சமாகத் திகழ்கின்றன. கி.மு 19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும், இடையமெரிக்க கலைப்பொருள் சந்தைகளில் வாங்கப்பட்ட பொருட்களை அடிப்படையாக வைத்தே ஒல்மெக் நாகரிகம் வரையறுக்கப்பட்டதாகவும், ஒல்மெக் கலைப்பொருட்கள், பண்டைய அமெரிக்காவின் மிகக் கவர்ச்சியான கலைப்படைப்புகளுள் அடங்குவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒல்மெக் நாகரிகத்தின் விளைநிலமாக, மெக்சிகோ வளைகுடாவை ஒட்டிய தாழ்நிலப் பகுதியைச் சேர்ந்த ஓரிடமே எனக் கருதப்படுகிறது.

ஒல்மெக் நாகரிகம் வளர்வதற்கு, நல்ல பாசன வசதியுடன் கூடிய வண்டல்மண் கொண்ட சூழலமைப்பும், ஆற்று வடிநிலம் வழங்கிய போக்குவரத்து அமைப்பும் உதவின. இந்தச் சூழல்தான் ஏனைய பண்டைய நாகரிக மையங்களான நைல், சிந்து, மஞ்சள் ஆறு, யூப்ரடீஸ், டைகிரீஸ் ஆகிய ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் சூழலுக்கு ஒப்பானதாகும். அதிக உற்பத்தித் திறன் கொண்ட இச்சூழல்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊக்குவித்து, உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் உருவாவதற்கும் வழி அமைத்துக் கொடுத்தது. இந்த உயர் வகுப்பினரின் தோற்றமே, ஒல்மெக் நாகரிகத்தின் பண்பாட்டின் அடையாளமாக விளங்குகின்ற குறியீட்டுத் தன்மையும், சிக்கல்தன்மையும் கொண்ட பகட்டான கலைப்பொருட்களின் உற்பத்திக்கு அடிப்படையாக அமைந்தது.

முதன் முதலாக ஒல்மெக் பண்பாடு ஒரு கலைப்பாணியாகவே அடையாளம் காணப்பட்டதுடன், தொடர்ந்து கலையே இப்பண்பாட்டின் முத்திரையாக விளங்குகிறது. சீனப்பச்சைக்கல், களிமண், எரிமலைப்பாறை போன்ற பல்வேறு வகையான பொருட்களில் உருவாக்கப்பட்ட ஒல்மெக் கலைப்பொருட்களுடன் வியக்கத்தக்க வகையில், இயற்கைத் தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன.

ஒல்மெக் கலாச்சார மையங்களில் ஒன்றாக சான்ஆண்ட்ரேஸ் நகரம் திகழ்கிறது. இந்நகரம் ‘லாவென்டா’ என்கிற நகரத்திலிருந்து, 5கி.மீ வடக்கில் அமைந்துள்ளது. ஒல்மெக் நகரங்களில் பலவற்றை நாம் தனிப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவை சான்லோரென்சோ, லாஸ்லிமாஸ், லாகுனேட் லாஸ் செரோஸ் மற்றும் லானோ டிஹகாரோ ஆகிய நகரங்களாகும். இவற்றில் சான்லோரென்சோ என்ற நகரம் அமெரிக்காவின் முதல் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நகரமானது ஏறக்குறைய 500 ஆண்டுகள் இருந்ததாகவும், அங்கு சுமார் 5 ஆயிரம் மக்கள் வாழ்ந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மேலும் ஒல்மெக் நாகரிகத்தில் ‘லாவென்டா’ என்கிற நகரம் மிகவும் நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் பணக்கார நகரம் என அழைக்கப்படுகிறது.

லாவென்டாவில் பிரபலமான ஒல்மெக் கல் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை நீக்ராய்டு தோற்றம் கொண்ட பெரிய தலைகளை உடையவைகளாக விளங்குகின்றன. இந்த பண்டைய மக்களின் தோற்றம் குறித்த சில எண்ணங்களுக்கு வழிவகுக்கிறது என்றும், அத்தகைய கண்டுபிடிப்புகள் ஏராளமாகவும், ஆச்சரியப்படத்தக்க வகையில் அமைந்திருப்பதாகவும், அதன் அருகில் ஒரு குவாரி கூட இல்லாமல், பளிங்கு மாளிகைகள் இருப்பது வியப்பைத் தருகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கி.மு.9ம் நூற்றாண்டில் ‘லாவென்டா’ நகரம் மிகவும் உயர்ந்த நிலையில் புகழ் பெற்று விளங்கியது. நகரில் சிக்கலான மொசைக்குகளும், புதிய நினைவுச்சின்ன சிற்பங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் காலங்களில்தான் பல புள்ளி விவரங்களும், பல ஆபரணங்களும் காணப்பட்டதாக வரலாற்றுத் தரவுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.

ஒல்மெக் நாகரிக மக்கள் ஏனைய நாடுகளுக்கும், அவர்களுடன் வாணிபம் செய்பவர்களுக்கும் ஒரு சமூக, அரசியல் கட்டமைப்பைக் கற்பித்ததுடன், அவர்களின் திறமையில் தங்களின் கலாச்சாரத்தையும் வளப்படுத்தினர். சமுதாயத்தை கட்டமைத்தல், எழுதுதல், வானியல் ஆராய்ச்சி செய்தல், கணிதம் போன்றவையெல்லாம் அம்மக்களுடைய அறிவின் ஒரு சிறிய பகுதியாகக் காணப்பட்டாலும், ஒல்மெக் நாகரிக மக்களின் தோற்றம் மாயாவும், அதன் பின்னர் அமெரிக்காவின் பிற அமெரிக்க இந்திய பழங்குடியினரும் ஒல்மெக்கிற்கு கடமைப்பட்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

ஒல்மெக் நாகரிகம் தொல்பொருள் கண்டுபிடிப்புகளின் வாயிலாக, அதன் இருப்பை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தியுள்ளனர் என்றாலும், அந்நாகரிகத்தின் தோற்றம் மற்றும் அதன் இறப்பு ரகசியங்கள் யாவும் இன்று வரை விஞ்ஞானிகளுக்குப் புலப்படவில்லை. அஸ்டெக்கின் வரலாற்று நாளேடுகளில் இருந்து “ஒல்மெக்ஸ்” என்ற பெயர் எடுக்கப்பட்டதாகவும், மாயன் மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட “ஒல்மெக்” என்ற வார்த்தையின் அர்த்தம் “ரப்பர் நாட்டில் வசிப்பவர்” என்றும் குறிப்புகளில் காணப்படுகிறது.

கி.பி 1862ம் ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ட்ரெஸ்-ஜாபோட்ஸின் குடியேற்றத்திற்கு அருகே, ஒல்மெக் நாகரிகத்தின் கல்தலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு மெக்ஸிகோ காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல் தலையினை ஆப்பிரிக்க தலை என்றும், “எத்தியோப்பின் தலைவர்” என்றும் அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். புகழ் பெற்ற இந்த கல் தலையானது கி.பி.1939-1940ல் மட்டுமே முழுமையாகத் தோண்டப்பட்டது. அது முடிந்தவுடன், கல் தலையின் உயரம் 1.8மீ மற்றும் சுற்றளவு 5.4மீ மற்றும் இந்தப் பெரிய நினைவுச் சின்னம் ஒரு துண்டு பசால்ட்டிலிருந்து செதுக்கப்பட்டுள்ளது என்றும், சிலை அமைந்துள்ள இடத்திற்கு இவ்வளவு பெரிய பாறை எவ்வாறு வழங்கப்பட்டது என்று இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்பின்னர் அது போன்ற 16 கல்தலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை 3 மீ உயரம் மற்றும் தலா 20 டன் வரை எடையுள்ளவையாகவும், இந்த தலைகள் ஒல்மெக் பழங்குடியினரின் தலைவர்களை சித்தரித்ததாகவும் பெரும்பாலான அறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும் கூட, இன்றைய நவீன ஆராய்ச்சியாளர்கள் சிலர் அத்தகைய கல்தலைகள் ஒல்மெக்குகளால் அல்ல, அவை முந்தைய நாகரிகங்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டடிருக்கலாம் எனவும் நம்புகின்றனர். உதாரணமாக, புகழ்பெற்ற அட்லாண்டியர்கள், ஒல்மெக்குகள் இந்த நாகரிகங்களின் சந்ததியினர் மற்றும் பெரிய சிற்பங்களின் “பராமரிப்பாளர்கள்” மட்டுமே என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மெக்ஸிகோவைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், “சின் கபேசாஸ்” என்ற நகரத்தைக் கண்டுபிடித்தனர். அந்நகரம் “தலை இல்லாதது” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது எனவும், பண்டைய குடியேற்றத்தில் அமைந்துள்ள பல சிதைந்த சிலைகள் இருப்பதால் இந்தப் பெயர் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட நகரத்திற்கு வழங்கப்பட்டது எனவும் தங்களது ஆராய்ச்சிகளில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒல்மெக் நாகரிக மக்கள் மற்ற மெசோ – அமெரிக்க நாகரிகங்களின் முன்னோடிகள் என்று பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது இந்தியர்களின் புனைவுகளில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒல்மெக்குகள் மத்திய அமெரிக்காவின் ஆரம்பகால கலாச் சாரங்களில் ஒன்றாகும் என்றும் துல்லியமாக அறியப்பட்டுள்ளதுடன், கலைப்பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட கலைப்பொருட்களில் இருந்து, ஒல்மெக்ஸ் கட்டுமானம், கலை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை உருவாக்கியது என்று தீர்மானிக்க முடியும். அவற்றின் பிரமீடுகள், அரண்மனைகள், கல்லறைகள், கோயில்கள், பாரோக்கள் (அரசர்கள்), நீர் வழங்கல் அமைப்பு மற்றும் கல் தலைகள் வடிவில் உள்ள பெரிய நினைவுச்சின்னங்கள் ஆகியவை இன்று வரை இருப்பது வியக்கத்தக்க நிகழ்வுகளாகும்.

(நாகரிகம் நடைபோடும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here